அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணம், பெட்மின்ஸ்டரில் உள்ள தனது பண்ணை மாளிகைக்கு செய்தியாளர்களை வரவேற்க வந்த அதிபர் டிரம்ப். உடன், துணை அதிபர் மைக் பென்ஸ்.
அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணம், பெட்மின்ஸ்டரில் உள்ள தனது பண்ணை மாளிகைக்கு செய்தியாளர்களை வரவேற்க வந்த அதிபர் டிரம்ப். உடன், துணை அதிபர் மைக் பென்ஸ்.

தாக்குதல் நிகழ்த்த தயார் நிலையில் அமெரிக்க ராணுவம்: வட கொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வட கொரியா மீது தாக்குதல் நிகழ்த்துவதற்குத் தயாரான நிலையில் அமெரிக்க பாதுகாப்புப் படைகள் காத்திருக்கின்றன என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வட கொரியா மீது தாக்குதல் நிகழ்த்துவதற்குத் தயாரான நிலையில் அமெரிக்க பாதுகாப்புப் படைகள் காத்திருக்கின்றன என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் வட கொரியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அவர் அதில் குறிப்பிட்டிருப்பது: வட கொரியா விவேகமற்ற செயலில் இறங்கினால், அமெரிக்க ஆயுதங்கள் தாக்குதல் நடத்த தயார் நிலையில் காத்திருக்கின்றன. ராணுவ ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. வட கொரியா தவறான வழியைத் தேர்ந்தெடுத்தால் தகுந்த தண்டனையைப் பெறும். சரியான வழியை வட கொரியா தேர்ந்தெடுக்க வேண்டும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா அணு ஆயுதத் தாக்குதல் நடத்த தயங்காது என்று ஏற்கெனவே அவர் கூறிய கருத்துக்கு பதிலடியாக, அமெரிக்காவின் அதிகாரத்துக்கு உள்பட்ட குவாம் தீவைத் தாக்கும் திட்டத்தை வட கொரியா வெளியிட்டது. இந்த நிலையில், குவாம் தீவில் அமெரிக்கப் போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் உடனடித் தாக்குதலுக்கான தயார் நிலையில் நிற்பதாக அமெரிக்க பாதுகாப்புப் படையின் பசிபிக் பிரிவு தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, அமெரிக்க படைகள் தாக்குதல் நிகழ்த்த தயார் நிலையில் இருப்பதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கத் தலைநகரில் உள்ள அதிபர் இல்லம் மற்றும் அலுவலகமான வெள்ளை மாளிகையில் மராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால் டிரம்ப் தற்போது நியூஜெர்சி மாகாணம், பெட்மின்ஸ்டர் நகரில் தங்கியுள்ளார். அவரது பண்ணை மாளிகையில் செய்தியாளர்களை வியாழக்கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
வெப்பமயமாதல்தான் உலகின் மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று முன்னாள் அதிபர் ஒபாமா கூறினார். அதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அணு ஆயுதங்கள்தான் உலகின் மிகப் பெரிய அச்சுறுத்தல். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. தற்போது உலகில் உள்ள அனைத்து அணு ஆயுதங்களையும் அழித்துவிட வேண்டும் என்ற கருத்துக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன்.
அமெரிக்கா, ரஷியா, சீனா, பாகிஸ்தான் என அணு ஆயுதத் திறன் பெற்ற எல்லா நாடுகளும் அந்த ஆயுதங்களை அழித்து விட வேண்டும். அணு ஆயுதம் இல்லாத அமைதியான உலகம் அமைவதுதான் என்னுடைய விருப்பம். ஆனால் அந்த லட்சியம் நிறைவேறும் நாள் வரும் வரை, அணு ஆயுத சக்தியைப் பொருத்தவரையில் அமெரிக்காதான் மிகவும் பலம் பொருந்திய நாடாக இருக்கும் என்றார். மற்றொரு கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், அமெரிக்காவின் அணு ஆயுதத் திறன்தான் உலகின் மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று தளபதிகளுக்கு நான் கட்டளையிட்டேன் என்றார்.
வெள்ளை மாளிகைக்குத் திரும்பும் வரை, அந்தப் பண்ணை இல்லத்திலேயே முக்கிய அமைச்சரவைக் கூட்டங்களையும் ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com