ஆடி மாதத்து ஆதிரை விழா - Dinamani - Tamil Daily News

ஆடி மாதத்து ஆதிரை விழா

First Published : 28 July 2013 08:27 AM IST


ஆதிரையான் என்பது சிவபெருமானின் திருநாமம். அவர்க்குரிய திருநாள் மார்கழி மாதத்துத் திருவாதிரை நாளாகும். அதனால்தான் தில்லை போன்ற திருத்தலங்களில் ஆதிரை நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பெறுகின்றது. தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் காணப்பெறும் கல்வெட்டுச் சாசனங்களில் மார்கழி மாதத்து ஆதிரை நாள் தமிழ்நாட்டு மன்னர்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பெற்ற திருநாளாக குறிக்கப்பெற்றுள்ளன.
 திருநாவுக்கரசு பெருமானார் திருவாரூரில் தான் கண்ட ஆதிரை நாளின் சிறப்புக்களை "முத்து விதானம்' எனத் தொடங்கும் திருவாதிரைத் திருப்பதிகத்தின் பத்துப் பாடல்களில் "ஆதிரைநாளால் அது வண்ணம்' என முடியும் சொற்றொடர்களோடு குறிப்பிட்டு தான் திருவாரூரில் கண்ட அவ்விழா பற்றிய செய்திகளைப் பதிவு செய்துள்ளார். திருவாரூரில் நிகழ்ந்த ஆதிரை விழா அளப்பரிய சிறப்புடைய விழாவாகும்.
 அப்பர் சுவாமிகளே மார்கழி விழாவைக் கண்டு களித்த ஊர் திருவாரூர் என்ற காரணத்தால்தானோ என்னவோ மாமன்னன் இராஜேந்திர சோழன் தான் பிறந்த ஆடித் திருவாதிரை நாள் விழாவையும், தன் தந்தை (அய்யன்) இராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நாளையும் ஆரூர் இறைவனின் திருநாளான மார்கழி ஆதிரை நாளையும் மிகச் சிறப்பாக அக்கோயிலில் கொண்டாட ஏற்பாடுகளைச் செய்தான். அங்கு அவன் வெட்டுவித்த கல்வெட்டுச் சாசனம் இம்மூன்று விழாக்கள் பற்றி தெளிவுபட விவரிக்கின்றது:
 ""பூர்வ தேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட கோப்பர கேசரிவர்மன்'' என்று கல்வெட்டுக்கள் புகழ்ந்து கூறும் அரசனாகிய இராஜேந்திர சோழன் மாமன்னன் இராஜராஜனுக்கும், அவன் தேவி வானவன்மாதேவிக்கும் ஆடி மாதத்து ஆதிரை நாளில் திருமகனாகப் பிறந்தவன். மதுராந்தகன் என்பது இவனது இயற்பெயராகும். சோழ அரசர்கள் மாறி மாறி புனைந்து கொள்ளும் "ராஜகேசரி', "பரகேசரி' என்ற பட்டப் பெயர்களில் ஒன்றான "பரகேசரி' என்பதனை தன் பட்டமாகச் சூடிக் கொண்டான். கி.பி. 1012-இல் இராஜராஜனால் இளவரசாக நியமனம் பெற்றவன், கி.பி.1014-இல் தன் தந்தையின் மரணத்திற்குப் பின்பு சோழப் பேரரசனாக "இராஜேந்திரசோழன்' எனும் திருநாமத்தோடு அரியணையில் அமர்ந்தான். தான் பேரரசனாக அரியணையில் அமர்ந்த நான்காம் ஆண்டிலேயே (கி.பி.1018-இல்) தன் மகன் முதலாம் இராஜாதிராஜனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி தன்னோடு இணைத்துக் கொண்டு, கி.பி. 1044-ஆம் ஆண்டு வரை முப்பதாண்டுக்காலம் பரந்துபட்ட சோழப் பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான்.
