சேவை: குமரப்பா போற்றிய புகைப்படம்! - Dinamani - Tamil Daily News

சேவை: குமரப்பா போற்றிய புகைப்படம்!

First Published : 31 January 2010 12:00 AM IST


மகாத்மா காந்தியடிகள் இட்ட பணியை நிறைவேற்றத் துடிப்புடன் செயல்பட்ட கோ.வெங்கடாசலபதி போன்ற சில காந்தீய தொண்டர்களால் 1940}ல் நிறுவப்பட்டதுதான் மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் உள்ள காந்தி நிகேதன் ஆசிரமம்.

இந்திய சுதந்திரப் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருந்தபோது 1942}ம் ஆண்டு தமிழகத்தில் ஏராளமான தலைவர்களும், காந்தீயத் தொண்டர்களும் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உள்படுத்தப்பட்டனர்.

காங்கிரஸ் ஸ்தாபனத்தை ஆங்கிலேய அரசு சட்டவிரோதம் என அறிவித்தது.

1944}ல் பல காந்தீய தொண்டர்கள் சிறையிலிருந்து வெளியே வந்தபோது மேலும் புதிய போராட்டங்கள் தொடங்கவும், நிர்மாண வேலைகளைத் துரிதப்படுத்தவும் திட்டமிட்டு, திருச்சி மாவட்டம், லால்குடியில் நடைபெற்ற ஊழியர் மாநாட்டின் விளைவாக "தமிழ்நாடு காங்கிரஸ் ஊழியர் சங்கம்' தொடங்கப்பட்டது.

காலஞ்சென்ற சி.என். முத்துரங்க முதலியார் தலைவராகவும் மற்றும் 20 உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக் கமிட்டியும் அமைக்கப்பட்டது. இதன்மூலம் நிர்மாண வேலைகளைச் செய்ய திட்டம் வகுக்கப்பட்டது.அந்தநேரத்தில் காந்தியடிகளும் சிறையிலிருந்து விடுதலையானார். அப்போது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க மறைந்த தமிழக முதல்வர் எம்.பக்தவத்சலம், ஜனாப் உபையத்துல்லா, கோ.வேங்கடாசலபதி ஆகிய மூவரும் காந்தியை சந்தித்துவிட்டுத் திரும்பினர்.

இதைத் தொடர்ந்து மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் உள்ள காந்தி நிகேதன் ஆசிரமத்தில்தான் ஊழியர்களுக்கு நிர்மாணப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆசிரமத்தில் மகாத்மா காந்தியின் காலடி படாவிட்டாலும், அந்தக் குறையைத் தீர்க்கும் விதமாக நிர்மாணப்பணிகளில் காந்தியுடன் துணை நின்றவர்களில் அவரது முதன்மைச் சீடரான குமரப்பா தன்னுடைய கடைசி காலத்தில் இங்கு தங்கினார். காந்தி கண்ட கிராமப் பொருளாதாரத்தை விதைத்துவிட்டுச் சென்றார். அதன்மூலம் இந்த ஆசிரமம் மேலும் சிறப்பைப் பெற்றது என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.

குமரப்பாவின் வருகை காந்தி நிகேதன்

ஆசிரமத்துக்குப் புது மெருகை ஊட்டியது. அவரது எண்ணம் முழுவதும் கிராம கைத்தொழில் வளர்ச்சிக்குத் தன்னை அர்ப்பணிப்பதாகவே இருந்தது.

இதனாலேயே காந்தி நிகேதனின் மேலான வளர்ச்சியில் குமரப்பா பெரும் அக்கறை கொண்டார். இதன் விளைவே 1956}ல் பதிவு செய்யப்பட்ட ஆசிரமமாக மாறி, அதன் முதல் தலைவர் என்ற பொறுப்பையும் குமரப்பா ஏற்றார்.

காந்தியக் கொள்கை, கிராமப் பொருளாதாரம், கிராமத் தொழில் ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் அளித்து பாதுகாத்து வந்தார்.

அப்போதிருந்தே சோப்பு தயாரிப்பு, செக்கு எண்ணெய் எடுத்தல், நார் மற்றும் தோல் தொழில், தேனி வளர்ப்பு, மண்பாண்டம் உள்ளிட்ட பல கிராம கைத் தொழில் பயிற்சிகள் இங்கு நடைபெற்று வந்தன. அப்போது, அகில இந்திய கிராமத் தொழில் சங்கச் செயலர் மற்றும் தலைவர் பதவியும் குமரப்பாவைத் தேடி வந்தது.

இந்த ஆசிரமத்தின் ஓரத்தில் தனது சொந்த நிதியில் ஒரு குடில் அமைத்து, குமரப்பா தங்கியிருந்தார். 1956}ல் அப்போது குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத்தை ஆசிரமத்துக்கு வருமாறு குமரப்பா அழைத்தார்.

