இந்தியாவால் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க வேண்டும்: ஐ.நா.விடம் பாகிஸ்தான் வேண்டுகோள்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துவது; இருதரப்பு உறவுகளுக்கு முட்டுக்கட்டை போடுவது போன்ற இந்தியாவின் செயல்களால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க ஐ.நா. உதவ வேண்டும்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துவது; இருதரப்பு உறவுகளுக்கு முட்டுக்கட்டை போடுவது போன்ற இந்தியாவின் செயல்களால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க ஐ.நா. உதவ வேண்டும் என்று பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் அயல்நாட்டு விவகாரத்துக்கான சிறப்பு உதவியாளர் சையது தாரிக் ஃபதேமி, அமெரிக்காவில் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது அவர், ஐ.நா. பொதுச் செயலராக பொறுப்பேற்கவுள்ள அன்டானியோ குட்டெரெஸ், துணைப் பொதுச் செயலர் ஜேன் ஏலியஸன் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு குறித்து ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக ஐ.நா. பொதுச் செயலரிடம் சையது தாரிக் முறையிட்டார். காஷ்மீரில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களிலிருந்து உலக நாடுகளின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவே இத்தகைய நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டு வருவதாகவும் தாரிக் தெரிவித்தார்.
இரு தரப்பு உறவுகள் மேம்படுவதற்காக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஆனால், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் அராஜகங்களில் ஈடுபடுவதாகக் கூறிய தாரிக், சமீபத்தில் காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையால் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
காஷ்மீர் விவகாரம் ஐ.நா.வால் நீண்டகாலமாக தீர்வு காண முடியாமல் இருப்பதை சுட்டிக்காட்டிய தாரிக், இப்பிரச்னையில் ஐ.நா. உடனடியாக தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணித்து தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதி நிலவுவதை உறுதி செய்யுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பாகிஸ்தானின் கோரிக்கைகளை கவனமாக கேட்ட ஐ.நா. பொதுச் செயலர் குட்டரெஸ், இரு நாடுகள் இடையே அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தையை தொடங்குவது அவசியம் என்றும், இதற்கு ஐ.நா. நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com