 தன் வீரத்தைக் காட்டி நிற்கும் பட்டப்பெயரான "கங்கை கொண்டான்' என்ற பெயரினை நினைவூட்டும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் புதிய தலைநகரைக் கொள்ளிடத்திற்கு வடபால் தோற்றுவித்தான். அங்குக் கோட்டை, கொத்தளங்களையும், அரண்மனையையும் அமைத்ததோடு, கங்கை கொண்ட சோழீச்சுரம் எனும் திருக்கோயிலையும் எடுப்பித்தான். வடபுலத்து அரசர்களை வென்று கங்கையிலிருந்து கொணர்ந்த புனித நீரைத்தான் அந்நகரில் தோற்றுவித்த "சோழகங்கம்' எனும் ஏரியில் விடுத்து, தன் வெற்றிக்கு "ஜலஸ்தம்பம்' எடுத்தான். பொதுவாக வெற்றியைக் கொண்டாட ஜெயஸ்தம்பம் - வெற்றித்தூண் நிறுவுவது வழக்கம். ஆனால் இப்பெருவேந்தனோ ஜலஸ்தம்பம் எடுத்ததாகக் கல்வெட்டில் கூறிக்கொள்கிறான்.
 தமிழிசைக்கு செய்த தொண்டு: தமிழின்பாலும், தமிழிசையின்பாலும் தணியாத தாகமுடையவனாகவே வாழ்ந்தான். பண்டித சோழன் என்ற சிறப்புப் பெயரும் பெற்றான். ஒருமுறை பழையாறை அரண்மனையில் இப்பேரரசன் உணவு அருந்திக் கொண்டிருந்தான். அவ்வேளையில் அங்குவந்த அவனது போர்த்தளபதி இராசராச பிரம்மராயன் என்பவன் மன்னனிடம் ஒரு விண்ணப்பம் செய்தான். அந்த விண்ணப்பம் போர் பற்றியதோ அல்லது ஆட்சி பற்றியதோ அல்ல. திருக்கற்குடி (திருச்சிராப்பள்ளி - உய்யகொண்டான் திருமலை) சிவாலயத்தில் மூவர் தேவாரம் பாடும் ஓதுவார்களுக்காக நிவந்தம் வேண்டி விண்ணப்பம் செய்தான். உணவு அருந்திக் கொண்டே காது கொடுத்துக் கேட்ட இராஜேந்திர சோழன் உளம் மகிழ்ந்து தமிழ்பாடும் இசைவாணர்களுக்காக திருக்கற்குடியில் நிலமளித்து ஆணையிட்டான். அப்படியே கல்லிலும் எழுதச் செய்தான். நிலம் அளித்தவனோ கங்கையும் கடாரமும் வென்ற சோழப் பேரரசன். தமிழ் பாடுபவர்களுக்காக விண்ணப்பித்தவனோ பல போர்களைக் கண்ட சோழர் தளபதி. அதுமட்டுமன்று, அத்தளபதி பின்னாளில் மேலைச் சாளுக்கியரோடு நிகழ்ந்த போரில் வீரமரணம் அடைந்தவன். அவனுக்காகக் கீழைச் சாளுக்கிய மன்னன் இராஜராஜ நரேந்திரன் அந்த இடத்திலேயே சமாதிக் கோயிலும் எடுத்தான். மன்னனும், தளபதியும் தமிழுக்காகவும் தமிழிசைக்காகவும் காட்டிய ஈடுபாட்டைத்தான் இந்த வரலாறு நமக்கு உணர்த்து
 கின்றது.
 "சிவபாதசேகரன்' என இராஜராஜனும் "சிவசரண சேகரன்' என இராஜேந்திரனும் பட்டங்கள் சூடிக் கொண்டனர். சிறந்த சைவனாக இராஜேந்திர சோழன் விளங்கிய போதும், மற்ற சமயத்தவர்களிடத்தில் நேசமுடன் திகழ்ந்தான். நாகப்பட்டினத்தில் கடாரத்து அரசனால் எடுக்கப்பட்ட பெüத்த பள்ளிக்கு பள்ளிச் சந்தமாக (கொடை) பல ஊர்களை இராஜராஜன் அளித்திருந்தான். அதற்கான செப்பேட்டுச் சாசனத்தை இராஜேந்திர சோழனே கடாரத்து அரசனுக்கு வழங்கினான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 வரலாற்றுக் குழப்பம்: சோழர் வரலாற்றை ஆய்ந்து அறிந்து எழுதிய அறிஞர் பெருமக்கள் திருவாரூரில் உள்ள இராஜேந்திர சோழனின் கல்வெட்டை அறிந்திராத காரணத்தால் திருவொற்றியூரில் உள்ள ஒரு கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் மார்கழி திருவாதிரை நாளினை இராஜேந்திர சோழன் திருநாளாகக் கொண்டாடப்பெறும் செய்தியினை அறிந்து, மார்கழி திருவாதிரையே இராஜேந்திரனின் பிறந்த நட்சத்திரம் என பதிவு செய்தனர். தன் பிறந்த நட்சத்திரம் திருவாதிரை (ஆடி) என்பதால் ஈசனின் திருநாளான மார்கழித் திருவாதிரையைத் தன் பெயரால் கொண்டாடச் செய்தானேயொழிய, தன் பிறந்தநாள் அதுவென அச்சாசனத்தில் குறிக்கவில்லை.
