இந்த வார கலாரசிகன் - Dinamani - Tamil Daily News

இந்த வார கலாரசிகன்

First Published : 10 February 2013 04:27 AM IST

நர்மதா பதிப்பகத்தின் விலைப்பட்டியலை எனக்கு அனுப்பித் தந்திருக்கிறார் அதன் உரிமையாளர் ராமலிங்கம். பொதுவாக விலைப்பட்டியலில் புத்தகங்கள் பற்றிய குறிப்புகளும், விலையும்தான் இருக்கும். நர்மதா பதிப்பக விலைப்பட்டியல் சற்று மேலே போய், சமுதாயக் கடமையையும் உணர்த்த முற்பட்டிருக்கிறது. விலைப்பட்டியலின் பின்புற அட்டையில் "ஐயா, ஒரு நிமிடம்...' என்கிற தலைப்பில் காணப்படும் குறிப்பு இதோ:

"ஒரு நாளில் ஒரு மனிதர் சுவாசிக்கிற உயிர்க்காற்று (ர்ஷ்ஹ்ஞ்ங்ய்) மூன்று பிராணவாயு சிலிண்டர்களுக்குச் சமமானது. ஒரு பிராணவாயு சிலிண்டரின் விலை 700 ரூபாய். ஒரு நாளுக்கான தேவை 2,100 ரூபாய். ஓராண்டுக்கான இதன் மதிப்பு ரூ.7,66,500.

சராசரி ஆயுள் 65 ஆண்டுகளுக்குத் தேவைப்படும் பிராணவாயுவின் மதிப்பு 5,00,00,000 ரூபாய்! இவ்வளவு மதிப்புமிக்க உயிர்க்காற்று எங்கிருந்து கிடைக்கிறது? நம்மைச் சுற்றியுள்ள மரங்களிடமிருந்துதான்! ஓர் அரசமரம், தன்னைச் சுற்றி அரை கிலோ மீட்டர் பரப்பளவு காற்றைத் தூய்மைப்படுத்தி, பிராண வாயுவைத் தரும் பணியைச் செய்கிறது. இதனால்தானோ என்னவோ, நம் முன்னோர்கள் இதனை காக்கும் கடவுள் விஷ்ணுவின் அம்சமாகக் கருதினார்கள்.

நம்மில் மிகச் சிலருக்கே மரங்களின் மதிப்பு தெரிகிறது. எல்லோருக்குமான விழிப்புணர்வு எப்போது வரப்போகிறது..?

மண்ணை நேசிப்போம் } பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்! மரங்களை பாதுகாப்போம் } வளம் பெறுவோம்!'

என்னவொரு உயர்ந்த சிந்தனை, சமூகப் பொறுப்பு. "நர்மதா' ராமலிங்கத்தை நேரில் சந்திக்கும் வாய்ப்பு

எனக்குக் கிடைக்கவில்லை. இதற்காகவே அவரை சந்தித்துப் பாராட்ட வேண்டும்!

இதை எல்லா வீடுகளிலும் கண்ணில் படும்படியாக எழுதி ஒட்டி, நாள்தோறும் படிக்க வைக்க என்ன வழி?

-----------------------------------------

காலம் சில மிகப்பெரிய அறிஞர்களின் பங்களிப்பைக் கூட மறந்துவிடுகிறது. ஆனாலும்தான் என்ன? மறந்து போனவர்கள் அவர்களது பங்களிப்பால் மீண்டும் உயிர்த்தெழுந்து விடுகிறார்களே...

கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழகத்தில் வாழ்ந்த அறிஞர் பெருமக்களில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருந்தவர் பண்டிதர் ம.கோபாலகிருஷ்ண ஐயர். நூலாசிரியராய், உரையாசிரியராய், மொழிபெயர்ப்பாளராய் தமிழ்கூறு நல்லுலகத்தால் மதிக்கப்பட்ட பண்டிதர் ம.கோ.வைத் தமிழ்ப் புலவர்களும், புரவலர்களும் வியந்தும் அயர்ந்தும் போற்றியுள்ளனர்.

மதுரைத் தமிழ்ச் சங்க நிர்வாக அங்கத்தினராகவும், மதுரை மாணவர் செந்தமிழ்ச் சங்கத்தின் நிறுவனராகவும், திருச்சி தேசியக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகவும், நச்சினார்க்கினியன், விவேகோதயம் ஆகிய பத்திரிகைகளின் நிறுவன ஆசிரியராகவும் இருந்தவர் ம.கோ.! பாரதியார் எட்டயபுரத்திலிருந்து மதுரைக்கு வந்தபோது, ம.கோ. தான் அவருக்கு உதவிய அரிய நண்பர். பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிகையில் துணையாசிரியராகச் சேர்வதற்கும் உதவிபுரிந்தவர் ம.கோ.தான்.

பண்டிதர் ம.கோபாலகிருஷ்ணனின் பெருமை அத்துடன் முடிந்துவிடாது. சுவாமி விவேகானந்தர் 1895}ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் இருக்கும்போது "நர்ய்ஞ் ர்ச் ற்ட்ங்

நஹய்ஹ்ஹள்ண்ய்' என்ற தலைப்பில் 13 பாடல்களை ஆங்கிலத்தில் இயற்றினார். அதை "சந்நியாசி கீதம்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்து, "விவேக சிந்தாமணி' இதழில் வெளியிட்டார் ம.கோ.! சுவாமி விவேகானந்தர் தனது மேலைநாட்டு சுற்றுப்பயணங்களை முடித்துக்கொண்டு பாம்பனில் வந்து இறங்கிய போது, மன்னர் பாஸ்கர சேதுபதியுடன் சென்று அவரை வரவேற்றவர்களில் பண்டிதர் ம.கோ.வும் ஒருவர்.

