நகர்வலம்: "நம்மில் ஒருவர்!' - Dinamani - Tamil Daily News

நகர்வலம்: "நம்மில் ஒருவர்!'

First Published : 16 May 2010 11:13 AM IST

ஒருநாள் ஸ்ரீரங்கம் கோயில் உற்சவரை வீதியில் கொண்டுவரும்பொழுது, ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து உற்சவர் நகர மறுத்துவிட்டார். என்ன செய்தும் நகரவில்லை. கோயில் உள்ளேயிருந்து பாடகர்கள், நடனக் கலைஞர்கள் எல்லோரையும் அழைத்து வந்தும், நகரவில்லை.

அப்போது யாரோ தியாகராஜ சுவாமிகள் அந்தக் கூட்டத்தில் சிக்கி, தாம் நின்ற இடத்திலேயே தவித்துக்கொண்டு இருப்பதாக வந்து தெரிவிக்கவே, அவரை ஓடிச் சென்று அழைத்துக் கொண்டு சுவாமியின் முன்னால் வந்து நிறுத்தியதும்தான் ஊர்வலம் நகரத் தொடங்கியதாம். அப்போது தியாகராஜர் இயற்றிய கீர்த்தனைதான் "ராஜு வெடல ஜூத்தாமு ராரே' என்ற தேசிக தோடி ராகப் பாடல். (குதிரை வாகனமேறி, மன்னர்கள் பலரும் ஊழியம் செய்ய, ஒளிவீசும் நவரத்தினங்கள் இழைத்த நகைகளை அணிந்துகொண்டு கஸ்தூரி ரங்கராஜன் பவனி வருகிறான். சேவிப்போம், வாரீர்!)

பின்னர் தியாகராஜர் திருவரங்கம் கோயில் உள்ளே சென்று, சந்நிதியில் அவர் மட்டும் தனியே அமர்ந்து பாடுகிற கீர்த்தனைதான் "ஓ ரங்க சாயி' என்ற காம்போஜி

ராகப் பாடல்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார், மன்னர் குலசேகரப் பெருமாள் என்று பதினோரு ஆழ்வார்கள் ஸ்ரீரங்கம் கோயிலில் உறையும் ரங்கநாதரைப் பாடியிருக்கிறார்கள். ஆதிசங்கரர், வேதாந்த தேசிகர் என்று தோத்திரங்கள் பாடிய பெரியவர்கள் இன்னொரு புறம்.

சைவத் திருக்கோயில்களுக்கு மட்டுமல்லாமல், வைணவக் கோயில்களுக்கும் வாரி வழங்கிய சோழ மன்னர்கள், திருவரங்கத்துக்கும் அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். மாலிக்காபூர் படையெடுப்புக்குப் பின் சூறையாடப்பட்ட திருவரங்கம் பழைய நிலைக்குத் திரும்பினாலும், மீண்டும் கியாசுதீன் துக்ளக்கின் மகன் படையெடுப்பின்போது அத்தனை ஆபரணங்களையும், செல்வங்களையும் இழந்தது.

தெற்கு மேலும் சூறையாடப்படாமல் இருக்க,விஜயநகர அரசின் குமார கம்பண்ணா தெற்கே அனுப்பப்பட்டு, மதுரை சுல்தானைத் தோற்கடித்த பின்னர்தான், தமிழ்நாட்டுக் கோயில்கள் அழிவிலிருந்து மீட்கப்பட்டன. குமார கம்பண்ணாவின் வெற்றியால் உற்சாகமடைந்த செஞ்சி மன்னன் கோபண்ணா திருமலைக்குச் சென்று, அங்கு பத்திரமாக வைக்கப்பட்டிருந்த உற்சவமூர்த்திகளைத் திரும்பக் கொண்டு வந்து திருவரங்கத்தில் சேர்த்தார். அப்போது மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. நூறு வயதை எட்டிய வேதாந்த தேசிகர் அப்போது அங்கே வந்திருந்து அந்தக் காட்சியைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார். "கோயில் ஒழுகு' இவை பற்றிக் கூறுகிறது. கோயில் ஒழுகு என்பது கோயிலின் வரலாற்றுப் பதிவு.

சரித்திரத் தேர்ச்சியும், தொல்பொருள் ஆய்வில் நிபுணத்துவமும் கொண்ட டாக்டர் சித்ரா மாதவன் திருவரங்கம் பற்றிய வரலாற்றுச் செய்திகளை சுருக்கமாகச் சொல்ல, கர்நாடக இசைப் பாடகி விஜயலக்ஷ்மி சுப்பிரமணியம், "கதிரவன் குணதிசை சிகரம் அடைந்தான்' என்ற பாடலில்  தொடங்கி, முன்பு குறிப்பிட்ட ராஜு வெடல, ஓ ரங்கசாயி, ஏன் பள்ளி கொண்டீர் ஐயா, ஸ்ரீரங்கபுர விஹார என்று திருவரங்கத்தை நம் கண்முன் கொண்டு வந்து இசையால் நிறுத்தினார். தோடியும், காம்போஜியும், பிருந்தாவன சாரங்காவும்,சிந்து பைரவியும் அரங்கில் பரவிப் பரவசமூட்டின.

