தைவான் அதிபருடன் டிரம்ப் பேச்சு: சீனா கடும் கண்டனம்

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தைவான் அதிபருடன் தொலைபேசியில் உரையாடியதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது.
தைவான் அதிபருடன் டிரம்ப் பேச்சு: சீனா கடும் கண்டனம்

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தைவான் அதிபருடன் தொலைபேசியில் உரையாடியதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது.
தைவான் அதிபர் சய்-யிங்வென்னுடன் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை தொலைபேசி மூலம் பேசினார். அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு சய்-யிங்வென் வாழ்த்து தெரிவித்தார். அவருடைய வாழ்த்துக்கு டிரம்ப் நன்றி தெரிவித்தார். இந்த தகவலை டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டார். இதையடுத்து, தைவான் அதிபர் சார்பில் வெளியான செய்திஹக் குறிப்பில், ஆசியாவை பாதிக்கும் பிரச்னைகள் குறித்து இருவரும் பேசியதாகக் குறிப்பிட்டிருந்தது.
இந்த தொலைபேசி உரையாடல் விவரம் வெளியானதும், சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தது. அதன் செய்தித் தொடர்பாளர் பெய்ஜிங்கில் கூறியதாவது:
"ஒரே சீனா' என்ற கொள்கையின் அடிப்படையில் அமெரிக்காவும் சீனாவும் உறவு மேற்கொண்டு வருகின்றன. அந்தக் கொள்கையை அனைத்துத் தரப்பினரும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். இது தொடர்பாக சீனா-அமெரிக்கா 3 கூட்டறிக்கைகளை வெளியிட்டுள்ளன. தைவான் விவகாரத்தை கவனத்தோடு கையாள வேண்டும். சீனா-அமெரிக்க உறவில் அநாவசியமாகத் தலையிடும் வகையில் யாரும் செயல்படக் கூடாது என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
அதிபராகப் பொறுப்பேற்கும் முன்னர், உலக நாடுகளின் தலைவர்களோடு தொலைபேசி மூலம் டிரம்ப் உரையாடி வருகிறார். அந்த வகையில் அவர் தைவான் அதிபர் சய்-யிங்வென்னை அழைத்துப் பேசினார் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் அந்த தொலைபேசி அழைப்பு தைவான் அதிபரிடமிருந்து வந்தது என்று பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது.
அதே சமயத்தில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங்-யி கூறியதாவது: இந்த தொலைபேசி உரையாடல் தைவானின் தந்திரச் செயலாகும். "ஒரே சீனா' என்ற கொள்கைக்கும் சீன-அமெரிக்க உறவுக்கும் எந்த பாதிப்பும் வராது என்றார்.
1949-ஆம் ஆண்டு நிகழ்ந்த உள்நாட்டுப் போரையடுத்து, தைவான் தீவில் சுயாட்சி நிலவி வருகிறது.
இருந்தபோதிலும், சீனாவிடமிருந்து விடுதலை பெற்ற சுதந்திர நாடாக தைவான் அறிவித்துக் கொள்ளவில்லை. இரு பகுதி தலைமைக்கும் சிக்கலான உறவு நிலவுகிறது. தைவானை தங்களது நாட்டின் பகுதியாகவே சீனா இன்னும் கருதி வருகிறது. இரு பகுதிகளும் அரசியல் ரீதியாக ஒரு நாள் மீண்டும் இணையும் என்று காத்திருக்கிறது.
அண்மைத் தேர்தலில் ஆட்சியை இழந்த குவோமின்டாங் கட்சி சீனாவுடன் மிக நெருக்கமாகச் செயல்படத் தொடங்கியது. அக்கட்சியின் இந்த நிலைப்பாடு பெரும்பான்மையான தைவான் மக்களிடையே எடுபடவில்லை. அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அந்தக் கட்சி தோல்வியைத் தழுவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com