வழிகாட்டியின் கைகாட்டி!

பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார். நாதமுனிகள். ஆளவந்தார், திருக்கச்சிநம்பிகள் அனந்தாழ்வான், பெரியதிருமலை நம்பிகள் இவர்கள் அனைவருக்குள்ளும் ஓர் ஒற்றுமை உண்டு
வழிகாட்டியின் கைகாட்டி!

பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார். நாதமுனிகள். ஆளவந்தார், திருக்கச்சிநம்பிகள் அனந்தாழ்வான், பெரியதிருமலை நம்பிகள் இவர்கள் அனைவருக்குள்ளும் ஓர் ஒற்றுமை உண்டு. அனைவரும் நந்தவனத்தில் பூக்கள் பறித்து பெருமாளுக்கு உயர்வான புஷ்ப கைங்கரியம் செய்தவர்கள். அனைவர் கையிலும் பெரும்பாலும் பூக்குடலை இருக்கும்.

ஆளவந்தாரின் முக்கிய சீடரான பெரியதிருமலை நம்பி திருவேங்கடமுடையானுக்குக் கைங்கரியம் செய்து தமிழக திருமால் வழிபாட்டை ஒருங்குபடுத்திய ராமானுஜருக்கு குருவாகவும் தாய்மாமனாகவும் விளங்கியவர். இவர் திருமலையில் வைகாசி, சுவாதியில் திருஅவதாரம் செய்தார். திருவேங்கடத்தில் இருந்த ஸ்ரீவைணவர்களில் இவரே முதன்மையானவராக கருதப்பட்டார். 

இவர் திருவேங்கடமுடையானுக்கு நித்ய புஷ்ப கைங்கர்யக்காரராக இருந்தார். அதோடு தினமும் திருவேங்கடமுடையானுக்காக இவர் திருமலை ஆகாச கங்கையிலிருந்து தீர்த்தம் சுமந்து கொண்டு வருவார்.

இவருக்கு இரு சகோதரிகள். மணம் செய்து வைக்க வேண்டிய வயதில் மூத்தவளான பூமிப்பிராட்டிக்கு ஸ்ரீபெரும்பூதூர் ஆதிகேசவ ஆசூரிக்கும் இளையவள் பெரியபிராட்டியை மதுரமங்கல கமலநயன பட்டருக்கும் மணம் செய்து கொடுத்தார். அவர்களுக்கு பிள்ளைப்பேறு காலதாமதமானதால் திருவேங்கடமுடையானை வேண்டிக்கொண்டதால் பூமிப்பிராட்டிக்கு ராமானுஜரும் பெரிய பிராட்டிக்கு எம்பார் என அழைக்கப்படும் கோவிந்தப்பெருமாளும் மகன்களாக திருஅவதாரம் செய்தனர். பெரிய திருமலை நம்பி ஸ்ரீ ராமானுஜருக்கு குருவாகவும் விளங்கி பெருமை பெற்றார்.
கோவிந்தப் பெருமாள் (எம்பார்) யாதவப்பிரகாசரின் சூழ்ச்சியால் உள்ளங்கை கொணர்ந்த நாயனாராக மாறி, காளஹஸ்தியில் பணி செய்து கொண்டிருந்தார். அவரை மீட்டு மீண்டும் திருமால்நெறியில் சேர்க்க உடையவர் விரும்பினார் . அதன்படி, பெரிய திருமலை நம்பி தனது சீடர்களை அழைத்துக்கொண்டு கோவிந்தப் பெருமாளை பார்க்க காளஹஸ்தி சென்று கோவிந்தப் பெருமாள் எம்பெருமானுடைய பெருமைகளை உணருமாறு செய்தார். நம்பியினுடைய திருவடிகளில் விழுந்து தொழுது தன்னைப் பெரிய திருமலை நம்பியின் திருவடிப்பணி செய்வதற்கு இணைத்துக்கொள்ள வேண்டினார். 

இருவரும் திருமலைக்கு வந்தனர். நம்பி கோவிந்தப் பெருமாளுக்கு உபநயன, பஞ்ச ஸமஸ்காரமும் செய்து வைத்து ஆழ்வார்களுடைய அருளிச் செயலைக் கற்றுக்கொடுத்தார்.