 பொற்கோயில்: திருவாரூரில் இராஜேந்திர சோழனுக்கு அணுக்கியராக விளங்கிய பரவை நங்கையார் என்ற பெண்மணி விரும்பியதற்காக வீதிவிடங்கப் பெருமானாகிய தியாகேசரின் செங்கற் கோயிலை கற்றளியாக மாற்றி அமைத்தான். மேலும் பரவையின் வேண்டுகோளுக்காக 20643 கழஞ்சு பொன் கொண்டும், 42000 பலம் செம்பு கொண்டும், தன் 18-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.1030இல்) தான் எடுத்த கற்றளிக்கு பொன் வேய்ந்து பொற்கோயிலாக மாற்றி அமைத்தான். அக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருநாளில், தன் தேரில் அவ்வம்மையாருக்கு உடனிருக்கைக் கொடுத்து திருவீதியில் பவனிவந்து தியாகப் பெருமானை அவ்விருவரும் வணங்கியதாகவும், அவர்கள் நின்று வணங்கிய இடத்தில் நினைவாக ஆளுயர இரு குத்துவிளக்குகளை வைத்ததாகவும் அங்கு பொறித்துள்ள கல்வெட்டில் பதிவு செய்துள்ளான்.
 முப்பெரும் விழாக்கள்: மேற்கூறப்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டு தியாகேசர் கோயிலின் அதிட்டானத்தில் தன் ஆணையாக மற்றொரு கல்வெட்டையும் பொறித்தான். அதில் தன் தந்தை (இராஜராஜ சோழன்) பிறந்த ஐப்பசி சதய நாள் விழாவுக்கும் தான் பிறந்த ஆடித் திருவாதிரை விழாவுக்கும் ஈசனாரின் மார்கழித் திருவாதிரை விழாவுக்கும் அவன் ஏற்படுத்திய நிவந்தங்களைப் பதிவு செய்தான். இதே கோயிலில் உள்ள இராஜாதிராஜனின் கல்வெட்டு, அவன் தந்தை இராஜேந்திர சோழனுக்கும் அவரின் அணுக்கியார் பரவை நங்கையாருக்கும் அவர்கள் மறைந்த பிறகு படிமம் எடுத்து வழிபாடு செய்தது பற்றி விவரிக்கின்றது. இப்பெரு மன்னனே விழுப்புரம் அருகில் உள்ள பனையபுரத்திலும் இவர்கள் இருவருக்கும் உருவச் சிலைகள் எடுத்து வழிபாடு செய்ததை அங்குள்ள மற்றொரு கல்வெட்டு கூறுகின்றது.
 ஐயத்திற்கு இடமின்றி இராஜேந்திர சோழனின் திருவாக்காகவே கூறப்பெற்றுள்ள ஆரூர் சாசனத்தில் அவன் பிறந்த நாளாகக் குறிக்கப்பெறுவது ஆடி மாதத்து திருவாதிரை நாளே, இவ்வாண்டு ஆகஸ்ட் 4 ஆம் நாள் அவன் பிறந்த நாளாகும். அவன் பேரரசனாக முடிசூடிக் கொண்ட ஆயிரமாவது ஆண்டு, நிகழ இருக்கின்ற 2014-ஆம் ஆண்டாகும். இவ்வாண்டும், வரும் ஆண்டும் அவன் பிறந்த நாளில் அவனை நினைத்து போற்றுவோம். தமிழனின் வீரத்திற்கும் கலை மற்றும் பண்பாட்டுச் சிறப்புகளுக்கும் ஒரு குறியீடே ஆடித் திருவாதிரை நாளாகும்.
 

கங்கைகொண்ட சோழீச்சுரம்
 தியாகேசர் கோயிலில் காணப்பெறும்
 இராஜேந்திரசோழன் வெட்டுவித்த
 இக் கல்வெட்டில்
 "நாம் பிறந்த
 ஆடித் திருவாதிரை' என்று குறிக்கப் பெற்றுள்ளது
 முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
 

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.