புகழ்பெற்ற கோயிலின் வரலாற்றை முதலில் கூறிவிட்டு, அந்தக் கோயில் தொடர்பான பாடல்களை ரசிகர்கள் முன்னே பாடும்போது வெறும் கச்சேரி என்ற நிகழ்வைத் தாண்டி, அதற்கு ஒரு தனி அந்தஸ்து கிடைத்து விடுகிறது.

சொற்பொழிவுக்கும், இசை நிகழ்ச்சிக்கும் ரசிகர்களின் ஆதரவு மிகுந்துபோய், நாரத கான சபா சிற்றரங்கம் திணறியதைக் கண்ட செயலர் கிருஷ்ணசாமி, "அடுத்த மாதம் முதல் இந்த நிகழ்ச்சி பெரிய இடமான ஞானானந்தா அரங்கில் நடைபெறும் என்று அறிவித்தார்!

பாபநாசம் சிவன் அவர்களின் புதல்வியார் ருக்மிணி ரமணி இயற்றி, மெட்டமைத்த 108 திவ்ய தேசப் பாடல்கள் கொண்ட நூலை ஆண்டவன் சுவாமிகள் முன்னிலையில், பார்த்தசாரதி சபாவும் சிவானுக்கிரக அமைப்பும் இணைந்து வெளியிட்டன.

திருத்தலங்களின் புகைப்படங்கள், ஸ்வரப்படுத்திய பாடல்கள் என்று வெகு திருத்தமாக, எளிதாகப் பாடுகிற வகையில் புத்தகம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் எழுத்தைப் படிக்க இயலாதவர்களின் வசதிக்காக ஆங்கிலத்திலும் பாடல்கள் அச்சிடப்பட்டிருப்பது வித்தியாசமான முயற்சி.

சில பாடல்கள் தகப்பனார் பாபநாசம் சிவன் அவர்களின் சாயலிலேயே அமைந்திருப்பது, அவருடைய ஆசி மகளுக்குப் பூரணமாக இருப்பதைக் காட்டுகிறது.

வெளியீட்டு நிகழ்ச்சிக்கு முன்னர், அசோக்ரமணி குழுவினர், நின்ற திருக்கோலம் (முக்திநாத்), அழகிய மணவாள (உறையூர்), ஹரசாப விமோசன (திருக்கண்டியூர்) வேதகிரி உறை (திருவெள்ளறை), ஸ்ரீரங்கநாயகி (திருவரங்கம்) என்ற கீர்த்தனைகளைப் பாடி மகிழ்வித்தனர்.

சிட்டி நூற்றாண்டு விழாவில், கோவை ஞானியையும், இந்திரா பார்த்தசாரதியையும் கெüரவித்தார்கள். ஒருமுறை சிட்டி அவர்கள் தி.ஜானகிராமனுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கே வந்த கோவை ஞானியை, "இவர் நம்மில் ஒருவர்' என்று அறிமுகப்படுத்தினாராம். அதில் நெகிழ்ந்து போனார் ஞானி.

இ.பா.வையும், கோவை ஞானியையும், சிட்டியின் மனைவியையும் குறித்து திருப்பூர் கிருஷ்ணனின் உரை சுவாரசியமாக அமைந்திருந்தது. சிறுசிறு நிகழ்ச்சிகளைக்கூட மறவாமல் குறிப்பிட்டார் கிருஷ்ணன்.

"என்னை அழைக்காவிட்டாலும் நான் வந்து கலந்து கொண்டு பேசுவேன்' என்று கூறியிருந்த இலங்கை எழுத்தாளர் எஸ்.பொ., சிட்டி அவர்கள் சிவபாத சுந்தரத்தை இணைத்துக் கொண்டு சிறுகதை வரலாற்றையும், நாவல் வரலாற்றையும் படைத்து, இலங்கை எழுத்தாளர்களை அங்கீகரித்தது போல் இருந்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

சிட்டிக்கு மிகவும் பிடித்த பாரதியார் இல்லத்தில் விழா நடந்தது,எளிமையாக.

சிட்டியின் எழுத்தாற்றலையும் அவர் பிற எழுத்தாளர்களோடு கொண்டிருந்த நெருங்கிய நட்பையும் விவரித்தார் கோபால சுந்தரம்.

கர்நாடக இசைப் பாடகர் சஞ்சய் சுப்பிரமணியன் சிட்டியின் அன்புக்குப் பாத்திரமானவர். அவர் மனைவியுடன் வந்திருந்தார்.

A+ A A-
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.