பொருநை போற்றுதும்! 12 - டாக்டர் சுதா சேஷய்யன்

பொருநைக் கரையில், அடுத்தடுத்து அமைந்துள்ள இரண்டு கிராமங்கள், வீரவநல்லூர் மற்றும் ஹரிகேசநல்லூர்.
பொருநை போற்றுதும்! 12 - டாக்டர் சுதா சேஷய்யன்

பொருநைக் கரையில், அடுத்தடுத்து அமைந்துள்ள இரண்டு கிராமங்கள், வீரவநல்லூர் மற்றும் ஹரிகேசநல்லூர். தென்னிந்திய இசை வரலாற்றில், பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ள பெயர், ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர். ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு அருகிலுள்ள புனல்வேலியில் 15.11.1877 -அன்று பிறந்த முத்தையா, ஆறு வயதிலேயே தந்தையை இழந்தார். தாய் மாமனான மகாமகோபாத்யாய லட்சுமண ஸþரி அவர்களால் ஹரிகேசநல்லூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு வளர்க்கப்பட்டார். அன்று தொடங்கி, உலக இசை வரைபடத்தில் ஹரிகேசநல்லூருக்குச் சிறப்பிடம் கிட்டியது. 1886 வாக்கில், வேத சிûக்ஷக்காக, முத்தையா திருவையாற்றுக்கு அனுப்பப்பட்டார். சாத்திரத்தோடு சங்கீதமும் ஈர்க்க, தியாகராஜ சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்த சாம்பசிவ ஐயரிடம் இசை பயின்று ஹரிகேசநல்லூர் திரும்பினார். 1897 -ஆம் ஆண்டு, அப்போதைய திருவிதாங்கூர் அரசர், ஸ்ரீ மூலம் திருநாள் மகாராஜா முன்பு கச்சேரி செய்ய, முத்தையாவின் இசையில் சொக்கிப்போன மகாராஜா, உடனேயே இவரை தமது ஆஸ்தான வித்வானாக்கினார். திருவனந்தபுரம், மைசூரு, சென்னை என்று பற்பல ஊர்களில் இந்த இசைக் குயிலின் பயணம் தொடர்ந்தது.
 காயக சிகாமணி, சங்கீத கலாநிதி போன்ற பெருமைக்குரிய விருதுகளும் பட்டங்களும் முத்தையாவை நாடி பெருமை சேர்த்துக் கொண்டன. சங்கீத கல்ப த்ருமம் என்னும் அற்புதமான இசை நூலுக்காகக் கேரளப் பல்கலைக்கழகம் இவருக்கு "டாக்டரேட்' வழங்கியது; இதனால், டாக்டரேட் பெற்ற முதல் இசைக் கலைஞர் என்னும் பெருமையும் இவரை வந்தடைந்தது. அப்பழுக்கற்ற இசைக் கலைஞர், புதுமைமிக்க ஹரிகதை வித்தகர் ஆகியவற்றோடு, புதிய புதிய வகை உருப்படிகளை இயற்றிய உயர்தர வாக்கேயக்காரர், புதிய ராகங்களை அறிமுகப்படுத்திய பேரறிஞர், கோட்டு வாத்தியம்-மிருதங்கம் போன்ற கருவிகளையும் இசைக்கத் தெரிந்த மேதை, சங்கீத லக்ஷண லக்ஷிய ஆய்வாளர், வாக்கு வன்மைமிக்க காவியகர்த்தா என்று முகங்கள் பல, இவரிடம் மிளிர்ந்தன. ஜரிகை ஜிப்பா-ஜரிகைக் கரை வேட்டி, நெற்றியில் எடுப்பாகத் திகழும் ஜவ்வாதுப் பொட்டு, வசீகரிக்கும் அத்தர் வாசம், மிடுக்கான