புறக்கணிப்பு எதிரொலி: சார்க் மாநாட்டை ஒத்திவைத்தது பாகிஸ்தான்

பாகிஸ்தானில் திட்டமிடப்பட்ட சார்க் உச்சி மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என்று இந்தியா உள்ளிட்ட 5 உறுப்பு நாடுகள் அறிவித்ததை அடுத்து,

பாகிஸ்தானில் திட்டமிடப்பட்ட சார்க் உச்சி மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என்று இந்தியா உள்ளிட்ட 5 உறுப்பு நாடுகள் அறிவித்ததை அடுத்து, அந்த மாநாட்டை பாகிஸ்தான் அரசு ஒத்திவைத்துள்ளது. மாநாடு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

19-ஆவது சார்க் உச்சி மாநாட்டை, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில், வரும் நவம்பர் மாதம் 9-10-ஆம் தேதிகளில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் வெற்றிகரமாக முடிவடைந்துவிட்டன. மாநாட்டில் பங்கேற்க வரும் தலைவர்களை வரவேற்பதற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஆவலுடன் எதிர்பார்த்த்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அரங்கேற்றும் வன்முறைகளில் இருந்து உலகின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக, உரி தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தானே காரணம் என்று யூகத்தின் அடிப்படையில் இந்தியா குற்றம் சாட்டியது. பின்னர், அதே காரணத்தை வைத்து சார்க் மாநாட்டைப் புறக்கணிப்பதற்கு இந்தியா முடிவெடுத்துள்ளது.

அதற்கான காரணத்தை பாகிஸ்தான் ஆராய்ந்து வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னையை முன்வைத்து, பல்வேறு உறுப்பு நாடுகளைக் கொண்ட சார்க் அமைப்பின் உச்சி மாநாட்டை ஒரு நாடு புறக்கணிப்பது, அந்த அமைப்பின் விதிகளை மீறும் செயலாகும்.
இந்நிலையில், சார்க் மாநாடு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநாடு அடுத்து நடைபெறவுள்ள தேதிகள், சார்க் அமைப்பின் தற்போதைய தலைவரான நேபாள அரசு மூலமாக விரைவில் அறிவிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரி தாக்குதல் சம்பவத்தை அடுத்து, இஸ்லாமாபாதில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று இந்தியா முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பூடான் ஆகிய நாடுகளும் மாநாட்டைப் புறக்கணிப்பதாக அறிவித்தன.

இந்நிலையில், அந்த மாநாட்டைப் புறக்கணிப்பதாக இலங்கை அரசும் வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதையடுத்து, மாநாட்டை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com