பிரான்ஸ் அதிபர் தேர்தல்: இறுதிச் சுற்றில் மேக்ரான், மரீன் லெபென் போட்டி

பிரான்ஸ் அதிபரைத் தேர்வு செய்வதற்கான இறுதிச் சுற்றில் ஆன் மார்ச் கட்சியைச் சேர்ந்த இமானுவல் மேக்ரான், தேசிய முன்னணிக் கட்சித் தலைவர் மரீன் லெபென் போட்டியிடுவார்கள்.
இமானுவல் மேக்ரான் மரீன் லெபென்
இமானுவல் மேக்ரான் மரீன் லெபென்

பிரான்ஸ் அதிபரைத் தேர்வு செய்வதற்கான இறுதிச் சுற்றில் ஆன் மார்ச் கட்சியைச் சேர்ந்த இமானுவல் மேக்ரான், தேசிய முன்னணிக் கட்சித் தலைவர் மரீன் லெபென் போட்டியிடுவார்கள்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதற்சுற்றுத் தேர்தலில் முதல் இரண்டு இடங்களை அவ்விருவரும் பிடித்ததைத் தொடர்ந்து, இறுதிச் சுற்றுத் தேர்தலுக்கு அவர்கள் தகுதி பெற்றனர்.
முதற்சுற்றில் 11 பேர் போட்டியிட்டனர். இதில் இமானுவல் மேக்ரான் 23.75 சதவீத வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றார். இரண்டாம் இடத்தைப் பிடித்த மரீன் லெபென் 21.53 சதவீத வாக்குகளைப் பெற்றார்.
முன்னாள் பிரதமர் பிரான்ஸுவா ஃபில்லோன் ஊழல் விவகாரத்தில் சிக்கி மக்கள் ஆதரவை இழந்து 3-ஆம் இடத்தில் வந்தார்.
வெளிநாட்டவர் குடியேற்றம், இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட தீவிர வலதுசாரிக் கட்சியான தேசிய முன்னணியின் தலைவரும் அதிபர் வேட்பாளருமான மரீன் லெபென் முதற்சுற்றை சுலபமாகக் கடந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவார் என்று அனைவரும் கூறி வந்ததைப் போலவே முடிவுகள் அமைந்தன.
அவருடன் மோதப் போவது யார் என்பதை அறியவே தேர்தல் நடைபெற்றது என்று அரசியல் நோக்கர்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில், பல வகையிலும் அரசியலுக்குப் புதியவரான இமானுவல் மேக்ரான் (39) முதற்சுற்றில் முதலிடத்தைப் பிடித்தார். அரசு அதிகாரியாக இருந்த அவர் பின்னர் நிதி நிறுவனத்தில் பணி புரிந்தார். தற்போதைய அதிபர் பிரான்ஸுவா ஹொலாந்தின் ஆலோசகராகவும் பின்னர் குறுகிய காலத்துக்குப் பொருளாதாரத் துறை அமைச்சராகவும் இருந்தார். சென்ற ஆண்டு தனது பதவியிலிருந்து விலகி புதிதாக ஆன் மார்ச் என்ற கட்சியைத் தொடங்கினார். இதுவரை எந்தத் தேர்தலிலும் போட்டியிடாத அவர் இறுதிச் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டால் பிரான்ஸின் மிக இளம் வயது அதிபராகத் திகழ்வார்.
அதிபர் தேர்வுக்கான இறுதிச் சுற்றுத் தேர்தல் வரும் மே மாதம் 7-ஆம் தேதி நடைபெறுகிறது.
தீவிர தேசியவாத கொள்கையும் பொருளாதாரக் கொள்கையும் கொண்ட அரசியல் அனுபவசாலிக்கும் அரசியல் அனுபவமே இல்லாத தாராளமயக் கொள்கையுள்ள இளம் வயது வேட்பாளருக்கும் இடையேயான போட்டியாக அதிபர் தேர்தலின் இறுதிச் சுற்று அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com