அப்போது, ராஜேந்திர பிரசாத், டி.கல்லுப்பட்டியில் காந்தி ஆசிரமம் ஒன்று இருக்கிறதா? அப்படி ஒன்று இருப்பதாக நான் அறிந்திருக்கவில்லையே என்றார்.

இதைக் கேட்ட குமரப்பா, "மிகப்பெரிய நிர்மாண ஸ்தாபனம்} காந்தி நிகேதன் என்ற பெயரில் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறதே உங்களுக்குத் தெரியாதா? சுதந்திர இந்தியாவின் குடியரசுத் தலைவரும்,காந்தியவாதியுமான உங்களுக்கு இப்பெரிய நிர்மாண ஸ்தாபனத்தைப் பற்றித் தெரியாமல் இருப்பது வெட்கக்கேடானது" என வெளிப்படையாக உரிமையுடன் கூறினார். இதன் பின்னர் 1956, ஆகஸ்ட் 15}ம் தேதி இந்த ஆசிரமத்துக்கு வருகை தந்தார் ராஜேந்திர பிரசாத். அவரது வருகையை நினைவுபடுத்தும் விதமாக காந்தியடிகளின் சிலை ஆசிரமத்தின் பொதுமண்டபத்தில் அமைக்கப்பட்டது.

மேலும், ஆசிரமத்திலேயே காந்தியடிகளின் அஸ்தியின் ஒரு சிறுபகுதி இருந்ததை அறிந்த குமரப்பா, சிலையின் அடியில் வைத்து பிரதிஷ்டை செய்யவும் முடிவு செய்து, ஆசிரமத்திலேயே விளைந்த பருத்தியைக் கொண்டும், சிறுவர்கள் நூற்று நெய்த துணியில் பொதிந்தும், அங்கு தயாரிக்கப்பட்ட காகிதத்தில் மடித்து, மண்பாண்டத்தில் மூடி பிரதிஷ்டை செய்தார்.

"காந்தியின் நினைவுகளை ஒவ்வொருவரின் இதயத்தில் விதைக்க வேண்டும். ஆனால், நாம் மண்ணுக்குள் புதைக்கிறோம்" என அப்போது குமரப்பா கூறி கண்ணீர் விட்டதை இன்றும் ஆசிரமத்தில் உள்ள மூத்த நிர்வாகிகள் நினைவு கூறுகின்றனர். இங்கு வைக்கப்பட்டுள்ள காந்தியின் சிலைக்கு சிறப்பு அம்சம் உண்டு.

அது என்னவெனில் இத்தாலிய பெண்மணியால் வடிவமைக்கப்பட்டு, மகாத்மா காந்தியே தனது கையெழுத்தை பதித்துள்ள சிறப்பு பெற்றது அந்த சிலை, குஜராத் மாநிலம், வார்தாவில் பேங்க் ஆப் பரோடா வங்கியில் டெபாஸிட் செய்யப்பட்டிருந்த இந்த சிலையை மிகுந்த முயற்சியில் ஆசிரமத்துக்கு வரவழைத்தார் குமரப்பா.

இந்நிலையில், 1956}ல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஆச்சார்ய வினோபாஜி, டிசம்பர் 25, 26}ம் தேதிகளில் காந்தி நிகேதன் ஆசிரமத்துக்கு வந்து தங்கினார். காந்தியடிகளின் தலைசிறந்த இரு சீடர்கள் ஒரே இடத்தில் தங்கி, பூமிதான இயக்க வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து பேசினர். இதையடுத்து 25.12.1956}ல் 50 கிராமங்கள் தானமாக அறிவிக்கப்பட்டன. இதனால் வினோபாஜி மிகவும் மகிழ்ச்சியுற்றார். மேலும் கிராம நிர்மாணப் பணிக்காக ஆசிரமம் தன்னை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என அவர் ஆசி கூறினார்.

மதுரையைச் சுற்றியுள்ள கிராமப்புற வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த குமரப்பா, 27 கிராமங்களில் ஒரு சர்வே மேற்கொண்டார்.

