என்றென்றும் நினைவில் நிற்கும் தலைவர் ஜெயலலிதா: அமெரிக்க வாழ் தமிழர்கள் புகழாரம்

என்றென்றும் நினைவில் நிற்கும் தலைவர் ஜெயலலிதா: அமெரிக்க வாழ் தமிழர்கள் புகழாரம்

அசாத்திய துணிச்சலுக்கும், இரும்பினை ஒத்த உறுதிக்கும் பெயர் பெற்ற தலைவரான ஜெயலலிதா, மக்களால் என்றென்றும் நினைவுகூரப்படுபவராக இருப்பார்

அசாத்திய துணிச்சலுக்கும், இரும்பினை ஒத்த உறுதிக்கும் பெயர் பெற்ற தலைவரான ஜெயலலிதா, மக்களால் என்றென்றும் நினைவுகூரப்படுபவராக இருப்பார் என்று அமெரிக்க வாழ் தமிழர்கள் புகழாரம் சூட்டினர்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை இரவு காலமானார். அவரது மறைவால் தமிழக மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ள அதேவேளையில், உலகெங்கும் இருக்கும் தமிழர்களும் அதேயளவு வேதனையை அடைந்துள்ளனர்.
குறிப்பாக, அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் பெரும்பாலானோர் ஜெயலலிதாவின் மறைவால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்தும், அவரது ஆட்சி முறை குறித்தும் அமெரிக்க வாழ் தமிழரான ராஜன் நடராஜன் விவரித்துள்ளார். இவர், அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் துணை அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார். தற்போது அந்த மாகாணத்தின் போக்குவரத்துத் துறை ஆணையராக உள்ளார். ஜெயலலிதா குறித்து அவர் கூறியதாவது:
தமிழகம் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் தனி முத்திரையைப் பதித்தவர் ஜெயலலிதா. அந்த இரும்புப் பெண்மணியின் புகழ் தமிழக மக்களால் என்றும் நினைவுகூரப்படும். இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை எந்த அரசியல் தலைவரும் வெளிக்காட்டாத வகையிலான அபார துணிச்சலை ஜெயலலிதா வெளிப்படுத்தியுள்ளார்.
சர்வ வல்லமை படைத்த ஒரு நிர்வாகியாகவும், தொலைநோக்குப் பார்வையும், உறுதியும் கொண்ட ஒரு தலைவராகவும் ஜெயலலிதா திகழ்ந்தார். இன்று இந்திய அரசியலில் அவரது மறைவால் ஒரு பெரிய வெற்றிடம் உருவாகியுள்ளது. அந்த இடத்தை நிரப்ப இனியொருவர் பிறக்கப்போவதில்லை என்பதே நிதர்சனம்.
அரசியலில் பெரிய அளவிலான ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ள தலைவர் அவர். ஜெயலலிதாவால் இனி ஒன்றும் செய்ய முடியாது என்று உலகமே கருதிய தருணங்களில் எல்லாம், விஸ்வரூபம் எடுத்த ஃபீனிக்ஸ் பறவை அவர். இப்போதும், கடவுள் அவருக்கு விதித்த மரணம் என்ற சவாலை வென்று வந்துவிட மாட்டாரா? என்று உலகத் தமிழர்கள் அனைவரும் ஏங்குகின்றனர்.
தமிழகத்தில் ஏழை - நடுத்தர மக்களின் வளர்ச்சிக்காகவும், கிராமப்புற மேம்பாட்டுக்காவும் அவர் செய்து தந்த நலத்திட்டங்கள் காலத்தால் அழிக்க முடியாதது. எந்த முதல்வர்களும் இதுவரை செய்யாதது. இதன் காரணமாகவே, மக்கள் மனதில் அவர் நிலைத்து நின்றிருக்கிறார். இந்திய அரசியலில் ஜெயலலிதாவைப் போன்று வரலாறு படைத்தவர்கள் யாருமில்லை என ராஜன் நடராஜன் தெரிவித்தார்.
ஜெயலலிதா குறித்து மிச்சிகன் பல்கலைக்கழக உளவியல் பேராசியர் ராம் மகாலிங்கம் கூறுகையில், "திராவிடக் கட்சிகள் பழைமைவாதத்தை பேசிக்கொண்டிருந்த சமயத்தில், பெண்களை முன்னேற்றுவதற்கான திட்டங்களைக் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. பெரிய தலைவர்களாக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட பெண்களின் மனதில் என்றும் உத்வேகம் அளித்து வருபவராக ஜெயலிதா விளங்குவார்' என ராம் மகாலிங்கம் கூறினார்.
இதேபோல், அமெரிக்க பல்கலைக்கழகத்தில் காட்சித் தகவியல் துறை ஆராய்ச்சியாளரான ஸ்ரீராம் மோகன் கூறுகையில், "இந்தியாவில் 24 மணிநேர செய்தித் தொலைக்காட்சிகள் வளர்ந்த காலகட்டத்தில், ஜெயலலிதா ஓர் ஊழல்வாதியாகவும், தமது ஆதரவாளர்களை அடிமைப் போல் நடத்துபவராகவும் சித்திரிக்கப்பட்டார். ஆனால், மாநில உரிமைகளுக்காக போராடிய அவரது நிலைப்பாடும், பெண்களின் வளர்ச்சிக்காக அவர் எடுத்த நடவடிக்கைகளும் அந்த பிம்பத்தை சுக்குநூறாக உடைத்துவிட்டன' என்றார் ஸ்ரீராம் மோகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com