யோகமும் ஆரூரும்..!

யோகாசனம் பதஞ்சலி முனிவரால் பரப்பப்பட்ட கலை என அறியப்பட்டாலும், யோக பதங்களை உலகுக்கு அருளியது ஆரூர் அமர்ந்த தியாகராஜப் பெருமானே என்பது த்வாபர யுகத்தில் தியாகராஜப் பெருமான் நிகழ்த்திய
யோகமும் ஆரூரும்..!

யோகாசனம் பதஞ்சலி முனிவரால் பரப்பப்பட்ட கலை என அறியப்பட்டாலும், யோக பதங்களை உலகுக்கு அருளியது ஆரூர் அமர்ந்த தியாகராஜப் பெருமானே என்பது த்வாபர யுகத்தில் தியாகராஜப் பெருமான் நிகழ்த்திய 104-ஆவது லீலையான காத்யாயன ரிஷி மூலம் தன் பதம் காட்டிய லீலையில் விளக்கமாக சொல்லப்பட்டிருப்பதன் மூலம், யோகத்துக்கான மூலாதார தலமும் திருவாரூரே என்பதை அறிய முடிகிறது.

மூலாதாரத்தின் சக்தி தேவதை குண்டலினி - விநாயகர் அதிதேவதையாகவும், நான்கு பீஜங்களின் சொரூபியாக சிவபெருமானும் விளங்குகிறார் எனவும், அதிஷ்டான பத்மாசனத்தில் ஆறு இதழ்க் கமலத்தின் நடுவே தத்புருஷ ரூபமாக சிவபெருமானும், அதிதேவதையாக பிரம்மனும் விளங்குகின்றனர் எனவும்,  மணிபூரகம் எனும் 10 தள கமலத்தில் அகோரசிவமாய் சிவபெருமானும், அதிதேவதையாக ஸ்ரீ மகாவிஷ்ணுவும் விளங்குகின்றனர் எனவும், 12 தள அநாஹதத்தில் ஸத்யோஜாத மூர்த்தியாக சிவபெருமானும், அதிதேவதையாக ருத்ர மூர்த்தியும் விளங்குகின்றனர் எனவும் காத்யாயன மகரிஷி மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.

இவை தவிர, விசுத்தி பத்மத்தில் வாமதேவமாக சிவபெருமானும், அதிதேவதையாக மகேஸ்வரரும் விளங்குகின்றனர் எனவும், ஆக்ஞா சக்கரத்தில் ஈரிதழ் பத்மத்தில் ஈசான மூர்த்தியாக சிவபெருமானும், அதிதேவதையாக சதாசிவரும் விளங்குகின்றனர் எனவும், சகஸ்ரதள பத்மத்தில் ஐம்பது மாத்ருகா பீஜங்களுக்கு மத்தியில் சிவபெருமான் சித்சக்தியுடன் உள்ளார் எனவும் யோகத்தில் அமர்ந்த சிவனே ஆரூரில் அருளும் தியாகராஜப் பெருமான் எனவும் காத்யாயன மகிரிஷி விளக்கியிருப்பதன் மூலம் லோக நாயகனும், யோக நாயகனும் தியாகராஜப் பெருமானே என்பது புலனாகிறது.

அஜபாயோகியான (ஹம்ஸயோகி) ஸ்ரீ தியாகராஜப் பெருமான் குறித்து ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதர் பாடிய தியாகராஜ யோக வைபவம் என்ற கீர்த்தனையில்,  ஹிமாவானுடைய யோகப் பெருமையுள்ளவர் ராஜயோகி, யோக பிரயோகத்தில் வித்தகர், சதாசிவத்தின் யோகப்புகழ் உள்ளவர் தியாகராஜர் என கூறியுள்ளார். மேலும், தன் யோக சக்தியினால் உலகத்தின் சிருஷ்டிக்கும் காரணமானவர் அவரே எனவும் முத்துஸ்வாமி தீட்சிதர் விளக்கி
யுள்ளார்.

திருவாரூர் திருத்தலத்தில் தியாகராஜப் பெருமான் புறப்பாடு அஜபா நடனத்துடனேயே நிகழும்.  பாற்கடலில் பள்ளிகொண்ட ஸ்ரீமந் நாராயணனால் நெஞ்சில் நிறுத்தி வழிபடப்பட்ட ஆத்மார்த்த மூர்த்தியான தியாகராஜப் பெருமான், மகாவிஷ்ணுவின் மூச்சுக் காற்றில் ஆடிய நடனமே அஜபா நடனம் எனப்படுகிறது. இதுவும் ஓர் யோக சாஸ்திரமாகவே கொள்ளப்படுகிறது.

இதே போன்று, விடங்கர் தலத்தின் தலைமை பீடமாகக் குறிப்பிடப்படும் திருவாரூரும், பிற விடங்கர் தலங்களும் ஒவ்வொரு யோக வகைகளாகவே குறிக்கப்படுகின்றன. திருவாரூர் - மூலாதாரம், திருக்காரவாசல் - சுவாதிஷ்டானம், திருநாகை - மணிபூரகம், திருநள்ளாறு - அநாகதம், திருக்குவளை - விசுத்தி, திருமறைக்காடு - ஆஞ்ஞா, திருவாய்மூர் - சஹஸ்ராரம் எனக் குறிப்பிடப்படுகிறது.

பார் போற்றும் ஆரூர் ஆழித்தேரும், யோகாசனத்தையே அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது என்பதை முசுகுந்த சகஸ்ரநாம 56- ஆவது நாமாவளி விளக்குகிறது. நான்கு சக்கரங்களும் மூலாதாரத்தின் நான்கு இதழ்கள் எனவும், வெளிச் சக்கரங்களின் அச்சுக்கள் இரண்டும் சிவசக்தி அம்சங்கள் எனவும், தேரின் அடிப்பாகம் ஆத்ம தத்துவம், நடுப்பாகம் வித்யா தத்துவம், மேல்பாகம் சிவ தத்துவம் எனவும் நாமாவளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தலத்து அம்பாள் கமலாம்பிகை  அமர்ந்துள்ள கோலம் உலகில் வேறெங்கும் காண முடியாத யோகக் கோலமான குட்டிகாசனக் கோலம் என்பது தனிச் சிறப்பு. இத்தலத்து உத்ஸவ அம்பாளின் திருப்பெயர் மனோன்மணி எனக் குறிப்பிடப்படுகிறது. சகஸ்ரஹாரத்தில் குண்டலினி யோகத்துக்கு மனோன்மணி என்றே பெயர் விளங்குகிறது.

பதஞ்சலி முனிவருக்கு பாத தரிசனம் அளித்த தியாகராஜப் பெருமானே யோகத்துக்கும், இசைக்கும் மூலம் என்பதும்,  ஆயிரமாயிரம் அதிசயங்களும், அளவிடமுடியாத ரகசியங்களும் கொண்ட தியாகராஜப் பெருமான் அருளும் திருவாரூரே இசைக்கும், யோகத்துக்கும் மூலாதார தலம் என்பதும்  உலகின் எந்தத் தலத்துக்கும் கிட்டாத தனிச் சிறப்பு.

தகவல் : பி. பஞ்சாபகேசன், திருக்கோயில் ஆராய்ச்சியாளர் மற்றும் நூலாசிரியர்,  நூல்- "இசை  திருவாரூர்'.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com