பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியுடன் பிரதமரின் சகோதரர் திடீர் சந்திப்பு

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீஃப், அந்நாட்டு ராணுவத்தின் தலைமை தளபதி ரஹீல் ஷெரீஃபை சந்தித்துப் பேசினார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீஃப், அந்நாட்டு ராணுவத்தின் தலைமை தளபதி ரஹீல் ஷெரீஃபை சந்தித்துப் பேசினார்.
தலைநகர் இஸ்லாமாபாத் அருகே ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற அந்த திடீர் சந்திப்பில் அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் செளத்ரி நிஸார் அலி கான், மத்திய நிதி அமைச்சர் இஷாக் தார், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தலைவர் தளபதி ரிஸ்வான் அக்தர் ஆகியோரும் இருந்தனர்.
இந்த சந்திப்பு தொடர்பாக ராணுவ செய்தித் தொடர்புப் பிரிவு தெரிவித்ததாவது: தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகக் கூறப்படும் புகார் குறித்த பொய் செய்தி தொடர்பாக அரசு மேற்கொண்டு வரும் விசாரணை குறித்து முழு விவரங்களை அளிக்க அந்த சந்திப்பு நடைபெற்றது என்று தெரிவித்தது. ராணுவம் நாட்டின் ஸ்திரத்தன்மையில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்று ராணுவ செய்தித் தொடர்புப் பிரிவு தெரிவித்தது.
அரசுக்கும் ராணுவத்துக்கும் கருத்து வேற்றுமை, கசப்புணர்வு இருப்பதாகவும், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் பாகிஸ்தான் நாளிதழ் சில வாரங்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டது. பயங்கரவாதக் குழுக்களுக்கு ஐ.எஸ்.ஐ. ஆதரவளித்து வருவதால் கருத்து வேற்றுமை ஏற்பட்டதாக அந்த நாளிதழ் தெரிவித்தது. இதுபோன்ற செய்தி வெளியானதில் ராணுவம் அதிருப்தி தெரிவித்தது.
இதையடுத்து, ராணுவத் தலைமையை சந்தித்து அந்த செய்தி தொடர்பாக அரசு சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
பிரதமரின் குடும்பத்தினர் ஊழல் புகார்களுக்கு உள்ளாகிய நிலையில், தெஹ்ரீக்-இ-இன்ஸாஃப் கட்சித் தலைவர் இம்ரான் கான் தலைநகரில் அடுத்த வாரம் முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக மிரட்டியுள்ளார். இந்த நிலையில், ராணுவத் தலைமை - பிரதமரின் சகோதரர் சந்திப்பு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com