ஒவ்வொரு கிராமத்துக்கும் பஸ் மற்றும் மாட்டு வண்டிகளில்பயணம் செய்து, ஆய்வு நடத்தி மதுரை மாவட்டத்தில் கிராம அபிவிருத்திக்கான அறிக்கையைத் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பினார்.கிராம அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட பெரும் நிதியை உற்பத்திக்குச் செலவிடாமல் சாலைபோடும் பணிக்குச் செலவிடப்பட்டதாகவும், இதற்கு அரசுடன் செல்வாக்குள்ள பணக்காரர்கள் ஒத்துழைத்துள்ளார்கள் என்றும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஹரிஜனங்களும், ஏழை மக்களும்தான். கிராம சேவகர்களும், அதிகாரிகளும் தாங்கள் பிழைப்பதற்காக ஒரு வேலையைத் தேடிக்கொண்டனர். கிராம அபிவிருத்தித் திட்டத்தில் அவர்களுக்கு வேலை கிடைத்துவிட்டது. ஆனால், கிராம மக்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்பது போன்ற கருத்துக்களை அவர் அந்த அறிக்கையில் பதிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.

தண்ணீர் பற்றி குறிப்பிடுகையில் குளங்கள், ஏரிகள் மண் படிந்து ஆழம் குறைந்து போய்விட்டதாகவும், அவற்றில் 5 அடி ஆழத்துக்கு தூர்வாரப்பட்டால் மழைநீர் தேங்கி, விவசாயத்துக்குப் போதுமானதாக இருக்கும். இதன்மூலம் உற்பத்தி பெருகி கிராமம் அபிவிருத்தி அடையும் எனவும் அந்த அறிக்கையில் குமரப்பா தெரிவித்துள்ளார்.

கைவினைக் கலைஞர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், யாருக்கெல்லாம் வேலை செய்வதற்குப் போதுமான நிலம் இல்லையோ அவர்களுக்கு வேலை தருவதில் முக்கியத்துவம் தரவேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி ஒரு பசுமைத் திட்டத்தையே குமரப்பா பிரகடனப்படுத்தியுள்ளார்.காந்தி நிகேதன் ஆசிரமத்தில் குமரப்பா வாழ்ந்த கடைசி காலத்தில் காந்தீயக் கொள்கை, கிராமப் பொருளாதாரம், கிராமக் கைத் தொழில் மற்றும் கிராம அபிவிருத்தி போன்றவையே அவரது மனச் சிந்தனையில் ஆக்கிரமித்திருந்தது என்றால் அது மிகையாகாது.

குமரப்பாவுக்கு புகழாரம் சூட்டும் விதமாக ஆசிரமத்தில் செயல்பட்டு வந்த ‘காந்தி கிராமோதய வித்யாலயா' 1902}ல் குமரப்பா நூற்றாண்டு விழாவின்போது ‘டாக்டர் ஜே.ஸி. குமரப்பா கிராமியத் தொழில்நுட்ப வளர்ச்சி நிறுவனம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

குமரப்பாவின் கொள்கையின்படி கிராமத் தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

தமிழகம் மட்டுமல்லாது வடகிழக்கு மாநிலங்களான மேகாலாயா, மணிப்பூர், அஸ்ஸôம், அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் இங்கு தோல் பதனிடுதல் மற்றும் சோப்பு தயாரிக்கும் பயிற்சியில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

ரத்தக் கொதிப்பு நோயால் அவதியுற்ற குமரப்பா, தான் வாழ்ந்த கடைசி காலத்தில் சொந்த நிதியில் காந்தி நிகேதனில் குடில் அமைத்து வாழ்ந்தபோது தனது குருவுக்கும் மேலான இடத்தில் ஒருவரின் புகைப்படத்தை குடில் வாயிலில் வைத்திருந்தார்.

தலையில் முண்டாசு கட்டி, சோகமே உருவான கண்களுடனும், ஒட்டிய கன்னங்களுடனும் காணப்பட்ட அவர் வேறு யாருமல்ல; இந்திய விவசாயிதான்! "மாஸ்டர்ஸ் மாஸ்டர்' என கிராமத்து விவசாயியை குமரப்பா குறிப்பிடுவது வழக்கம். குமரப்பா தங்கியிருந்த அந்த குடிலுக்குள் இன்றளவும் அவர் பயன்படுத்திய மரத்திலான மேஜை, பாய், அவர் எழுதிய, சேகரித்த புத்தகங்கள் (நூலகமாகவே உள்ளன) உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

அவரது குடிலை அருங்காட்சியகமாக மாற்றவேண்டும் என்பது ஆசிரமத்தில் உள்ளவர்களின் நீண்டநாள் ஆசை. தமிழக அரசே முன்வந்து குமரப்பா வாழ்ந்த குடிலை அருங்காட்சியமாக உருவாக்க முன்வந்தால் அவருக்கு செய்யும் பிரதிபலனாக இருக்கும்.

அதுமட்டுமல்ல; இன்றைய இளைய சமுதாயத்தினரும், எதிர்கால சந்ததியினரும் அவரை முழுமையாக அறிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும்.

படங்கள் ஆர்.சிவக்குமார்

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.