பொருநை போற்றுதும்! - 7

விஜயநகரப் பேரரசைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், திருநெல்வேலியையும் தென்காசியையும் தலைநகரங்களாகக் கொண்டு பாண்டிய மன்னர்கள் சிலர் ஆட்சி புரிந்தனர்.
பொருநை போற்றுதும்! - 7

விஜயநகரப் பேரரசைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், திருநெல்வேலியையும் தென்காசியையும் தலைநகரங்களாகக் கொண்டு பாண்டிய மன்னர்கள் சிலர் ஆட்சி புரிந்தனர். தென்காசியைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்ட மன்னர்கள், தென்காசிப் பாண்டியர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். இவர்களில் முதலாமவர் சடையவர்மன் (ஜெடிலவர்மன்) பராக்கிரம பாண்டியன் (1422-1463) ஆவார். 

இவர் காலத்துக்கு முன்பாக, சச்சிதானந்தபுரம், முத்துத்தாண்டவ நல்லூர், சைவ மூதூர், குயின்குடி, சித்தர்வாசம், சித்தர்புரி, சிவமணவூர், மயிலைக்குடி, சித்திர மூலத்தானம், வசந்தகுடி,  சப்த மாதர் ஊர், கோசிகம், பலாலிங்கப் பாடி, ஆனந்தக் கூத்தனூர் போன்ற பல பெயர்களால் அழைக்கப்பட்ட இவ்வூருக்கு, மக்கள் புழக்கத்தில் இருந்த பெயர் "செண்பகப் பொழில்' என்பதேயாகும். செண்பக மரங்கள் நிறைந்த மழைக்காடுகள் அடர்ந்த இப்பகுதியை, சிற்றாற்றங்கரையில் புலிகளின் நடமாட்டம் அதிகம் இருந்த பகுதியைத் தம்முடைய ஆட்சிபீடமாக்கிக் கொண்டு பராக்கிரம பாண்டியன் ஆளத் தொடங்கினார். தம்முடைய நகரத்திற்குப் புலியூர் என்றே பெயரிட்டார். புலியூருக்குக் கிழக்கேயும் புலி நடமாட்டம் அதிகம் இருந்தது. ஆகவே, அப்பகுதிக்குக் கடுவாய்க்காடு என்று பெயர். புலியூருக்குத் தென்மேற்கே, அடர்காட்டுக்குள், மலைச் சரிவில் ஓர் அருவி; அதுவே புலி அருவி. பராக்கிரம பாண்டியன் இப்பகுதிகளில் ஆட்சி நடத்திய காலத்தில், இவருடைய கனவில் தோன்றினார் சிவப்பரம்பொருள்.  பாண்டிய முன்னோர்கள் வழிபட்ட சிவலிங்கம், செண்பகக் காடுகளில் உறைவதாகக் கூறி, கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைப் பின் தொடர்ந்தால், அவை சென்று சேரும் இடத்தில் சிவலிங்கம் இருப்பதாகவும், பக்தர்கள் வடக்கிலுள்ள காசிக்குச் செல்லவேண்டிய அவசியம் இல்லாமல், இவ்விடமே தென்காசியாக விளங்குமென்றும் இறைவனார் உரைக்க, அதன்படி, பராக்கிரம பாண்டியன் திருப்பணி செய்து, புலியூருக்கு மேற்கே, சந்நிதிகளும் கோபுரங்களும் எழுப்புவித்த திருக்கோயிலே அருள்மிகு விசாலாட்சி அம்பாள் சமேத அருள்மிகு காசி விசுவநாதர் திருக்கோயிலாகும். இக்கோயிலின் பெயரால், ஊரும் தென்காசி ஆனது.  கோயில் மூலவர் மிகப் பழைமையானவர் என்றாலும், கோயிலின் இருப்பு பலருக்கும் தெரியும்வகையில் உயர்கோபுரமும் மாடங்களும்  எழுப்பி, கோயிலைச் சுற்றித் தம்முடைய தலைநகரத்தையும் பராக்கிரம பாண்டிய மன்னர் நிர்மாணித்தார். தென்காசியும் தென்காசியை மையமாகக் கொண்ட பாண்டிய அரசும் இவ்வாறு தோன்றியதால், இவ்வழி வந்த மன்னர்கள், "தென்காசிப் பாண்டியர்கள்' என்றே பெயர் பெற்றனர். 

