காஷ்மீர் சூழலின் எதிர்வினையே உரி தாக்குதல்: நவாஸ் ஷெரீஃப்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரியில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின்...
காஷ்மீர் சூழலின் எதிர்வினையே உரி தாக்குதல்: நவாஸ் ஷெரீஃப்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரியில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் எதிர்வினையாக இருக்கலாம் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றிருந்த நவாஸ் ஷெரீஃப், நாடு திரும்பும் வழியில் லண்டன் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஓய்வெடுத்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காஷ்மீரில் கடந்த இரண்டு மாதங்களாக பாதுகாப்புப் படையினரின் தாக்குதலால் உயிரிழந்தவர்கள் மற்றும் பார்வையைப் பறிகொடுத்தவர்களின் உறவினர்கள் வேதனையும், கோபமும் கொண்டுள்ளனர்.
எனவே, உரி ராணுவ முகாமில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல், இந்திய அட்டூழியத்தின் எதிர்வினையாக இருக்கலாம்.
அந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அதற்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று விசாரணையே இல்லாமல் இந்தியாவால் எவ்வாறு கூற முடிந்தது?
எந்த ஆதாரமும் இல்லாமல் பாகிஸ்தான் மீது பழி போடுதவதன் மூலம் இந்தியா பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறது.
காஷ்மீரில் அண்மைக் காலமாக பாதுகாப்புப் படையினர் நிகழ்த்தி வரும் தாக்குதலில் 108 பேர் உயிரிழந்ததையும், 150 பேர் பார்வையை இழந்ததையும் இந்த உலகமே அறியும்.
உரி தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது பழி போடுவதை விடுத்து, காஷ்மீரில் அப்பாவி மக்களுக்கு எதிராக தான் செய்து வரும் அட்டூழியங்கள் குறித்து இந்தியா ஆராய வேண்டும்.
காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காணாத வரை அங்கு நிரந்தர அமைதியை ஏற்படுத்த முடியாது என்றார் நவாஸ்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் அமைந்துள்ள ராணுவப் படைப்பிரிவுத் தலைமையகத்தில், ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 18) தாக்குதல் நிகழ்த்தினர். இதில் 18 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
தாக்குதல் நிகழ்த்திய 4 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடந்த 20 ஆண்டுகளில் காஷ்மீரில் ராணுவத்தினர் மீது நிகழ்த்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இது என்று கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இதற்குக் காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தார்.
இந்தசம்பவத்தைத் தொட ர்ந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவில் பதற்றம் அதிகரித்தது.
ஐ.நா. பொது சபைக் கூட்டம் உள்ளிட்ட அனைத்து சர்வதேச நிகழ்ச்சிகளிலும், பாகிஸ்தான் பயங்கரவாதத்தைத் தூண்டி விடுவதாக இந்தியாவும், காஷ்மீரில் மனித உரிமைகளை இந்தியா மீறிவருவதாக பாகிஸ்தானும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.
உரி தாக்குதல் மூலம் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானைத் தனிமைப்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
எனினும், அதே உரி தாக்குதல் விவகாரத்தைப் பயன்படுத்தி, காஷ்மீர் பிரச்னையில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முயற்சியாக நவாஸ் ஷெரீஃப் இவ்வாறு பேசியுள்ளதாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com