எப்போதும் போர் ஆயத்த நிலையில் ராணுவம் இருக்க வேண்டும்: சீன அதிபர் பேச்சு

சீன ராணுவம் எப்போதும் போர் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும் என்று அதிபர் ஜீ ஜின்பிங் கூறியுள்ளார்.
எப்போதும் போர் ஆயத்த நிலையில் ராணுவம் இருக்க வேண்டும்: சீன அதிபர் பேச்சு

சீன ராணுவம் எப்போதும் போர் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும் என்று அதிபர் ஜீ ஜின்பிங் கூறியுள்ளார்.
அந்நாட்டின் ராணுவத் தலைமையகத்தைப் பார்வையிட்ட பின்னர் வீரர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்று, அவர் ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது: சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நாட்டுக்கும் 2017-ஆம் ஆண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கம்யூனிஸ சித்தாந்தம் என்னும் கோட்டையை நீங்கள் மேலும் வலுப்படுத்த வேண்டும். பாதுகாப்புப் படைகளின் சீரமைப்பு, மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். எப்போதும் போர் ஆயத்தத்துடன் இருக்க வேண்டும்.
எந்தச் சூழலிலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு மற்றும் மத்திய ராணுவ ஆணையம் இடக்கூடிய எந்த உத்தரவையும் உறுதியுடன் நிறைவேற்ற எப்போதும் ஆயத்த நிலையில் நமது படைகள் இருக்க வேண்டும்.
நாட்டின் அனைத்துத் துறைகளிலும் காணப்படும் ஊழலை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்துத் துறைகளிலும் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறும்போது, பாதுகாப்புத் துறையில் நிலவும் ஊழல் முறைகேடுகளையும் குறிப்பிட்டாக வேண்டும். ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் முழு விசுவாசத்தைப் பெறும் வகையில் இத்துறையில் நிலவும் அரசியல் ரீதியான ஊழல் ஒழிக்கப்படும் என்றார் அவர்.
உலகின் மிகப் பெரிய பாதுகாப்புப் படையான சீன ராணுவத்தில் 23 லட்சம் வீரர்கள் உள்ளனர். தெற்கு சீன கடல், கொரிய தீபகற்பம் ஆகிய பகுதிகளில் பதற்ற நிலை நிலவி வருகிறது. வட கொரிய விவகாரத்தையடுத்து, அமெரிக்க கடற்படையின் மிகப் பெரிய போர்க்கப்பலான கார்ல் வின்ஸன் ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணிக்காக கொரிய தீபகற்பப் பகுதிக்கு விரைத்துள்ளது. 
இந்த நிலையில், சீன ராணுவம் எப்போதும் போர் ஆயத்தத்துடன் இருக்க வேண்டும் அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்கின் பேச்சு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிபர் ஜீ ஜின்பிங் அந்நாட்டின் சர்வ அதிகாரத்தையும் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமாவார். மேலும் சீன பாதுகாப்புப் படைகளின் தலைமைக் கட்டுப்பாட்டு அமைப்பான மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் அவர் பொறுப்பு வகிக்கிறார். 
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்த நாட்டின் அனைத்து முக்கியப் பதவிகளையும் ஒரே நபர் வகிக்கும் நிலை உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com