1616 -ஆம் ஆண்டுவாக்கில் ஆட்சி நடத்திய கொல்லம் கொண்டான் என்னும் மன்னர்வரை நீண்ட இந்தத் தென்காசி வம்சாவளியில், இலக்கியம் படைத்த மன்னரும் இருந்தனர். இவர்களில் மூவர் முக்கியமானவர். மூவரும் சகோதரர்கள்; சடையவர்மன் பராக்கிரம குலசேகர பாண்டியன் (ஆட்சிக்காலம் 1543-1552) புதல்வர்கள், குலசேகரனுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த நெல்வேலி மாறன், இவர்களைத் தத்தெடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

வரகுணராம பாண்டியன், கருவை எனப்படும் கரிவலம் வந்த நல்லூரிலும் தென்காசியிலுமாக வாழ்ந்தார்; முடி சூட்டிக் கொள்ளவில்லை; லிங்கபுராணம், வாயு சங்கிதையின்(சைவ புராணத்தின் ஒரு பகுதி) தமிழ் வடிவம், அம்பிகை மாலை ஆகியவற்றைப் பாடினார்.  வரதுங்க ராம பாண்டியன்,  சில காலம் ஆட்சி நடத்தினார்; ஸ்காந்த மகாபுராணத்தின் பகுதியான பிரமோத்தர காண்டம், குட்டித் திருவாசகம் என்று போற்றப்படுகிற திருக்கருவை அந்தாதி, அகவாழ்க்கை இன்ப நூலான கொக்கோகம் ஆகியவற்றைப் பாடினார். 

தமிழ்த் திறம் மிக்க தென்காசிப் பாண்டியர்களில், அதிகம் பிரபலமானவர் அதிவீரராம பாண்டியன் (ஆட்சிக்காலம் 1600 வாக்கில்). மகாபாரதத்தில், கிளைக் கதைகளில் ஒன்றாகக் காணப்படுவது நளன் தமயந்தி சரித்திரம். சிறிய கதை என்பதால் நள உபாக்கியானம் என்றழைக்கப்படுகிறது. இதனை "நளவெண்பா' என்று தமிழில் பாடினார் புகழேந்திப் புலவர். நிஷத நாட்டு மன்னனான நளன் கதையை விரிவுபடுத்தி, வடமொழியில் ஹர்ஷ மன்னர் "நைஷதம்' என்னும் பெயரில் பாடினார்.  இதே நைடதத்தைத் தமிழில் பாடினார் அதிவீரராமர். ஹர்ஷரின் நைஷதம், வடமொழி பஞ்சகாவியங்களுள் ஒன்றாகப் போற்றப்படுகிறது. புலமையும் வளமையும் செறிந்ததான அதிவீரராம நைடதம், "நைடதம், புலவர்க்கு ஒளடதம்' என்று பாராட்டப் பெறுகிறது. 

அதிவீரராமரின் மற்றுமொரு நூல், நீதிநூல்களில் ஒன்றாகப் பலருக்கும் பரிச்சயம் ஆன "வெற்றிவேற்கை'. நல்ல நீதிகளைத் தெரிவிக்கும் நூலாக, மானுட இனம் தன்னுடைய தவறுகளைக் களைந்துகொள்வதற்கு ஏதுவாகப் பாடப்பட்ட இந்நூலுக்கு, "நறுந்தொகை' என்னும் பெயரைத்தான் அதிவீரராமர் சூட்டினார்.  வெற்றிவேற்கை வீரராமன்

கொற்கை ஆளி, குலசேகரன், புகல்
நல்தமிழ் தெரிந்தநறுந்தொகைதன்னால்
குற்றம் களைவோர்குறைவிலாதவரே 

- என்பது வெற்றிவேற்கையின் நூல் பயன் பாடல். 

