தென் சீனக் கடலில் ஆக்கிரமிப்பு: சீனாவுக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் கண்டனம்

தென் சீனக் கடல் பகுதியை சீனா ராணுவமயமாக்கி வருவதற்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில், சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய (இடமிருந்து) ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி பிஷப், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸன், ஜப்பான் வெளியுறவு
பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில், சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய (இடமிருந்து) ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி பிஷப், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸன், ஜப்பான் வெளியுறவு

தென் சீனக் கடல் பகுதியை சீனா ராணுவமயமாக்கி வருவதற்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான பிற ஆசியான் நாடுகளின் கண்டனக் குரல்கள் சுரத்து குறைந்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தங்களது கடுமையான நிலைப்பாட்டை அந்த 3 நாடுகளும் வெளிப்படுத்தியுள்ளன.
தென் சீனக் கடலின் ஏறத்தாழ அனைத்துப் பகுதிகளுக்கும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது.
ஆண்டுதோறும் 5 லட்சம் கோடி டாலர் (சுமார் ரூ.317 லட்சம் கோடி) வர்த்தகம் நடைபெறும் கடல் பாதையான இந்தப் பகுதியில், ஆசியான் அமைப்பைச் சேர்ந்த வியத்நாம், பிலிப்பின்ஸ், மலேசியா, புருணை ஆகிய நாடுகளும், தைவானும் உரிமை கொண்டாடி வருகின்றன.
இதனால் அந்த நாடுகளுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
எனினும், அண்மைக் காலமாக சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை சில நாடுகள் தளர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.
தென் சீனக் கடல் விவகாரத்தில் சீனாவை கடுமையாக எதிர்த்து வந்த பிலிப்பின்ஸ், அந்த நாட்டில் டுடேர்தே அதிபர் பொறுப்பை ஏற்ற பிறகு தனது நிலையைத் தளர்த்தியது.
இதற்குப் பரிசாக, பிலிப்பின்ஸýக்கு ஏராளமான நிதியுதவிகளையும், முதலீடுகளையும் சீனா அளித்தது.
அதேபோல், வியத்நாம் போன்ற நாடுகளும் கடுமையான சீன எதிர்ப்பு நிலையிலிருந்து பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், பாதுகாப்பு தொடர்பான ஆசியான் நாடுகளின் கூட்டம் பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், சர்ச்சைக்குரிய பகுதிகளைக் கையாள்வது குறித்து வகுக்கப்பட்ட விதிமுறைகள் தங்களைக் கட்டுப்படுத்தாது என்று சீனா வலியுறுத்தியது.
இதையடுத்து, ஆசியான் நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில், தென் சீனக் கடல் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைக்கு சீனா விடுத்த அழைப்பை ஏற்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், சர்ச்சைக்குரிய பகுதிகளைக் கையாள்வது குறித்த விதிமுறைகள் குறித்து அந்த அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதையடுத்து, ஆசியான் நாடுகளில் சிலவற்றை சலுகைகள் மற்றும் நிதியுதவிகள் மூலம் சீனா விலைக்கு வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், ஆசியான் நாடுகளின் கூட்டத்துக்கிடையே சந்தித்துப் பேசிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள், பேச்சுவார்த்தையின் முடிவில் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தென் சீனக் கடல் பகுதியில் செயற்கைத் தீவுகள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை சீனா அமைத்து வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சர்ச்சைக்குரிய பகுதிக்கான விதிமுறைகள், சட்டப்படி சீனாவைக் கட்டுப்படுத்தும் என்று அந்த அறிக்கையில் உறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட இந்த நாடுகள் தென் சீனக் கடல் விவகாரத்தில் சீனாவைக் கண்டித்தாலும், இது தங்களுக்கும், அண்டை நாடுகளுக்கும் உள்ள பிராந்தியப் பிரச்னை என்றும், இந்த விவகாரத்தில் அமெரிக்காவும், பிற நாடுகளும் தலையிடக் கூடாது எனவும் சீனா கூறி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com