ஆஸ்திரேலியாவில் இந்திய போலி மருத்துவருக்கு ரூ.20 லட்சம் அபராதம்

ஆஸ்திரேலியாவில் இந்தியாவைச் சேர்ந்த போலி மருத்துவருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்தியாவைச் சேர்ந்த போலி மருத்துவருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புணேவைச் சேர்ந்த ஷியாம் ஆச்சாரியா (40) என்ற அந்த நபர், தன்னுடன் தங்கியிருந்த சாரங் சீத்தல் என்ற மருத்துவருடைய சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களைத் திருடி, அவரது பெயரில் பிரிட்டனில் இருந்து மருத்துவர் என்ற பெயரில் கடந்த 2003-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.
அங்கு சாரங்கின் பெயரில் நியூ செளத் வேல்ஸ் மருத்துவ மையத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவராகப் பணியாற்றியுள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவில் குடியுரிமைபெற்று அங்கு சாரங் என்ற பெயரில் சொத்துகளையும் வாங்கியுள்ளார்.
இந்நிலையில், உண்மையான மருத்துவர் சாரங் சீத்தல் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றபோது தனது பெயரில், தனது ஆவணங்களைப் பயன்படுத்தி ஏற்கெனவே ஒருவர் ஆஸ்திரேலியாவுக்கு சென்று மருத்துவராகப் பணியாற்றி வருவதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து ஆஸ்திரேலிய போலீஸாருக்கு குடியேற்றத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, போலி மருத்துவர் ஷியாம் ஆச்சாரியாவை ஆஸ்திரேலிய போலீஸார் கைது செய்தனர். கடந்த 1999-2000-ஆம் ஆண்டில் இந்தியாவில் மருத்துவர் சாரங்கும், ஷியாமும் ஒன்றாகத் தங்கியிருந்தபோது, அவரது சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களைத் திருடி, அவற்றை மோசடிக்கு ஷியாம் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை விசாரித்த ஆஸ்திரேலிய நீதிமன்றம் அவருக்கு ரூ.20 லட்சம் அபராதமும், வழக்குச் செலவாக ரூ.15 லட்சம் செலுத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com