வெற்றி தரும் வேலைக் கையில் பிடித்த வீரராமன் என்று ஆசிரியர் குறிக்கப்படுகிறார்.  ஆசிரியருக்கான அடைமொழியே நூலின் பெயராகப் பழக்கப்பட்டுவிட்டது. "கொற்கை ஆளி' என்பதிலிருந்து இவருடைய ஆட்சி, கொற்கைப் பகுதிவரை (தாமிரவருணி கடலில் சங்கமிக்கும் பகுதி) பரந்திருந்தது என்று அறியலாம். கூர்ம புராணம், மகாபுராணம், காசி காண்டம் ஆகிய நூல்களையும் இவர் பாடினார். நைடதம் என்பது நள அரசனைப் பற்றியதலவா? மானுடனைப் பற்றிக் காவியம் பாடுவதென்பது நரஸ்துதிதானே! ஆகவே, அதற்குப் பரிகாரம் செய்யும்படி இவருடைய அண்ணன் வரதுங்கராமன் கூற, அதன்படியே காசிக்குச் சென்று, காசி மான்மியத்தைக் காசி காண்டமாகப் பாடினாராம். 

குற்றாலத்துறைந்த குளிர்தமிழ்

தென்காசி என்றவுடன் தொடர்ந்து நெஞ்சை வருடுவது குற்றாலத்துச் சாரல்தானே! 

தென்காசியை நிர்மாணித்த பராக்கிரம பாண்டியன் காலத்திலும் அதைத் தொடர்ந்தும், இப்பகுதியில் பல்வேறு ஊர்களும் நிலைபெற்றன. விசுவநாதரின் நித்திய பூஜைக்காகக் கொடுக்கப்பட்ட ஊர் வாழ்விலான்குடி, கோயில் பூஜாரிகளைக் குடியமர்த்தி மானியமாக வழங்கப்பட்ட இடம் மேலகரம், கோயில் ஆபரணங்களைச் செய்வோருக்கான ஊர் தட்டான்குளம், ஓதுவார் பெருமக்கள் வாழ்வதற்காகப் பாட்டார்குறிச்சி, அரச குடும்பமும் அலுவலர்களும் வாழுவதற்கான கடுவாய் அகற்றி (இப்போது கடுவாய்க்கத்தி என்று வழங்கப்படுகிறது) மற்றும் சுந்தரபாண்டியபுரம், நான்குனேரி பக்கம் குக்கிராமத்தைச் சேர்ந்த திரிகூட ராசப்ப கவிராயர் (18 -ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகள்) , மேலகரத்தில் வந்து குடியேறினார். குற்றாலச் சாரல், இவர் உள்ளத்தையும் வருடிவிட,  "குற்றாலக் குறவஞ்சி' என்னும் அற்புத நாடகக் காவியம் உருவானது. 

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பார்
கமனசித்தர் வந்து வந்து  காயசித்தி விளைப்பார்
தேனருவித் திரை எழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் தேர்க்காலும் பரிக்காலும் வழுகும்
கூனலிளம் பிறை முடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே! 

- என்று அந்தக் குற்றாலத்துக் குறத்தி பாடும்போது, தமிழ் மக்கள் அனைவருமே நடனமாடாமல் இருக்கமுடியுமா? மக்கள் புழக்கத்தில் இருந்த குறவஞ்சிப் பாடல்கள், வழக்கொழிந்தபோது, அவற்றை மீளக் கண்டெடுத்துக் கொடுத்தார் ரசிகமணி டி. கே. சி. அவர்கள். மேலகரத்துக் கவிராயரின் பாடல்களை மேலைநாடுகளுக்கும் கொண்டு சென்றார் ருக்மிணிதேவி அருண்டேல். 

குற்றாலக் குறவஞ்சிக் காவியத்தைப் பாடியதற்காக,  மதுரை சொக்கநாத மன்னர்,  கவிராயருக்கு வழங்கிய பரிசுப் பகுதியே "குறவஞ்சிமேடு' என்பதாகும். திருக்குற்றாலத் தலபுராணம், குற்றாலநாதர் பெயரிலான சிலேடை வெண்பா, உலா, ஊடல், மாலை, பிள்ளைத் தமிழ், அந்தாதி, யமக அந்தாதி போன்ற நூல்களையும் இவர் யாத்தார். கவிராயரின் மகன் பாவாடைக் கவி என்பவர், இலஞ்சி முருகப்பெருமான்மீது, முருகன் உலா என்னும் நூலை இயற்றினார். 

- தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com