சுன்னத்தின் உன்னதம்

இறைவன் ஒருவன் அவனின் திருத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் என்று ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய  கடமைகள் ஈமான், தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய  ஐந்தும்.

இறைவன் ஒருவன் அவனின் திருத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் என்று ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய கடமைகள் ஈமான், தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய  ஐந்தும். அவைகளுக்கு பர்லு என்று பெயர்.
உலக மக்கள் உண்மையாய் உயரிய நெறியில் துயரின்றி தூய்மையாய் வாய்மையை பேணி வாழ வழி காட்டினார்கள் பழியறு பாச நபி (ஸல்) அவர்கள். அவர்கள் செய்ததுபோல் ஒவ்வொரு செயலையும் செவ்வனே செய்வது சுன்னத். சுன்னத்தைப் பற்றி பிடித்து உன்னதமாய் வாழ உரைக்கிறது உயர் குர்ஆனின்  3-31 -ஆவது வசனம். "" நபியே, நீங்கள் சொல்லுங்கள். நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான். இன்னும் அல்லாஹ் உங்களை மன்னிப்பான்''.
சுன்னத்தை எண்ண சுத்தியோடு செய்தால் அல்லாஹ்வின் நேசத்தைப் பெறுவதோடு, அறிந்தோ, அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ, மறந்தோ செய்யும் தவறுகளுக்கும் அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்கும். அதனால் நபி தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறைகளைக் கவனித்து அதன்படி ஒழுகினர். ஒல்லும் வகையெல்லாம் ஓவாது செயல்பட்டனர்; செம்மை பெற்றனர். 
ஒருமுறை பெருமானார் (ஸல்) அவர்கள் குழம்பில் இருந்த சுரைக்காய்த் துண்டுகளைத் தேடி எடுத்து சாப்பிட்டதைப் பார்த்ததும் அன்றிலிருந்து நபி தோழர்கள் சுரைக்காயை விரும்பி சாப்பிட்டதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பது புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ ஆகிய நூற்களில் காணப்படுகிறது. சுரைக்காய் நீர்த் தாவரம். பாலைவனப் பகுதியில் நீர்த்தாவரங்கள் உடலுக்கு உகந்தது. நபி தோழர்கள் நபி வழி நடந்து சுன்னத்தைக் கடைப்பிடித்ததால் எண்ணற்ற பயன்களையும் பெற்றனர்.
வேக வைக்காத பூண்டு உண்பதை உத்தம நபி (ஸல்) அவர்கள் விரும்பவில்லை என்பதையறிந்ததும் நாங்களும் பச்சைப் பூண்டு தின்பதைத் திண்ணமாய் விட்டு விட்டோம் என்று எம்பெருமானார் அவர்களின் அருமைத் தோழர் அலி (ரலி) அவர்கள் அறிவிப்பது அபூதாவூத், திர்மிதீ நூல்களில் காணப்படுகிறது. பச்சைப் பூண்டின் வாடை பலமணி நேரம் வாயில் வீசும். பேசும் பொழுது அவ்வாடை பிறரை முகம் கோண செய்யும். பிறரை வெறுப்புக்காளாக்காது காப்பாற்றவே பச்சைப் பூண்டு உண்பதை உதறினார்கள் உத்தம நபி (ஸல்) அவர்கள்.
தைமூர் பரம்பரை தார்த்தாரிய சமூக தலைவன் தைமூர் சமர்கந்த் ஆட்சியைக் கைப்பற்றும் முதல் முயற்சியில் தோல்வியுற்று ஒரு கிழவியின் குடிசையில் ஒளிந்தான். அந்த குடிசையில் வாழ்ந்த கிழவி தைமூருக்கு ஒரு தட்டில் கூழ் கொடுத்தாள். பசியில் பரிதவித்த தைமூர் தடாலடியாய் தட்டின் நடுவில் கையை வைத்தான், சூடு தாங்காமல் அலறி கையை உதறினான். பதறாமல் பாட்டி சொன்னாள், ""தட்டின் நடுவில் கை வைத்தால் சுடாமல் சுகமாகவா இருக்கும்? ஓரத்திலிருந்து சாப்பிடு''. 
கூழைக் குடித்தபின் தைமூர் அமைதியாய் அமர்ந்து அல்லாஹ்விற்கு நன்றி நவின்று ஆற அமர யோசித்தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பாட்டிற்குள் விரல் முழுவதையும் நுழைக்கமாட்டார்கள் என்ற நினைவு வந்தது. பசியில் பத்தும் பறந்து போகும் என்றபடி எத்தனை சுன்னத்துகளைப் பின்பற்றாமல் விட்டுவிட்டோம் என்ற எண்ணமும் எழுந்தது. 
""அல்லாஹ்வைப் புகழ்ந்து துதித்து உணவு உண்ண வேண்டும்'' அறிவிப்பவர்- ஹுதைபா (ரலி) நூல்- முஸ்லிம், அபூதாவூத்.
""உணவின் நடுவில் அபிவிருத்தி இறங்குகிறது. எனவே, உணவின் இரு ஓரங்களில் கீழ்ப்பகுதியிலிருந்து உண்ணுங்கள், அதன் நடுவிலிருந்து உண்ணாதீர்கள்'' அறிவிப்பவர்- இப்னு அப்பாஸ் (ரலி) நூல்- அபூதாவூத், நஸஈ.
இந்த நபி மொழிகள் சாப்பாட்டிற்கு மட்டுமல்ல சகல காரியங்களுக்கும் பொருந்தும். சண்டித்தனமாக சட்டென்று அரண்மனைக்குள் அடாவடியாக புகுந்து ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்பதை உணர்ந்த தைமூர் கைக்கருகில் உள்ள கீழ்ப்புறத்திலிருந்து சாப்பிட துவங்குவது போல எந்த ஓரத்திலிருந்து எந்த பகுதியைத் தாக்கத் துவங்கினால் எளிதாக வெற்றி கிட்டும் என்று திட்டமிட்டு சமர்கந்தைப் பிடித்து ஆட்சியில் அமர்ந்து, பின்னர் தோல்வி காணாது 35 ஆண்டுகளில் 27 நாடுகளை வென்றான்.
பாரசீக நாட்டின் பேரரசரான தைமூர் ஒரு பொழுதும் தன்னைப் பேரரசர் என்று சொன்னதே இல்லை. பெருமானார் நபி (ஸல்) அவர்கள் வழியில் அல்லாஹ்வின் அடிமையாகிய தைமூர் கூறுவதாக அனைத்து ஆவணங்களிலும் கட்டளைகளிலும் கடிதங்களிலும் எழுதினான் தைமூர். 
நாமூம் நபி வழியை நன்கறிந்து சுன்னத்தின் உன்னதத்தை உணர்ந்து நடந்து உயர்வு பெறுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com