ஸ்ரீ ராமானுஜர், நம்பியிடம் ஸ்ரீராமாயணம் கற்றுக் கொள்வதற்காகத் திருப்பதிக்கு வந்து, ஒரு வருடம் முழுவதும் அங்கே இருந்து ஸ்ரீ ராமாயண காலúக்ஷபம் கேட்டார். காலக்ஷேபத்தின் முடிவில், திருமலை நம்பி எம்பெருமானாரிடம் ஏதாவது பரிசைத் தன்னிடமிருந்து பெற்றுக் கொள்ள வற்புறுத்தினார். எம்பெருமானார்,கோவிந்தப் பெருமாளைப் பரிசாகக் கேட்க, நம்பியும் உம்சொத்தை நீரே கொண்டு செல்லுமென கூறினார். இருவரும் திருமலையிலிருந்து கிளம்பி, சோளிங்கபுரம் வந்து சேர்ந்தனர். கோவிந்தனிடம் முகம் வாட்டம் குறித்து கேட்டதற்கு, "ஒன்றுமில்லை சுவாமி, பெரியவரைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவரும் என்னை நினைத்துக் கொண்டிருப்பார். ஒரு நாள்கூட அவரை விட்டு நான் பிரிந்ததேயில்லை. தாய்மாமனே குருவானது வாழ்வில் நான் பெற்ற நல்லதற்கெல்லாம் காரணம்' என்றார். "பெரிய திருமலை நம்பியுடன் இன்னும் சிறிது காலம் அங்கிருந்து விட்டு வாரும்' என்று கூறி இரண்டு பேருடன் அனுப்பினார் உடையவர். மீண்டும் திருமலைக்குப் போய்ச் சேர்ந்தார் கோவிந்தர்.

நம்பியின் வீட்டை அடைந்தபோது, "யாரது?' என்றார் பெரியவர். "குரல் தெரியவில்லையா? நமது கோவிந்தன் தான் வந்திருக்கிறான்!' என்றார் அவரது மனைவி. "கோவிந்தனா? அவன் ஏன் இங்கு வந்தான் ? அவனை அப்படியே திரும்பச்சொல்லு'' என்றார். தந்ததைத் திரும்பப் பெறுவது வைணவ தருமமல்ல. பாடங்களின் இடையே எத்தனையோ முறை இதனைச் சொல்லியிருக்கிறேன். யாராவது "விற்ற பசுவுக்குப் புல் இடுவார்களா? அவன் போய்ச் சேர்ந்த இடமே இனி அவனுக்குக் கதி. வாசலோடு அனுப்பிவிடு' என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார். அங்கிருந்தே கைகூப்பி வணங்கிவிட்டு மீண்டும் ராமானுஜரை அடைந்து சன்யாசம் பெற்றார் நம்பி. 

ராமானுஜர் ராமாயணத்தை மாமா பெரிய திருமலை நம்பியிடம் கற்க திருப்பதி சென்றபோது திருமலையின் புனிதம் கருதி ராமானுஜர் மலையின் நடைபாதையிலேயே தங்கினார். நம்பி தினமும் மதிய வேளையில் இறங்கி ராமானுஜருக்கு பாடம் சொல்லிச் செல்வார். அதனால் நம்பி திருவேங்கடமுடையானின் பிற்பகல் தரிசனத்தை காணமுடியாத குறை ஏற்பட்டது. ஒரு நாள், நம்பியின் கனவில் தோன்றிய பெருமாள், இனி, மதிய வேளை தரிசனம் செய்யலாமென வாக்களித்தார் . மறுநாள் பெரிய திருமலை நம்பி ராமானுஜருக்கு பாடம் நடத்தும்போது கண்ணெதிரே கண்ட திருப்பாதத்தையும் அங்கு உலவிய நறுமணத்தையும் வைத்து வந்திருப்பது மலையப்பனே என உணர்ந்து தொழுதனர். 

பெரியவாச்சான் பிள்ளை வியக்கும் அளவிற்கு பெரிய திருமலை நம்பி உயர்ந்ததான சம்ப்ரதாய வார்த்தைகளை உபயோகப்படுத்தி விளக்கம் சொல்லுவதில் மிகவும் நிபுணர். திருமலை தவிர வேறு எங்கும் தனிப்பெரும் சந்நிதி இவருக்கு இருப்பதாக தெரியவில்லை.

உலகம் உய்ய ஒரே வழி காட்டிய ராமானுஜருக்கு பெயரிட்டு ஞானம் நல்கி அறிவூட்டி கோவிந்த பட்டர் போன்றவர்களை துணைசேர்த்து முறைப்படுத்தியதில் ஐந்தில் ஒருபங்கு திருமலை பெரியநம்பியையேச் சாரும். பெரிய திருமலைநம்பிக்கு இவ்வருடம் மே மாதம் 27 -ஆம் தேதி வரும், சுவாதி நட்சத்திரம், இவரது அவதார திருநட்சத்திர தினமாகும். 

- இரா.இரகுநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com