இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடிப்பு: சீனா கவலை

"இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நீடித்து வருவது கவலையளிக்கிறது; இரு நாடுகளும் நிதானத்துடன் செயல்பட வேண்டும்' என்று சீனா தெரிவித்துள்ளது.

"இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நீடித்து வருவது கவலையளிக்கிறது; இரு நாடுகளும் நிதானத்துடன் செயல்பட வேண்டும்' என்று சீனா தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரி பகுதியிலுள்ள ராணுவ தலைமையகம் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலுக்கு பதிலடியாக, அந்நாட்டு எல்லைக்குள் சென்று, பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவத்தினர் தாக்கி அழித்தனர். இத்தாக்குதலின் போது, பயங்கரவாதிகள் மட்டுமின்றி அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீதான இந்திய ராணுவத்தின் நடவடிக்கை தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் சியூங் கூறியதாவது: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் நீடித்து வருவது கவலையளிக்கிறது. இரு தரப்பும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட சீனா தொடர்ந்து முயலும் என்றார் அவர்.
இந்தியாவுக்குத் திரும்பிய அமெரிக்கத் தூதர்: இதனிடையே, அமெரிக்காவில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்த இந்தியாவுக்கான அந்நாட்டுத் தூதர் ரிச்சர்டு வர்மா, இந்தியாவுக்கு அவசரமாகத் திரும்பியுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தனது பயணத் திட்டங்கள் அனைத்தையும் திடீரென ரத்து செய்துவிட்டு அவர் இந்தியாவுக்கு விரைந்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க அரசிடம் இருந்து இந்தியாவிடம் ஏதேனும் தகவலை சேர்ப்பதற்காக அவர் அவசரமாக செல்கிறாரா? என்ற கேள்விக்கு, அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கெர்பி பதிலளித்து கூறியதாவது: அவரிடம் பெரிய பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பல பொறுப்புகளும் சேர்ந்துள்ளன. அதுமட்டுமன்றி, தற்போது முக்கியமான காலகட்டம் என்பதால், இந்தியாவுக்கு உடனடியாக திரும்புவதே பொருத்தமானது என அவர் நினைத்திருப்பார் என்றார் கெர்பி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com