ஜாதவுக்கு தூதரக உதவி வழங்க முடியாது: பாகிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியக் கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவிகளை அளிக்க முடியாது

பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியக் கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவிகளை அளிக்க முடியாது என்று பாகிஸ்தான் ராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக, குல்பூஷண் ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் கடந்த வாரம் மரண தண்டனை விதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் கடும் விளைவுகளை பாகிஸ்தான் சந்திக்க நேரிடும் என்று இந்தியா எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதையடுத்து, இஸ்லாமாபாதில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் தெஹ்மினா ஜன்ஜுவாவை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய இந்தியத் தூதர் கெளதம் பம்பாவாலே, குல்பூஷண் ஜாதவுக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் நகல், பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகல் ஆகியவற்றை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும், குல்பூஷண் ஜாதவ், இந்தியத் தூதரக உதவியைப் பெறும் வகையில் உதவுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசிய பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆசிஃப் கஃபூர், ''சட்டப்படி, குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவிகளை வழங்க முடியாது'' என்றார்.
எனினும், குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவியை வழங்க மறுத்ததாக பாகிஸ்தானிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்று தில்லியில் உள்ள இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com