தேவையுள்ளவர்களுக்கு உதவி செய்வோம்!

இயேசு நல்ல சமாரியன் உவமையைப் பல்வேறு காரணத்திற்காக கூறினார். இயேசுவைச் சுற்றியிருந்த ஜனங்களின் மத்தியிலே அநேகர் அவரது வார்த்தையை ஆவலோடு கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

இயேசு நல்ல சமாரியன் உவமையைப் பல்வேறு காரணத்திற்காக கூறினார். இயேசுவைச் சுற்றியிருந்த ஜனங்களின் மத்தியிலே அநேகர் அவரது வார்த்தையை ஆவலோடு கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு நியாய சாஸ்திரி அங்கு வருகிறார். நியாய சாஸ்திரிகள் என்பவர்கள், நியாய பிரமாணத்தை நன்கு கற்று, அதை கைக்கொள்ளுகிறவர்களுமாய் இருந்தார்கள். இவர்கள் நியாயப்பிரமாணத்திலே எழும்புகிற கேள்விக்கெல்லாம் சரியான விளக்கம் தருவார்கள். இப்படிப்பட்டவர்களில் ஒருவர் எழுந்து இயேசுவை சோதிப்பதற்காக, ""போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும்'' என்று கேட்டான். அதற்கு இயேசு: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார். அவன் பிரதியுத்திரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச் சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்  (லூக்.10:25-27). உடனே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து அந்த நியாயசாஸ்திரியைப் பார்த்துச் சொல்லுகிறார்:  நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்  (லூக்.10:28). அத்தோடு விடவில்லை மேலும் அவன் தன்னை நீதிமானாக காட்டிக் கொள்ள மறுபடியும் ஒரு கேள்வி கேட்கிறான்:  ""எனக்குப் பிறன் யார்? என்றான். அப்பொழுது இயேசு, இந்த உவமையைச் சொன்னார். 
ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான். அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.
அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப் போனான். அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்திற்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப் போனான்.
பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி, கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சை ரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின் மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய் அவனைப் பராமரித்தான். மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால் நான் திரும்பி வரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான் (லூக்.10:30-37). 
இப்படியிருக்க, கள்ளர் கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்?  உனக்கு எப்படித்தோன்றுகிறது என்று இயேசு அவனிடம் கேட்டார்.  அதற்கு அவன்: அவனுக்கு இரக்கஞ்செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றார்.
மேலும் இந்த உவமையிலே ஆண்டவர் கற்றுக் கொடுக்கிற போதனை என்னவென்றால் அன்பு. உண்மையான அன்பு என்றால் என்ன? உண்மையான அன்பைக் குறித்து கேள்வி கேட்ட நியாய சாஸ்திரிக்கு ஆண்டவர் சரியான பதில் கொடுக்கிறார், சரியான விதத்திலே அந்த அன்பை விளக்குகிறார். தேவையுள்ளவர்களுக்கு இரக்கம் பாராட்டி உதவி செய்வதே அன்பு. அனைவரிடத்திலும் அன்புசெலுத்துவதே சிறந்த இறைபக்தியாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com