சீனாவுக்கான புதிய தூதரை அறிவித்தார் டிரம்ப்

சீனாவுக்கான அடுத்த தூதரை டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது டொனால்ட் டிரம்ப், டெரி பிரான்ஸ்டாட்.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது டொனால்ட் டிரம்ப், டெரி பிரான்ஸ்டாட்.

சீனாவுக்கான அடுத்த தூதரை டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் பதவியேற்கவிருக்கிறார். இந்நிலையில், தனது அரசின் முக்கியப் பதவிகளுக்கான நபர்களை அறிவித்து வருகிறார்.
அமெரிக்கா - சீனா உறவில் முக்கியத்துவம் வாய்ந்த தூதர் பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்று ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டு வந்தது. அந்த வகையில், டெரி பிரான்ஸ்டாட் (70) சீனாவுக்கான புதிய தூதராக அறிவிக்கப்பட்டார்.
சீனாவின் நண்பர் என்று கருதப்படும் அவர் தற்போது அயோவா மாகாண ஆளுநராக உள்ளார். அவர் அடுத்த சீனத் தூதராகப் பொறுப்பேற்பார் என்று அறிவித்த டொனால்ட் டிரம்ப் மேலும் கூறியதாவது:
டெரி பிரான்ஸ்டாட் நீண்ட அரசியல் நிர்வாக அனுபவம் பெற்றவர்.
தற்போதைய சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடனும், அந்நாட்டின் முக்கியத் தலைவர்களுடனும் நீண்ட காலமாக நெருங்கிப் பழகியவர் அவர். அயோவா மாகாண ஆளுநர் என்கிற முறையில், சீனாவுடனான வர்த்தக உறவுகளின் மேம்பாட்டுக்கு பெரும் முயற்சி எடுத்தார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் நமது நாட்டின் தூதராக அவர் சிறந்த முறையில் செயல்படுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார் டொனால்ட் டிரம்ப்.
இது குறித்து டெரி பிரான்ஸ்டாட் கூறியதாவது: அமெரிக்காவின் பிரதிநிதியாக, சீனா போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நாட்டுக்குச் செல்வதை மிகப் பெரிய கெளரவமாகக் கருதுகிறேன். எனது குடும்பத்தாருடன் கலந்தாலோசித்து இந்த மிகப் பெரிய பொறுப்பை ஏற்க முடிவு செய்தேன்.
சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை நான் பல ஆண்டுகளாக அறிவேன். எங்களது நீண்ட கால நட்பை அமெரிக்கா - சீனா உறவு மேம்படவும் அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சி பெறும் வகையிலும் பயன்படுத்திக் கொள்வேன் என்றார்.
நான்கு ஆண்டு பதவிக் காலம் உள்ள மாகாண ஆளுநர் பதவிக்கு டெரி பிரான்ஸ்டாட் 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க வரலாற்றில் நீண்ட காலம் ஆளுநராகப் பதவி வகித்து வருபவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சீன அதிபஞ ஜீ ஜின்பிங், அயோவா மாகாணத்தின் விவசாய முறைகளைப் பற்றி அறிய சீனாவிலிருந்து 1985-ஆம் ஆண்டு வந்த குழுவில் இளம் அரசு அதிகாரியாக இடம் பெற்றார். அந்த மாகாண ஆளுநரான டெரி பிரான்ஸ்டாடுக்கு அப்போது அறிமுகமானார். அவர்களது நட்பு அப்போது முதல் தொடர்ந்து வந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
சீனா வரவேற்பு
தங்கள் நாட்டுக்கான அடுத்த அமெரிக்க தூதராக டெரி பிரான்ஸ்டாட் நியமிக்கப்பட்டுள்ளதற்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது.
சீனாவின் நெடுநாள் நண்பர் தூதராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சியும் திருப்தியும் அளிப்பதாக இருக்கிறது என்று சீனா தெரிவித்தது.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லூ காங் இது குறித்து தெரிவித்தாவது:
சீன மக்களின் நெடுநாள் நண்பர் டெரி பிரான்ஸ்டாட். சீனா - அமெரிக்கா இடையேயான உறவை மேம்படுத்துவதில் அவர் முக்கியப் பங்கு வகிப்பார் என்று நம்புகிறோம். இரு நாட்டு அரசுகளுக்கு இடையே பாலமாக அவர் சிறப்பான முறையில் செயல்படுவார். அவரது நியமனம் மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிப்பதாக உள்ளது என்றார் அவர்.
டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் உலக நாட்டுத் தலைவர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். அவரையும் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். அந்த வகையில், தைவான் அதிபர் சய்-யிங்வென் கடந்த வாரம் டிரம்ப்பை தொடர்பு கொண்டு பேசினார்.
டிரம்ப் - சய்-யிங்வென் தொலைபேசி உரையாடலுக்கு சீனா கடுமையான கண்டனத்தை தெரிவித்தது.
"ஒரே சீனா' என்ற கொள்கையின் அடிப்படையில் அமெரிக்காவும் சீனாவும் உறவு மேற்கொண்டு வருகின்றன. அந்தக் கொள்கையை அனைத்துத் தரப்பினரும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று சீனா குறிப்பிட்டது.
1949-ஆம் ஆண்டு நிகழ்ந்த உள்நாட்டுப் போரையடுத்து, தைவான் தீவில் சுயாட்சி நிலவி வருகிறது.
இருந்தபோதிலும், சீனாவிடமிருந்து விடுதலை பெற்ற சுதந்திர நாடாக தைவான் அறிவித்துக் கொள்ளவில்லை. இரு பகுதி தலைமைக்கும் சிக்கலான உறவு நிலவுகிறது. தைவானை தங்களது நாட்டின் பகுதியாகவே சீனா இன்னும் கருதி வருகிறது. இரு பகுதிகளும் அரசியல் ரீதியாக ஒரு நாள் மீண்டும் இணையும் என்று காத்திருக்கிறது. இதுவே "ஒரே சீனா' கொள்கையின் அடிப்படை.
இந்தப் பின்னணியில் சீனாவின் "நெடுநாள் நண்பர்' என்று கருதப்படும் டெரி பிரான்ஸ்டாட் அந்நாட்டுக்கான அடுத்த தூதராக டொனால்ட் டிரம்ப்பால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அயோவாவில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் - டெரி பிரான்ஸ்டாட்
(கோப்புப் படம்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com