பண்டிதர் ம.கோ.வின் இதழியல் பணி 1909}இல் தொடங்கியது. அவரும் நண்பர் மு.ரா.கந்தசாமிக் கவிராயரும் இணைந்து 1909 ஏப்ரலில் "வித்யா பானு' என்னும் மாத இதழை மதுரையில் தொடங்கினார்கள். ம.கோ., 1901}இல் நிறுவிய "மதுரை மாணவர் செந்தமிழ்ச் சங்க'த்தின் சார்பில் 1916 பிப்ரவரியில் "விவேகோதயம்' எனும் பெயரில் தொடங்கிய மாத இதழில் அவரது பத்திரிகைப் பணி தொடர்ந்தது.

தமிழ்ப் பேரறிஞர்களாக விளங்கிய அரசஞ்சண்முகனார், மு.வேங்கடசாமி நாட்டார், பண்டிதை அசலாம்பிகை அம்மையார், பண்டிதர் எம்.எம்.நாராயண சுவாமி ஐயர், வேங்கடராமையர் முதலானோர் விவேகோதயத்தில் எழுதி வந்தனர். தமிழ்ச் சங்கங்கள் பலவற்றின் நடவடிக்கைகளை இந்த இதழ் மட்டுமே முன்னுரிமை கொடுத்து வெளியிட்டு வந்தது.

பண்டிதர் ம.கோ.வின் இதழியல் ஆற்றல் "நச்சினார்க்கினியன்' எனும் இலக்கிய மாத இதழில் உச்சத்தை எய்தின. அப்போது, பண்டிதர் ம.கோ. திருச்சி தேசியக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி வந்தார். நச்சினார்க்கினியனில் ஆங்கிலக் கவிஞர்களின் பல கவிதைகள் தமிழாக்கம் செய்து வெளியிடப்பட்டன. பல பிரபல ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளையும் ம.கோ. தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

""நமது ஐயர் செய்திருக்கும் மொழிபெயர்ப்பானது, தெரிந்தவர்க்கன்றி மற்றெவர்க்கும் மொழிபெயர்ப்பு எனவே தோன்றாது. இச் செய்யுளில் விளங்கும் சொற்செறிவும், பொருட்செறிவும், நடையின் தெளிவும் ஸ்ரீ. ஐயரின் தமிழறிவையும் யாப்புத் திறமையையும் நன்றே விளக்குகின்றன'' என்று மகாகவி பாரதியார் "இந்தியா' இதழில் வியந்து பாராட்டியுள்ளார்.

பல தமிழறிஞர்களை உருவாக்கிய பெருமையும் பண்டிதர் ம.கோ.வுக்கு உண்டு. தமிழ் மீதும், தேசத்தின் மீதும் அளப்பரிய காதல் கொண்டிருந்த பெருமகனார் அவர். 1915-இல் வெளிவந்த ம.கோ.வின் "அரும் பொருட்டிரட்டு' எனும் நூலை மேலும் ஆய்வுக் குறிப்புகளுடன் செம்பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறார் அவரது மகன்வழிப் பெயர்த்தி பேராசிரியர் முனைவர் உஷா மகாதேவன்.

"அரும் பொருட்டிரட்டு' நூலுக்கு அணிந்துரை எழுதியிருப்பது மகிபாலன்பட்டி மு. கதிரேசன் செட்டி. நமது "பண்டிதமணி' கதிரேசன் செட்டியாரேதான். 1915-இல் வெளிவந்த "அரும் பொருட்டிரட்டு' மூன்று பகுதிகளை உள்ளடக்கியது. அதிலிருந்து இரண்டாம் பகுதியாகிய மொழி பெயர்ப்பை மட்டுமே வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள். விரைவிலேயே ஏனைய பகுதிகளையும் வெளியிடவேண்டும். அரிய பொக்கிஷம். அழிந்துவிடக்கூடாது.

 

---------------------------------------------------

 

திருச்சியில் முனைவர் நெடுஞ்செழியன் தம்பதியர் ஏற்பாடு செய்திருந்த "ஒப்பியல் நோக்கில் செவ்விலக்கியக் கோட்பாடுகள்' என்கிற தலைப்பிலான தமிழாசிரியர்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொள்ளச் சென்றபோது கவிஞர் கீரைத்தமிழன் தனது கவிதைத் தொகுப்பான "கனவு தேசம்' புத்தகத்தைப் பரிசளித்தார் } "படித்துக் கருத்துக் கூறுங்களேன்' என்கிற கோரிக்கையுடன்!

மரபுக் கவிதையின் ஆழ அகலங்களை உணர்ந்தவர்கள், புதுக்கவிதை எழுத முற்படும்போது, சில நெருடல்கள் ஏற்படத்தான் செய்கிறது. அதற்கு, இலக்கணம் பிறழ்ந்த கவிதை புனைகிறோமே என்கிற குற்ற உணர்வுகூடக் காரணமாக இருக்கலாம்.

ஆனாலும்தான் என்ன? புதுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியராகப் பணியாற்றும் கீரைத்தமிழன் என்கிற பீ.அந்தோணிலூயிஸ் தன் எழுத்துச் சிறகை வசீகரமாகவே விரித்துக் காட்டியிருக்கிறார்.

அது என்ன "கீரைத் தமிழன்' என்கிற புனைபெயர்? இப்படி மற்றவர்கள் கேட்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தாரோ என்னவோ?

இமயத்தின் உச்சியில் புலிக்கொடி விற்கொடி ஏற்றினோம் தமிழ்க் கொடிதான் ஏற்ற மறந்தோம்!

A+ A A-
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.