குல்பூஷண் மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு: மத்திய அரசு

இந்திய முன்னாள் கடற்படை வீரர் குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் பிறப்பித்த மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
குல்பூஷண் மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு: மத்திய அரசு

இந்திய முன்னாள் கடற்படை வீரர் குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் பிறப்பித்த மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

  • மேலும், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு மற்றும் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை ஆகியவற்றின் நகல்களை வழங்குமாறும் பாகிஸ்தானிடம் இந்தியா கோரியுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை வீரரான குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானில் நாச வேலைகளை நிகழ்த்த சதிச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு அண்மையில் மரண தண்டனை விதித்தது.
பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் அண்மையில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவில் விரிசல் ஏற்படும் என எச்சரித்திருந்தார். மேலும், குல்பூஷணுக்கு எதிராக பாகிஸ்தான் நீதிமன்றம் நியாயமான முறையில் விசாரணை நடத்தவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
எனினும், இந்த விவகாரத்தில் தங்களின் நிலைப்பாடு உறுதியாக இருப்பதாக பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்தியத் தூதர் சந்திப்பு: இந்நிலையில், குல்பூஷண் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் தெஹ்மினா ஜஞ்சுவாவை இந்தியத் தூதர் கௌதம் பம்பாவாலே வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, குல்பூஷண் ஜாதவுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த தீர்ப்பு மற்றும் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை ஆகியவற்றின் நகல்களை வழங்கும்படி கௌதம் பம்பாவாலே கோரினார்.
இதுகுறித்து கௌதம் பம்பாவாலே, இஸ்லாமாபாதில் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
குல்பூஷண் விவகாரத்தில் இந்தியா நிச்சயமாக மேல்முறையீடு செய்யும். அதற்கு சில முக்கியமான ஆவணங்கள் தேவைப்படுகின்றன. எனவேதான், இந்த வழக்கின் தீர்ப்பு மற்றும் குற்றப்பத்திரிகை ஆகியவற்றின் நகல்களை வழங்கும்படி இந்திய அரசு சார்பில் கோரியுள்ளேன். மேலும், அவருக்கு இந்தியத் தூதரகத்தின் உதவி கிடைக்க அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். குல்பூஷண் ஜாதவுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தூதரக உதவி கூட இதுவரை 13 முறை மறுக்கப்பட்டுள்ளது என்றார் கௌதம் பம்பாவாலே.
வலுவான ஆதாரங்களின் பேரிலேயே தீர்ப்பு: இதனிடையே, குல்பூஷண் ஜாதவ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் இருந்ததன் அடிப்படையிலேயே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சர்தாஜ் அஜீஸ் தெரிவித்துள்ளார்.
"குல்பூஷணுக்கு ஆதரவாக வாதாடக் கூடாது': இந்நிலையில், குல்பூஷண் ஜாதவுக்கு ஆதரவாக வாதாட முன்வரும் வழக்குரைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று லாகூர் உயர் நீதிமன்ற பார் வழக்குரைஞர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து லாகூர் உயர் நீதிமன்ற பார் வழக்குரைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலர் அமீர் சயீது ரான் கூறியதாவது:
பாகிஸ்தானுக்கு எதிராக சதிச் செயலில் ஈடுபட்ட இந்தியர் குல்பூஷண் ஜாதவைத் தூக்கிலிட வேண்டும். அவருக்கு ஆதரவாக பாகிஸ்தானைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் யாரும் வாதாட கூடாது. அவ்வாறு வாதாட முன்வரும் வழக்குரைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
குல்பூஷண் விவகாரத்தில் வெளிநாடுகளிலிருந்து வரும் நிர்பந்தத்துக்கு பாகிஸ்தான் அரசு அடிபணியக் கூடாது. இந்திய உளவாளியான குல்பூஷணுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com