பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்: அமெரிக்கா கண்டிப்பு

பாகிஸ்தான் தன்னாட்டில் உள்ள பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளித்து வருவதை நிறுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று

பாகிஸ்தான் தன்னாட்டில் உள்ள பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளித்து வருவதை நிறுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்கா கண்டிப்புடன் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டர் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கிருந்து இந்தியாவுக்கு வியாழக்கிழமை புறப்பட்ட அவர் விமானத்தில் தன்னுடன் பயணித்த செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது கார்ட்டர் கூறியதாவது:
ஆப்கானிஸ்தானை நிலைகுலைய வைத்ததுடன், அங்கு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட அமெரிக்க மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் வீரர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய பயங்கரவாதிகளுக்கும், இந்தியாவைக் குறித்துவைத்துக் தாக்கும் பயங்கரவாதக் குழுக்களுக்கும் புகலிடம் அளிப்பதை பாகிஸ்தான் தொடரக் கூடாது.
அந்த வகையான பயங்கரவாதமானது பாகிஸ்தானுக்கும் அபாயகரமாக உள்ளது என்பதை அந்நாட்டுத் தலைவர்களிடம் நான் ஏற்கெனவே தெரிவித்துள்ளேன். இந்த உண்மையை பாகிஸ்தான் அங்கீகரிப்பது முக்கியமாகும். பாகிஸ்தான் இவ்வாறு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக அமையும். அதை அவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன் என்றார் ஆஷ்டன் கார்ட்டர்.
அவரது கருத்துகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமெரிக்க வெளியுறவுத் துறையும் கருத்து தெரிவித்துள்ளது. அத்துறையின் துணை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஹக்கானி நெட்வொர்க் போன்ற ஆப்கன் தலிபான் பயங்கரவாதக் குழுக்கள் தனது மண்ணில் இருந்து இயங்குவதை பாகிஸ்தான் தொடர்ச்சியாக சகித்துக் கொண்டிருப்பது தொடர்பாக பாகிஸ்தான் அரசின் உயர்நிலைத் தலைவர்களிடம் நாங்கள் கவலை தெரிவித்துள்ளோம்.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்புடன் செயல்பட ஆப்கன் மற்றும் பாகிஸ்தான் அரசுகளை நாங்கள் தொடர்ந்து ஊக்குவித்து வந்துள்ளோம். அதுதான் அந்தப் பிராந்தியத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்த உதவிகரமாக அமையும் என்றார் மார்க் டோனர்.
அண்மையில் நடைபெற்ற "ஆசியாவின் இதயம்' மாநாட்டில், பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதற்காக பாகிஸ்தானுக்கு இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்கா மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com