தீங்கிழைக்கும் நோக்கில் பாகிஸ்தானை யாரும் நெருங்க முடியாது

பாகிஸ்தானுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் யாரும் நெருங்க முடியாது என்று அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
தீங்கிழைக்கும் நோக்கில் பாகிஸ்தானை யாரும் நெருங்க முடியாது

பாகிஸ்தானுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் யாரும் நெருங்க முடியாது என்று அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்திய நிலையில், ஷெரீஃப் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் ஆக்கிமிரப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் புதன்கிழமை நள்ளிரவு அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகளும், பாகிஸ்தான் ராணுவத்தினரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவின் இந்த திடீர் ராணுவ நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தலைமையில் அமைச்சரவை அவரசக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் சர்தாஜ் அஜீஸ், பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், வர்த்தகத் துறை அமைச்சர் குர்ரம் தஸ்த்கீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நிலவும் சூழல், எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் நவாஸ் ஷெரீஃப் பேசியதாவது: இந்தியாவின் வரம்பு மீறிய நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த தெற்காசியப் பிராந்தியத்துக்கே அச்சுறுத்துல் ஏற்பட்டுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது.
நமது பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதே பாகிஸ்தானின் விருப்பம். இதனை பலவீனமாக யாரும் கருத வேண்டாம். எங்கள் எல்லைகளையும், மக்களையும் பாதுகாக்க பாகிஸ்தான் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும்.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் பாகிஸ்தானியர் அனைவரும் ஒருமித்த கருத்து கொண்டுள்ளனர். தேவைப்படும்பட்சத்தில், எதிரி நாடு மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் வல்லமையும் பாகிஸ்தானுக்கு உள்ளது.
காஷ்மீரிகளுக்கு தொடர்ந்து ஆதரவு: காஷ்மீரில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களில் இருந்து உலக நாடுகளின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவே பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. தங்களின் சுய நிர்ணய உரிமைகளுக்காக போராடி வரும் காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளிக்கும். காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் முடிவடையாத அத்தியாயம் ஆகும் என்றார் நவாஸ் ஷெரீஃப்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com