குறைவில்லா வாழ்வருளும் குழந்தை வேலன்!

சித்தர் போகர் மக்கள் அனைவரும் பயனுரும் வகையில் நவபாஷாணத்தால் பழிநி பாலதண்டாயுதபாணியை உருவாக்கினார்.
குறைவில்லா வாழ்வருளும் குழந்தை வேலன்!

சித்தர் போகர் மக்கள் அனைவரும் பயனுரும் வகையில் நவபாஷாணத்தால் பழிநி பாலதண்டாயுதபாணியை உருவாக்கினார். அப்படி உருவாக்குவதற்கு கொடிய விஷத்தன்மை கொண்ட பாஷாணங்களை ஒன்று திரட்டி, ஒரு குறிப்பிட்ட கலவையில், குறிப்பிட்ட நாளில் அவற்றை சேர்த்து செய்தார். முதலில் தச (பத்து) பாஷாணங்களைச் சேர்த்து ஓர் அழகான தசபாஷாணச் சிலையை உருவாக்கினார்.

அதன் வேகம் (உக்ரம்), சூட்டுத் தன்மை, எதிர்பார்த்ததைவிட கடுமையாக இருந்தது. தான் வசித்து வந்த பழநிமலை வனப் பகுதியில் இதனை நிறுவிவிட முடிவு செய்தார். ஆனால் இவ்வளவு சூட்டுத் தன்மை கொண்ட சிலையை பொது இடத்தில் வைத்தால் ஏதேனும் தவறு நேர்ந்துவிடும் என்பதால் இந்த தசபாஷாண முருகனை, வருடம் 365 நாள்களும் 15 முதல் 20 டிகிரி வெப்பமே உள்ள பழநி மலையில் மிக உயரமான, பூம்பாறை என்ற கிராமத்தை தேர்வு செய்து, அங்கு இச்சிலையை பிரதிஷ்டை செய்தார். அதன் பின்னரே, நவபாஷாண சிலையை செய்து பழநி மலையில் நிறுவியுள்ளார்.

பூம்பாறையில் குழந்தை வேலன் ஆலயம் என்ற பெயரில் உள்ள முருகன் ஆலயம், பழநி முருகன் தேவஸ்தானத்தின் நேரடி நிர்வாகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. தைப்பூசம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஒரு தம்பதி, தனக்கு வேலப்பனே மகனாகப் பிறக்க வேண்டுமென தவமிருந்தனர். அவர்களின் வேண்டுதல் பலித்து ஓர் அழகான ஆண் மகன் பிறந்தான். இதனை கொண்டாடிய அந்த தம்பதி அனைவருக்கும் சாக்லெட்டை தந்து மகிழ்ந்தனர். அன்றிரவு அவர்களின் கனவில் வந்த குழந்தை வேலன் "எல்லோருக்கும் சாக்லெட்டை தந்தாயே எனக்கு தரவேண்டுமென்று தோன்றவில்லையா?' எனக்கேட்டு மறைந்தாராம். உடனே அவர்கள் சாக்லெட்டை வாங்கி படைத்துள்ளனர். அன்று தொடங்கிய சாக்லெட் நிவேதனத்தை பக்தர்கள் இன்றும் தொடர்கின்றனர்.

இப்போது உலகளவில் பேசப்பட்டு வரும் அக்குபஞ்சர் வைத்திய சிகிச்சை முறையை போகர் தான் ஏற்படுத்திக் கொடுத்தவர் என்றும்; அதற்கு சான்றாக இந்த சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது சிலையினை கூர்ந்து கவனித்தால் சின்ன சின்ன புள்ளிகள், துவாரங்கள் இருப்பதையும் காணலாம்.

பூம்பாறை குழந்தை வேலன் ஆலயக்குருக்கள், பக்தர்கள் அனைவருக்கும் முருகனின் அபிஷேக சந்தனத்தையும், தீர்த்தத்தையும் பிரசாதமாகத் தருகிறார். சிலர் அதனை கண்ணாடி பாட்டிலில் கேட்டு வாங்கிச் செல்கிறார்கள். இந்த தீர்த்தத்தை சாப்பிட்டால் அது மாமருந்து. அதுவே ஏதேனும் ப்ளாஸ்டிக் பாட்டிலில் வாங்கிச் சென்று வீட்டில் வைத்திருந்தால், விஷத்தன்மை பெற்றுவிடும் என அறிவுறுத்தி சொல்லிய பிறகே கொடுக்கிறார்.

28.5.2018 - அன்று வைகாசி விசாகம் . அன்றைய தினம் பூம்பாறை குழந்தை வேலனை தரிசித்து அருள் பெறலாம்.

அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கொடைக்கானலில் இருந்து பூம்பாறை வழியாகச் செல்கின்றன.

தொடர்புக்கு: 94441 51068 / 94423 98231.

 - எஸ்.எஸ். சீதாராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com