தோற்றம் என்று வலம் வந்த முத்தையா பாகவதர், அரசரைப் போல் வாழ்ந்தார். அரசப் பெருங்குணமும் இவரிடம் காணப்பட்டது. இவரைத் தேடிப் போனவர்கள் வெறுங்கையோடு திரும்பியதில்லை என்பது மாத்திரமில்லை, சக வித்வான்கள் பலருக்கும் ராஜமரியாதைகளைப் பெற்றும் தந்தார். சமஸ்தானாதிபதிகளும் ஜமீன்தார்களும் இவரை கெüரவிக்கப் போட்டிபோட்டனர். மைசூரு மகாராஜா கிருஷ்ணராஜ உடையார், தம்முடைய ஊருக்கு வரவழைத்து அங்கேயே தங்கச் செய்தார். தேவி பக்தரான முத்தையா, சாமுண்டீஸ்வரி மீது அஷ்டோத்தரக் கீர்த்தனைகளை இயற்றி அழகு சேர்த்தார். விஜயசரஸ்வதி, கர்ணரஞ்சனி, புதமனோஹரி, குஹரஞ்சனி, சுமனப்ரியா, கோகிலபாஷினி, ஹம்ச தீபகம், வலஜி, கெüடமல்ஹார், நிரோஷ்டா, சாரங்கமல்ஹார், ஹம்ஸôநந்தி, விஜயநாகரி, ஊர்மிகா போன்ற மேன்மைமிக்க ராகங்கள் பல, இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவை; இன்றளவும் கர்நாடக இசைக்கும் ஹிந்துஸ்தானி இசைக்கும் இவை எழில் கூட்டுகின்றன. இளமையிலேயே தமிழின்மீதும் சமஸ்கிருதத்தின்மீதும் தீராக் காதல் கொண்டிருந்த முத்தையா, தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் 400 க்கும் மேற்பட்ட இசை உருப்படிகளை யாத்துக் கொடுத்துள்ளார்.
 இளமையில் சில காலம், குரல் சற்று சங்கடம் கொடுத்தது. அப்போது, ஹரிகதையைப் பிரதானமாக மேற்கொண்டார். ஹரிகதை வடிவில் பண்டைய புராணக் கதைகளைக் கூறும்போது, ஆங்காங்கே இசைப் பாடல்களைப் பாடி, இக்கலைக்கே புதிய உத்வேகத்தைக் கொடுத்தார். கதையின் போக்குக்கேற்பப் பாடல்கள் இல்லாதபோது, தாமே புதிய பாடல்களை இயற்றிச் சேர்த்தார். "வள்ளி நாயக நீவே' (ஷண்முகப்ரியா), "நீவே ஈடு பராகு சேஸிதே' (கரகரப்ரியா), "தெலியகா நே சேஸின துடுகெல்ல' (ஹுசேனி) போன்ற பிரபல பாடல்கள், இவ்வாறு ஹரிகதைக்காக இயற்றப்பட்டவையே ஆகும். வள்ளி பரிணயம், சதி சுலோசனா, தியாகராஜ சரிதம் ஆகிய தலைப்புகளிலான இவருடைய ஹரிகதைகள் பெரும் புகழ் பெற்றன. ஏழு மொழிகள் தெரிந்த இவர், தம்முடைய ஹரிகதைகளில் மராட்டியப் பாடல்களையும் பாடுவதுண்டு. நாதபிரம்மமான தியாகராஜரின் வாழ்க்கை வரலாற்றை, ஏழு காண்டங்கள் கொண்ட வடமொழிக் காவியமாக, "தியாகராஜ விஜயம்' என்னும் பெயரில் யாத்தார்.
 சங்கீத மும்மூர்த்திகளுக்குப் பின் வந்த வாக்கேயக்காரர்களில், மிக அதிகமான இசை உருப்படிகளை இயற்றியவர் என்னும் பெருமைக்குரிய முத்தையா பாகவதர், திரைப்படத் துறையிலும் சிறிது செயல்பட்டார்.
