குரு பெயர்ச்சி பலன்கள்!

அறுபது தமிழ் வருடங்களில் முப்பத்திரண்டாவதான ஸ்ரீ விளம்பி வருடம், தட்சிணாயன புண்ணிய காலம், வர்ஷ ருது, புரட்டாசி மாதம் 25- ஆம் தேதி (11.10.2018) சுக்லபட்சம் (வளர்பிறை) திருதியை திதி,
குரு பெயர்ச்சி பலன்கள்!

 மறைமிகு கலை நூல் வல்லோன், வானவர்க்கரசன், மந்திரி
 நறைசொரி கற்பகம் பொன்நாட்டினுக் கதிபதியாகி; !
 நிறை தனம் சிவிகை மண்ணில் நீடு போகத்தை நல்கும்,
 இறைவன் குரு வியாழன் இரு மலர்ப் பாதம் போற்றி!!
 அறுபது தமிழ் வருடங்களில் முப்பத்திரண்டாவதான ஸ்ரீ விளம்பி வருடம், தட்சிணாயன புண்ணிய காலம், வர்ஷ ருது, புரட்டாசி மாதம் 25- ஆம் தேதி (11.10.2018) சுக்லபட்சம் (வளர்பிறை) திருதியை திதி, வியாழக்கிழமை, விசாக நட்சத்திரம், துலாம் ராசி, விஷ்கம்ப நாம யோகம், தைதுல கரணம், அமிர்த / சித்த யோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் சூரிய உதயாதி 34 நாழிகைக்குள் இரவு 19.20 (ஐஎஸ்டி) மணிக்கு மேஷ லக்னத்தில் துலாம் நவாம்சத்தில் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆகிறார்.
 இந்த ஸ்ரீவிளம்பி வருடம் பங்குனி மாதம் 15 -ஆம் தேதி (29.03.2019) அன்று இரவு 19.48 (ஐஎஸ்டி) மணிக்கு குருபகவான் அதிசார கதியில் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
 இந்த விளம்பி வருடம் பங்குனி மாதம் 28 -ஆம் தேதி (11.04.2019) அன்று காலை 07.59 (ஐஎஸ்டி ) மணிக்கு குருபகவான் தனுசு ராசியில் வக்கிரமடைகிறார்.
 ஸ்ரீ விகாரி வருடம் சித்திரை மாதம் 10- ஆம் தேதி(23.04.2019) விடியற்காலை 01.30 (ஐஎஸ்டி) மணிக்கு அதிவக்கிர கதியில் குருபகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசியை அடைகிறார்.
 ஸ்ரீ விகாரி வருடம் ஆடி மாதம் 27 -ஆம் தேதி (12.08.2019) அன்று விடியற்காலை 04.43 (ஐஎஸ்டி) மணிக்கு குருபகவான் வக்கிரமடைகிறார்.
 ஸ்ரீ விகாரி வருடம் ஐப்பசி மாதம் 19 -ஆம் தேதி (05.11.2019) விடியற்காலை 05.16 (ஐஎஸ்டி) மணிக்கு குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
 பொதுவாக, ஒவ்வொரு கிரகத்திற்கும் ஆறுவிதமான பலம் (ஷட்பலம்) சொல்லப்பட்டிருக்கிறது. இதில் முக்கியமானது நைசர்க்கிய பலம். அதாவது, இயற்கை பலம் அல்லது இயற்கைத் தன்மை என்பதாகும். அந்த அடிப்படையில் குரு, சுக்கிரன், புதன், சந்திரன் (வளர்பிறை) பகவான்கள் இயற்கை சுபர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். இந்த இயற்கை சுபர்களில் குருபகவானை முழுச்சுபர் என்று அழைக்கிறார்கள். பொதுவாக, கிரகங்கள் தாங்கள் ஏற்றுக்கொண்ட தன்மைகளின் படியும் அவர்கள் இருக்கும் இடத்திற்குத் தகுந்தபடியும் பலன்களைக் கொடுப்பார்கள். குருபகவான் சுப ஆதிபத்தியம் பெற்ற நல்ல இடங்களில் அமர்ந்திருந்தால் சிறப்பான பலன்களையும்; லக்னத்திற்கு சுப ஆதிபத்தியம் பெறாவிட்டாலும் ஸ்தான அடிப்படையில் நல்ல இடங்களில் அமர்ந்திருந்தால் நற்பலன்களையும் ஸ்தான அடிப்படையிலும் நல்ல இடத்தில் அமராமல் இருந்தாலும் சுபாவத்தில் முழுச்சுபராக இருப்பதால் கஷ்டங்களைக் குறைத்து வழங்குவார் என்று கூறவேண்டும்.
 இந்த குருபெயர்ச்சி காலத்தில் மேஷ லக்னத்திற்கு அதிபதியான செவ்வாய்பகவான் தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். குருபகவானும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டையும்; தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டையும்; சுக ஸ்தானமான நான்காம் வீட்டையும் அந்த வீட்டில் அமர்ந்திருக்கும் ராகுபகவானையும் பார்வை செய்கிறார். அதோடு இந்த குருபெயர்ச்சி குருபகவானுக்கு உகந்த வியாழக்கிழமையன்றும் அவருக்குரிய விசாக நட்சத்திரத்திலும் நடக்கிறது. மேலும் குருபகவான் சுயசாரத்தில் சஞ்சரிப்பதும் மேன்மையாகும். குருபகவான் தான் பகை பெறும் ராசியான துலாம் ராசியிலிருந்து தன் நட்பு வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
 இந்தப் பெயர்ச்சி காலத்தில் நாட்டில் சுபிட்சம் ஏற்படும். பொருளாதாரத்தில் அபிவிருத்தி அடைந்து காணப்படும். செவ்வாய்பகவானின் காரகத்துவங்களான உணவு, நெருப்பு, ராணுவம், காவல்துறை, ரியல் எஸ்டேட், விவசாயம், வெளிநாட்டு வர்த்தகம் போன்ற துறைகள் வளர்ச்சி அடையும். அந்நிய செலாவணி கையிருப்பு கணிசமாக உயரும்.

