"தலிபான் பயங்கரவாத அமைப்புடன் பாகிஸ்தான் அரசு ரகசியப் பேச்சுவார்த்தை' - Dinamani - Tamil Daily News

"தலிபான் பயங்கரவாத அமைப்புடன் பாகிஸ்தான் அரசு ரகசியப் பேச்சுவார்த்தை'

First Published : 31 August 2013 11:27 PM IST


பாகிஸ்தானில் தொடர்ந்து வரும் வன்முறைச் சம்பவங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தலிபான் பயங்கரவாத அமைப்புடன் அரசு அதிகாரபூர்வமற்ற வகையில் ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்நாட்டு தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பர்வேஸ் ரஷீத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இஸ்லாமாபாதில் இருந்து வெளிவரும் "டான்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியது: அரசுத் தரப்புரக்கும், தலிபான் அமைப்புக்கும் இடையே அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. நாட்டில் அமைதியை மீண்டும் ஏற்படுத்துவதற்காக அரசு அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறது. தலிபான் அமைப்புடன் பல்வேறு நிலைகளில் அரசு தொடர்பு கொண்டு வருகிறது.

தலிபான் அமைப்புடன் ஒரு மாதத்துக்குள் அதிகாரபூர்வமான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒரு உத்தி வகுக்கப்பட்டு வருவதாக ஜாமியத் உலேமா-இ-இஸ்லாம் (எப்) கட்சித் தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் கூறியுள்ளார். அவர் மிகவும் பொறுப்பான மனிதர். அவர் கூறுவது சரிதான்.

பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக இருக்கும் தலிபான் அமைப்பின் எந்தக் குழுவுடனும் பேச்சு நடத்த அரசு தயாராக உள்ளது. எனினும், இப்போது தலிபான் அமைப்பின் எந்தக் குழுவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று என்னால் கூற முடியாது.

ஏனெனில், இப்போது நாங்கள் இரண்டு குழுக்களுடன் பேசி வருகிறோம். மேலும் ஒரு குழு எங்களுடன் பேச விரும்பினால், நாங்கள் அதை வரவேற்போம்.

நாட்டில் அமைதியை மீண்டும் ஏற்படுத்துவதே அரசின் முக்கிய நோக்கமாகும். அதைச் சாதிக்க தன்னால் ஆன அனைத்தையும் அரசு செய்யும். நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிக்க வேண்டியுள்ளது. அதற்காக, அனைத்து வாய்ப்புகளும் பயன்படுத்தப்படும்.

தலிபான்களுடன் அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து எதிர்க்கட்சிகளை நாங்கள் எப்போதும் கலந்தாலோசித்து வந்துள்ளோம். குறிப்பாக நாடாளுமன்றத்தில் கலந்து பேசியுள்ளோம். எனினும், தலிபான்களுடன் பேச்சு நடத்தும் அரசுக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் யாரும் இடம்பெறவில்லை.

இது அரசுக்கும், தலிபான் அமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைதான் என்பதால் இதில் எதிர்க்கட்சித் தலைவர்களை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் பர்வேஸ் ரஷீத் தெரிவித்ததாக "டான்' பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது.

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.