அணு ஆயுதங்களைக் கொண்டு பாகிஸ்தானிலிருந்து தற்கொலைத் தாக்குதல் அச்சுறுத்தல்: ஹிலாரி பரபரப்பு பேச்சு

பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகள் கையில் சிக்கி அவற்றைக் கொண்டு தற்கொலைத் தாக்குதல் நிகழும் அச்சுறுத்தல் உள்ளதாக
அணு ஆயுதங்களைக் கொண்டு பாகிஸ்தானிலிருந்து தற்கொலைத் தாக்குதல் அச்சுறுத்தல்: ஹிலாரி பரபரப்பு பேச்சு

பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகள் கையில் சிக்கி அவற்றைக் கொண்டு தற்கொலைத் தாக்குதல் நிகழும் அச்சுறுத்தல் உள்ளதாக அதிபர் பதவி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கூறிய கருத்து வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.
ஜனநாயகக் கட்சியின் முக்கிய ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் அவர் அவ்வாறு தெரிவித்தார் என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் ஹிலாரி பேசியதாவது:

இந்தியா மீது உள்ள பகையுணர்வில், அணு ஆயுதத் தயாரிப்பில் பாகிஸ்தான் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டு அரசைக் கைப்பற்றிவிடுவார்களோ என்ற அச்சத்துடன் வாழ வேண்டியிருக்கிறது. அவ்வாறு நிகழ்ந்தால், பயங்கரவாதிகள் கையில் அணு ஆயுதங்கள் கிடைக்கும் நிலை ஏற்படும். அணு குண்டுகளைக் கொண்டு பாகிஸ்தானிலிருந்து தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்படும் அபாயம் தோன்றும். இதைவிட அச்சுறுத்தும் சூழ்நிலை வேறு எதுவும் இருக்க முடியாது என்று ஹிலாரி அந்தக் கூட்டத்தில் தெரிவித்தார்.

மேலும், அணு ஆயுதப் போட்டி ஏற்படுமா என்று அந்தக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஹிலாரி பதில் அளிக்கையில் அது மிகவும் ஆபத்தான நிலையைத் தோற்றுவிக்கும் என்றார்.

ரஷியா, சீனா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் அணு ஆயுதத் தயாரிப்பில் ஒருவரையொருவர் விஞ்சும் எண்ணத்தில் போட்டி போடும் அபாயம் உள்ளது என்று ஹிலாரி கூறினார்.

அந்தக் கூட்டத்தில் ஹிலாரி கிளிண்டன் பேசியதன் ஒலிப்பதிவு ஜனநாயகக் கட்சி கணினி சேமிப்பகத்தில் ஊடுருவி களவாடப்பட்டது. அந்த உரையின் விவரங்களை வாஷிங்டன் ஃப்ரீ பீக்கன் என்கிற வலைதள ஊடகம் வெளியிட்டது. இந்த ஒலிப்பதிவின் அடிப்படையில் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஹிலாரி கலந்து கொண்ட அந்தக் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் விர்ஜினியா மாகாணத்தில் நடைபெற்றது.

அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ள ஹிலாரி பாகிஸ்தானைக் குறித்துக் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஹிலாரியின் பேச்சு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

"எங்களது பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளானால், இந்தியா மீது அணு குண்டு வீசி, அந்த நாட்டை அழித்துவிடுவோம்' என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் காஜா முகமது ஆசிஃப் உள்ளூர் தொலைக்காட்சிக்கு அண்மையில் அளித்த பேட்டியில் கூறியது நினைவுகூரத்தக்கது.

பாகிஸ்தானில் அணு ஆயுதம்: அமெரிக்கா கவலை

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சரின் அணு ஆயுத மிரட்டல் பேச்சைக் கண்டித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்ததாவது: அணு ஆயுதம், ஏவுகணைகள் வைத்துள்ள நாடுகள் சுயக்கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com