 தென்னிந்தியத் திரை வரலாற்றில், எஸ். செüந்தரராஜ ஐயங்காரின் "தமிழ்நாடு டாக்கீஸ்' முக்கிய இடம் வகித்தது. ராமனின் மகன்களான லவன் - குசன் கதையைத் திரைப்படமாக எடுக்கும் ஆசை செüந்தரராஜ ஐயங்காருக்கு வந்தபோது, முத்தையா பாகவதரையே அப்படத்தின் இசையமைப்பாளர் ஆக்கினார். தம்முடைய மருமான் ராவல் கிருஷ்ண ஐயரின் பரிந்துரையால் திரை வாய்ப்பை ஏற்றுக்கொண்ட முத்தையா, பம்பாய் தாதரில் ரஞ்சித் ஸ்டுடியோஸில் தயாரிக்கப்பட்ட படத்திற்கு இசையும் பாடல்களும் அமைத்தார். ஏறத்தாழ 63 பாடல்கள்! விளைவு? அதுவரை "லவகுசா' என்று அழைக்கப்பட்ட அப்படம், "சங்கீத லவ குசா'(1934 -இல் வெளிவந்தது) என்று பெயர் மாற்றமே பெற்றது.
 எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களுக்குச் சில பாடல்களைக் கற்றுக்கொடுத்தது, மகாகவி பாரதியாரோடு ஆத்மார்த்த நட்பு பூண்டிருந்தது, ஹரிகேசநல்லூரில் அதியற்புதமான கந்த சஷ்டி விழாவை நடத்தியது (இந்த விழாவுக்கு 1912 -இல் சென்ற பாபநாசம் சிவன், இதனை மகாபாரதத்து யுதிஷ்டிரர் நடத்திய ராஜசூயம் என்றே பாராட்டுகிறார்), வீரவநல்லூரில் வாசம் செய்த காலத்தில் ஊரில் இசை பயின்ற ஒவ்வொருவருக்கும் பார்த்துப் பார்த்து ஆலோசனை சொன்னது, மகாராணி சேது பார்வதிபாய் அவர்களின் உந்துதலால் சுவாதித் திருநாள் மகாராஜா அவர்களின் கீர்த்தனைகளை ஸ்வரப்படுத்தியது என்று முத்தையா பாகவதரின் பெருந்தன்மைகளும் பெருமிதங்களும் எண்ணிக்கையில் அடங்கா. இவருடைய சீடர்கள் பட்டியலில், மதுரை மணி ஐயர், கோட்டு வாத்தியம் நாராயண ஐயர், ஃபிடில் அப்பாவையர், எஸ்.ஜி.கிட்டப்பா போன்ற பிரபலங்கள், முக்கிய இடம் வகிக்கின்றனர். 1945 -ஆம் ஆண்டு ஜூன் 30 -ஆம் தேதி ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், நாதபிரம்மத்தோடு இரண்டறக் கலந்தார். "ஹரிகேசபுர' என்னும் தம்முடைய முத்திரையினால், இசை வரைபடத்தில் நீங்காததோர் இடத்தை ஹரிகேசநல்லூருக்குத் தந்துவிட்டார்.
 "ஹிமகிரி தனயே ஹேமலதே அம்ப ஈஸ்வரி ஸ்ரீ லலிதே மாமவ, ரமா வாணி ஸம்úஸவித சகலே' என்னும் பாடல் ஒலிக்கும்போதெல்லாம், முத்தையா பாகவதர் மட்டுமா கண்களில் பிரத்யக்ஷமாகிறார்? "ஹிமகிரி சுதே' என்று அம்பாளைச் செல்லமாக அழைத்த ஆதிசங்கரர், "ஹேமவதீ' என்று உரிமையோடு கூப்பிட்ட கேனோபநிஷதம், "ரமா வாணி வணங்கித் தொழ நடுவில் அம்பாள்' என்று விவரிக்கும் லலிதா சஹஸ்ரநாமம் என்று சனாதன தர்மம் முழுமையுமல்லவா தோற்றம் தருகிறது!
 - தொடரும்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com