அமெரிக்காவை மிரட்டியதற்காக வட கொரியா வருந்தும்: அதிபர் டிரம்ப்

அமெரிக்கா மீதும் அதன் நட்பு நாடுகள் மீதும் தாக்குதல் நிகழ்த்துவோம் என்று மிரட்டியதற்காக வட கொரியா வருந்தும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
பெட்மின்ஸ்டர் நகரில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை  சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் (இடமிருந்து) ரெக்ஸ் டில்லர்சன், நிக்கி ஹேலி,  எச்.ஆர். மெக்மாஸ்
பெட்மின்ஸ்டர் நகரில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் (இடமிருந்து) ரெக்ஸ் டில்லர்சன், நிக்கி ஹேலி, எச்.ஆர். மெக்மாஸ்

அமெரிக்கா மீதும் அதன் நட்பு நாடுகள் மீதும் தாக்குதல் நிகழ்த்துவோம் என்று மிரட்டியதற்காக வட கொரியா வருந்தும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் இதைக் கூறினார். அவர் மேலும் கூறியது:
வட கொரியா விவகாரத்தில் அமைதியான வழியில் தீர்வு காண முடியும் என்று இன்னமும் நான் நம்புகிறேன். அமைதியைத் தவிர வேறு சிறந்த வழி இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால் வட கொரியாதான் அதற்கான முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும்.
முந்தைய அதிபர்கள் பல ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் முடிவெடுக்காமல் ஒத்திப்போட்டு வந்தனர். ஆனால் நான் அப்படி விட்டுவிடப் போவதில்லை.
அமெரிக்காவைத் தாக்குவோம் என்று வட கொரியா நீண்ட காலமாக மிரட்டி வருகிறது. ஆனால் அமெரிக்கா மீதோ, அமெரிக்க அதிகாரத்துக்கு உள்பட்ட பிரதேசத்திலோ, நட்பு நாடுகள் மீதோ வட கொரியா தாக்குதல் நிகழ்த்தினால் உடனடியாக பதிலடி கொடுக்கத் தயார் நிலையில் இருக்கிறோம். அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் மிரட்டல் விடுத்ததற்காக வட கொரியா மிகவும் வருந்த நேரிடும்.
முன்யோசனை இல்லாத, விவேகமற்ற செயலில் வட கொரியா ஈடுபட்டால், அதற்கு ராணுவ நடவடிக்கைகள் மூலமான தீர்வு காண்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துவிட்டது. அமெரிக்க ராணுவம் முற்றிலும் ஆயத்த நிலையில் உள்ளது.
அமைதி வழியா, மோதலா என்று தீர்மானிக்க வேண்டியது வட கொரியாதான். எந்தப் பாதை சரியானது என்று வட கொரியா நிதானமாக யோசித்துச் செயல்பட வேண்டும். அமெரிக்காவின் உறுதியை வட கொரியா புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
டிரம்ப் தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்.ஆர். மெக்மாஸ்டர் கலந்து கொண்டனர்.
அண்மையில் வட கொரியாவுக்கு எதிராக அமெரிக்கா தாக்கல் செய்த மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக ஏற்றது. இதனால் ஏற்றுமதிகள் மூலம் வட கொரியா பெற்று வந்த அந்நியச் செலாவணி வருவாய் முடங்கிவிடும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இந்தக் கடுமையான நடவடிக்கையைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த வட கொரியா, அமெரிக்க அதிகாரத்துக்கு உள்பட்ட பசிபிக் தீவான குவாமை தாக்கும் திட்டத்தை வெளியிட்டு மிரட்டியது. அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங்}உன் உத்தரவிட்டால் உடனடியாக குவாம் தீவைத் தங்கள் ஏவுகணைகள் தாக்கும் என்று வட கொரிய ராணுவ தளபதி கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான், தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டத்தை கூட்டி டிரம்ப் ஆலோசனை நடத்தினார். அமெரிக்க பாதுகாப்புப் படைகளின் ஆயுதங்கள் முற்றிலும் ஆயத்த நிலையில் இருப்பதாக அறிவித்தார்.

"உடனடி போருக்குத் தயார்'

அமெரிக்க அதிகாரத்துக்கு உள்பட்ட குவாம் தீவு பசிபிக் பெருங்கடலில் உள்ளது. அந்நாட்டின் போர் விமானங்கள், போர்க்கப்பல்கள், அணு ஆயுதம் ஏந்திய நீர்மூழ்கிக் கப்பல்கள், ராணுவ வீரர்கள் கொண்ட மாபெரும் பசிபிக் படைப் பிரிவு குவாம் தீவில் நிறுத்தப்பட்டுள்ளது.
வட கொரியாவிலிருந்து சுமார் 3,500 கி.மீ. தொலைவில் உள்ள அந்தத் தீவை ஏவுகணை செலுத்தித் தாக்குவோம் என்று வட கொரியா கடந்த வாரம் விரிவான தாக்குதல் திட்டத்தை வெளியிட்டு மிரட்டியது.
இதையடுத்து, தற்காப்பு, பதில் தாக்குதல் நிகழ்த்த பசிபிக் படைப் பிரிவு தயாரானது. "உடனடிப் போருக்குத் தயார்' என்கிற வகையில் தற்போது முற்றிலும் ஆயத்த நிலையில் படைப் பிரிவு இருப்பதாக அதன் தலைமையகம் அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com