சிரியா அதிபரைப் பதவியிலிருந்து நீக்க அமெரிக்கா முக்கியத்துவம் தரவில்லை

சிரியா அதிபர் பஷார் அல்-அஸாதை பதவியிலிருந்து நீக்குவதற்கு அமெரிக்கா முக்கியத்துவம் தரவில்லை என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி தெரிவித்தார்.

சிரியா அதிபர் பஷார் அல்-அஸாதை பதவியிலிருந்து நீக்குவதற்கு அமெரிக்கா முக்கியத்துவம் தரவில்லை என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி தெரிவித்தார்.
அதிபர் அல்-அஸாதை எதிர்த்து சிரியாவில் 6 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் சுமார் 3 லட்சம் பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. உள்நாட்டுச் சண்டையால் லட்சக்கணக்கானோர் சிரியாவைவிட்டு வெளியேறி ஐரோப்பாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்து வருகின்றனர். ஜோர்டான், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் முகாம்களிலும் ஆயிரக்கணக்கானோர் தங்கியுள்ளனர்.
சிரியாவில் அமைதி திரும்புவதற்கான முதல் படியாக அதிபரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், தற்போது அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்த நிலையில், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
போர் என்றால் புதிய தந்திரங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அதில் முக்கியக் குறிக்கோள்கள் இருந்தாலும் வழிமுறைகள் மாறும். அல்-அஸாதை பதவியிலிருந்து அகற்றுவதற்கு அமெரிக்கா இப்போது முக்கியத்துவம் தரவில்லை. துருக்கி போன்ற நாடுகளுடன் சேர்ந்து சிரியாவில் நீடித்த அமைதிக்கான அரசியல் திட்டங்களை அமெரிக்கா வகுக்கும் என்றார் நிக்கி ஹேலி.
சிரியா மக்கள்தான் அவர்களின் தலைவர்கள் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸன் அண்மையில் தெரிவித்ததைத் தொடர்ந்து ஐ.நா.வுக்கான தூதர் நிக்கி ஹேலி இக்கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
சிரியாவில் அதிபர் பஷார் அல்-அஸாதுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆதரவாக ஆயுதங்கள் வழங்குவது உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com