வையங்காக்கும் வராகன்!

உலகினைக் காக்கும் பொருட்டும், தர்மத்தை நிலை நாட்டவும் திருமால் எடுத்த அவதாரங்கள் பலவாயினும், சிறப்பித்துச் சொல்லப்படுபவை தசாவதாரங்கள் பத்தும் ஆகும்.
வையங்காக்கும் வராகன்!

உலகினைக் காக்கும் பொருட்டும், தர்மத்தை நிலை நாட்டவும் திருமால் எடுத்த அவதாரங்கள் பலவாயினும், சிறப்பித்துச் சொல்லப்படுபவை தசாவதாரங்கள் பத்தும் ஆகும். வடமொழி இலக்கியங்களில் மட்டுமல்லாமல் சங்க இலக்கியமான பரிபாடலிலும் தசாவதாரங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுள், வராக அவதாரம் தனித்தன்மை வாய்ந்தது. ஆழ்வார்கள் அனைவராலும், வேதாந்த தேசிகராலும், ஸ்ரீ பராசரபட்டராலும் உயர்வாகப் போற்றி துதிக்கப்பட்டுள்ளது. தனது திவ்யப் பிரபந்த பாசுரங்களில், பொய்கை யாழ்வார், த்ரிவிக்ரம அவதாரத்தில் ""நீ உலகை அளக்கும்போது பூவுலகமானது உன்னுடைய திருவடியளவு ஒத்திருந்தது. ஆனால் அதே பூவுலகம் நீ வராகப் பெருமானாய் வந்தபோது உன் இரண்டு கோரை பற்களுக்கிடையில் சிக்குமளவிற்கு சிறியதாய் அமைந்திருந்தது. என்னே உன் திருமேனி! என்னே உன் பெருமை'' என்று போற்றிப்பாடியுள்ளார். நாம் வாழும் இந்த பூமி வராகப்பெருமானால் இரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து மீட்டு வரப்பட்டதால் இந்த காலப்பகுதியை "சுவேத வராக கல்பம்' என்று கூறுவார்கள். உலகில் எந்த பகுதிக்கும் இது பொருந்தும். பூஜைகளை முன்னெடுத்து செய்யும் போது "ஸ்வேத வராக கல்பே' என்று தான் சங்கல்பம் செய்து கொள்ளுவது நடைமுறை.

வராகப்பெருமானுக்கு நாடெங்கும் ஸ்ரீ முஷ்ணம் உட்பட பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன. வராஹ வழிபாடு தொன்மையானது. அவ்வரிசையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி- திண்டிவனம் வழியில் தெள்ளாரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது கொடியாலம் கிராமம். இங்குள்ளது ஸ்ரீ அம்புஜவல்லி தாயார் சமேத ஸ்ரீ ஆதி பூவராகர் கோயில். விக்ரமாதித்ய சோழன் காலத்துக் கல்வெட்டுக் குறிப்புகளின்படி சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பழைமையான ஆலயம் எனத் தெரியவருகின்றது.

சோமுகாசூரன் என்னும் அரக்கன் வேத நூலினை மறை விடமான அதல, சுதல, பாதாளத்தில் வைத்துவிட்டான். தேவர்கள், ரிஷிகள் மும்மூர்த்திகளிடம் முறையிட்டனர். அதற்கு இசைந்த திருமால் தனது வராக அவதாரத்தின் போது பூமியை மீட்கும் தருணத்தில் சோமுகாசூரனை வதம் செய்து வேதத்தையும் மீட்டுத்தந்தார் என்ற ஒரு வரலாறு, இத்தலத்தோடு சம்பந்தப்படுத்தி கூறப்படுகின்றது.

சிறிய அழகிய ஆலயம். நுழைவுவாயிலில் தீபஸ்தம்பம். கருவறையில் எம்பெருமான் வாராக மூர்த்தியாய் அபயவரத ஹஸ்தத்துடன் சங்குசக்ரதாரியாய், இடது கை பூமிப்பிராட்டியை அணைத்த கோலத்தில் (இத்தலத்தில் பூமி பிராட்டியே திருமகளாக சேவை சாதிப்பதாக ஐதீகம்) வலது காலை கீழே தொங்கவிட்டுக்கொண்டு அருளும் அற்புதக் கோலம். பூமி தேவியின் ஒரு விழி எம்பெருமானை நோக்கியும், மறு விழி நம்மை நோக்கியும் நமது குறைகளை எம்பெருமானிடத்தில் பரிந்துரைக்கும் பாணியில் உள்ளது சிறப்பு. அம்புஜவல்லித் தாயார் அதிசௌந்தர்ய ரூபத்துடன் தனி சந்நிதி கொண்டுள்ளாள். காஞ்சிப் பேரருளாளனின் அபிமான ஸ்தலமாக உற்சவர் வரதராஜரையும், தாமரை அல்லி மலர்களை கைகளில் இடம் மாறி வைத்திருக்கும் ஸ்ரீதேவி, பூதேவி மார்களையும் இங்கு தரிசிக்கலாம். சுவாமிதேசிகனின் உற்சவ திருமேனி வழிபடப்படுகின்றது. பெரிய திருவடிக்குப்பதில், சிறிய திருவடியே (ஆஞ்சநேய மூர்த்தி) அஞ்சலி ஹஸ்தத்தோடு எம்பெருமானின் சந்நிதியை நோக்கியவாறு காணப்படுகின்றார்.

இது ஒரு சிறந்த தோஷ பரிகார நிவர்த்தி தலமாகும். பன்றி, பாம்பின் மீது வாகனங்கள் ஏற்றிவிட்டால் ஏற்படும் தோஷம், வீடு, மனை வாங்கி விற்பதில் ஏற்பட்ட சட்ட சிக்கல்கள், எதிரிகள் தொல்லை நீங்க வேண்டியும், மற்றும் திருமணத் தடங்கல்கள் நீங்கவும் இவ்வாலயத்திற்கு வந்து வராகமூர்த்திக்கு திருமஞ்சனம் செய்வித்து வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கின்றது என்ற நம்பிக்கையில் சேவார்த்திகள் வருகின்றனர்.

இவ்வாலயத்தில் பிரதிமாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்றும், ஆண்டு தோறும் வராக ஜயந்தியன்றும், புரட்டாசி சனிக்கிழமைகளிலும் நவராத்திரியில் சரஸ்வதி பூஜையன்றும் பெருமாள், தாயார் சிறப்பு திருமஞ்சன வழிபாடும், சாத்து முறையும், அன்னதானமும் நடைபெறுகின்றது. ஸ்ரீ முஷ்ணம் கோயில் போலவே கோரைக்கிழங்கு மாவு பிரசாதமாக அளிக்கப்படுகின்றது.

இவ்வாண்டு, அக்டோபர் 13 -ஆம் தேதி, கடைசி புரட்டாசி, சனிக்கிழமை தினத்தன்றும், அக்டோபர் 18 - சரஸ்வதி பூஜையன்றும், அக்டோபர் 23 - உத்திரட்டாதி நட்சத்திரத்தன்றும், மேற்படி வைபவங்கள் நடைபெற உள்ளதாக ஆலய அர்ச்சகர் தெரிவிக்கின்றார்.  

தொடர்புக்கு: 84282 11490 / 99769 49938.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com