தேவகோட்டை தண்டாயுதபாணி

கந்த சஷ்டி என்றால் உடனே நமக்கு நினைவிற்கு வருவது திருச்செந்தூர். திருச்செந்தூருக்கு அடுத்தபடி மிகப்பிரபலமாக கந்த சஷ்டி விழா நடைபெறும் இடம் தேவகோட்டையாகும். செட்டிநாட்டின் தலைநகராம் தேவகோட்டையில்
தேவகோட்டை தண்டாயுதபாணி

கந்த சஷ்டி என்றால் உடனே நமக்கு நினைவிற்கு வருவது திருச்செந்தூர். திருச்செந்தூருக்கு அடுத்தபடி மிகப்பிரபலமாக கந்த சஷ்டி விழா நடைபெறும் இடம் தேவகோட்டையாகும். செட்டிநாட்டின் தலைநகராம் தேவகோட்டையில் அருள்பொழியும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நகரத்தார்களால் பரிபாலனம் செய்யப்பெற்று வருகின்றது. இத்திருக்கோயிலில் அருளாட்சி செய்து வரும் தண்டாயுதபாணி சுவாமி, பழநிமலைக் கோயிலில் உள்ளது போன்ற மூர்த்தியாகும். கையில் தண்டத்துடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். தலையில் உச்சிக்குடுமி இருப்பது சிறப்பாகும். திருஆமாத்தூர் வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் இம்முருகன் மீது பிள்ளை தமிழ் பாடியுள்ளார்கள்.

இவ்வாலயத்தில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடைபெறுகின்றது. உற்சவ நாள்களில் காலை, மாலை இரு வேளைகளிலும் சிறப்பு அபிஷேகம், லட்சார்ச்சனை, குமாரசம்பவம் பாராயணம் ஆகியவை சிறப்பாக நடைபெறும். இரவு விதவிதமான வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெறும். கந்த சஷ்டித் திருநாளில் ஆயிரக்கணக்கான மக்கள் விரதமிருப்பர். மாலை சுவாமி வெள்ளி ரதத்தில் திருவீதி உலா வருவார். ஆலயத்தின் முன் உள்ள கந்தவேள் சதுக்கத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடியிருப்பர். முன்னதாக சிங்கமுகன், தாரகன் வதை நடைபெற்று, பின் சூரபதுமன் முருகப்பெருமான் முன்னால் வருவான். சிவாச்சாரியார் தண்டபாணி சந்நிதியில் இருந்து வேலெடுத்துச்சென்று அன்னை மீனாட்சி திருக்கரத்தில் வைத்து, தீபாரதனை செய்து, அன்னையின் அருள்பெற்று வேலை வாங்கிக்கொண்டு வந்து பாவனையாக சூரனை வதம் செய்வார். சூரன் வேலும், மயிலுமாக மாறி இறைவனுக்கு வாகனமாகவும், கொடியாகவும் விளங்குவான். பின்னர் தீபாராதனை நடைபெறும்.  மறுநாள்,  சம்ஹாரம் செய்த வேல் தீர்த்தவாரி கண்ட பிறகு தெய்வயானை திருமணமும், அதற்கு மறுநாள் வள்ளி திருமணமும், சண்முகார்ச்சனை, புஷ்ப பல்லக்கில் திருவீதி உலாவும் நடைபெற்று திருவிழா இனிது நிறைவேறும்.

73 ஆண்டுகளாக உலகின் தலைசிறந்த கலைஞர்களைக் கொண்டு இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் வளர்க்கும் சஷ்டி விழா நடைபெறுகின்றது. இவ்வாண்டு விழா, நவம்பர் 7  முதல் 15 வரை நடைபெறுகின்றது. நவம்பர் 13 - சூரசம்ஹாரம்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com