குரு பலம் என்றால் என்ன?
 குருபகவான் ராசியிலிருந்து 2,5,7,9,11- ஆம் வீடுகளில் சஞ்சரிக்கும் காலத்தில் குருபலம் உண்டாகிறது என்று கூறுகிறோம். பொதுவாக, குருபகவான் பலம் பெற்று கேந்திர திரிகோண ராசிகளில் அமர்ந்தால் மூன்று லட்சம் தோஷங்களைப் போக்குவார் என்று நம்பப் படுகிறது. பகவத் கீதையில் "புரோகிதர்களில் நான் குருபகவான்' என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்.
 இந்த விருச்சிக ராசி சஞ்சாரத்தினால் துலாம், கடகம், ரிஷபம், மீனம், மகரம் ராசிகள் சிறப்பான நற்பலன்களைப் பெறப்போகின்றன. குருபகவான் 5,7,9, -ஆம் பார்வைகளில் மீனம், ரிஷபம், கடக ராசிகளைப் பார்வை செய்கிறார். பொதுவாக, குருபகவான் சரம், ஸ்திரம், உபயம் ஆகிய மூன்று ராசிகளையும் பார்வை செய்வார். அதனால் அவரை முழுச்சுபர் என்று கூறுவது சாலச்சிறந்தது அல்லவா?
 இந்த குரு பெயர்ச்சி காலத்தில் கடகம், ரிஷபம், மீன ராசிகள் சற்று கூடுதலான பலன்களைப் பெறப் போகின்றன. மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்ப ராசிகள் மிதமான பலன்களைப் பெறுகின்றன.
 குருபகவான் வக்கிரம் பெறும் 12.04.2019 முதல் 12.08.2019 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ஏழு ராசிகளும் நன்மை அடையும். அதோடு 29.03.2019 முதல் 23.04.2019 வரை குருபகவான் 26 நாள்கள் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார், இந்த 26 நாள்கள் விருச்சிகம், கும்பம், மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய ஐந்து ராசிகளும் சிறப்பான நற்பலன்களைப் பெறுவார்கள். திருமணம் செய்யும் காலங்களில் வரன், வது இருவரில் ஒருவருக்கு குருபலம் ஏற்பட்டால் திருமணம் செய்யலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com