அருணாசலப் பிரதேசத்துக்கு தலாய் லாமா சென்றால் இந்தியாவுடனான உறவு பாதிக்கும்: சீனா எச்சரிக்கை

அருணாசலப் பிரதேச மாநிலத்துக்கு வருமாறு திபெத்திய ஆன்மிக குரு தலாய் லாமாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால்,

அருணாசலப் பிரதேச மாநிலத்துக்கு வருமாறு திபெத்திய ஆன்மிக குரு தலாய் லாமாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், அமைதி சீர்குலைவதோடு, இந்திய-சீன எல்லைப் பகுதிகளிலும் இருநாட்டு உறவிலும் பாதிப்புகள் ஏற்படும் என்று சீனா எச்சரித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் லூ காங், பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
அருணாசலப் பிரதேசத்துக்கு வருமாறு தலாய் லாமாவுக்கு அழைப்பு விடுத்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதனால், எல்லைப் பகுதிகளின் அமைதியான நிலைத்தன்மைக்கு பங்கம் விளைவதோடு, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவிலும் பாதிப்புகள் ஏற்படும்.
மேலும், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய பகுதியான அருணாசலப் பிரதேசத்துக்கு இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ரிச்சர்டு வர்மா சென்றதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்தியாவும் சீனாவும் இருதரப்பு பேச்சுவார்த்தையை மேற்கொள்வதன் மூலம், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். அந்தப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட இருநாடுகளும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை மூன்றாவது நாடுகள் மதிப்பளிக்க வேண்டும் என்றார் லூ காங்.
அருணாசலப் பிரதேசத்துக்கு வருகை தருமாறு அந்த மாநில முதல்வர் பெமா காண்டு அழைப்பு விடுத்ததை அடுத்து, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அங்கு செல்ல தலாய் லாமா திட்டமிட்டுள்ளார், மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிகிறது.
எனினும், தெற்கு திபெத்தின் ஒரு பகுதியே அருணாசலப் பிரதேசம் என்று சீனா வலியுறுத்தி வருவதோடு, அங்கு இந்தியத் தலைவர்களும் வெளிநாட்டுப் பிரமுகர்களும் செல்வதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதனிடையே, அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்றும், அங்கு அமெரிக்கத் தூதர் சென்றது வழக்கமான நடைமுறைதான் என்றும் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் பதிலடி கொடுத்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com