பராமரிப்புப் பணி: பிக்பென் கடிகாரம் 2021-ஆம் ஆண்டு வரை ஓடாது!

உலகின் மிகப் பிரபல கடிகாரமான லண்டனில் உள்ள 'பிக்பென்' பராமரிப்புப் பணிகளுக்காக 2021-ஆம் ஆண்டு வரை நிறுத்தப்படுகிறது.
பராமரிப்புப் பணி: பிக்பென் கடிகாரம் 2021-ஆம் ஆண்டு வரை ஓடாது!

உலகின் மிகப் பிரபல கடிகாரமான லண்டனில் உள்ள 'பிக்பென்' பராமரிப்புப் பணிகளுக்காக 2021-ஆம் ஆண்டு வரை நிறுத்தப்படுகிறது.
பராமரிப்புப் பணிகள் வரும் திங்கள்கிழமை (ஆக. 21) தொடங்கும் என்று பிரிட்டன் அரசு அறிவித்தது. இதையடுத்து அதன் புகழ் பெற்ற மணியோசை அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஒலிக்காது!
பிரிட்டன் என்றதும் நம் மனக்கண் முன் முதலில் வருவது பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிக்பென் கடிகாரம். அந்த கடிகாரத்தில் பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் அந்த கடிகாரம் அமைந்த எலிசபெத் கோபுரத்தில் மராமத்துப் பணி மேற்கொள்ளவும் பிரிட்டன் அரசு முடிவு செய்தது. இதையடுத்து, அதற்கான நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது.
அந்தப் பராமரிப்புக் குழு அடுத்த வாரம் முதல் தனது பணியைத் தொடங்கவுள்ளது. இதையடுத்து, அந்த கடிகாரத்தின் செயல்பாடு அடுத்த திங்கள்கிழமை நிறுத்தப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதையடுத்து, வரும் 2021-ஆம் ஆண்டு வரை உலகப் புகழ் பெற்ற பிக்பென் கடிகாரம் 'ஓடாது!'
எனினும் கிறிஸ்தவ புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு கடிகார மணியடிக்கச் செய்யப்படும்.
மராமத்துப் பணிகளுடன் எலிசபெத் கோபுரத்தில் சுற்றுலாப் பயணிகளையும், பராமரிப்புப் பணியாளர்களையும் ஏற்றிச் செல்ல உதவும் தானியங்கி லிப்ட், சமையலறை, கழிப்பறைகள் அமைக்கப்பட உள்ளன என்று பராமரிப்பு நிபுணர்கள் குழுவின் தலைமை கட்டட நிபுணரான ஆடம் வாட்ரோப்ஸ்கி கூறினார்.
'பிக்பென்'னைப் பழுது பார்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் நாடாளுமன்ற நிதிக் குழு அறிக்கை தெரிவிக்கிறது.
பிரிட்டன் நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள பிக்பென் கோபுர கடிகாரம் 1859-இல் அமைக்கப்பட்டது. இதன் மணிகளின் எடை மட்டுமே 13.7 டன்னாகும். அந்தக் கடிகாரத்தின் பாகங்களில் பழுது பார்ப்பதற்கான செலவு ரூ. 50 கோடி .
மேலும், கடிகாரம் அமைந்துள்ள எலிசபெத் கோபுரத்தில் உள்ள விரிசல்களை சரி செய்தல் உள்ளிட்ட மராமத்துப் பணிகள், புதிய வசதிகள் அமைத்தல் ஆகியவற்றுக்கு ரூ. 400 கோடி செலவாகும். அந்தக் கோபுரத்தின் உயரம் 315 அடி. முழு பராமரிப்புப் பணி பூர்த்தியாவதற்கு 4 ஆண்டுகளாகும். 1976-இல் நடைபெற்ற பழுது பார்க்கும் பணியின்போது 26 நாட்களுக்கு கடிகாரம் நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் 1983, 1985, 2007 ஆண்டுகளில் பிக்பென் கடிகாரத்தில் பழுது நீக்கும் பணிகள் நடைபெற்றபோதும் குறுகிய காலத்துக்கு கடிகாரத்தின் செயல்பாடு
நிறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com