போகோ ஹராம் தாக்குதல்: நைஜீரியாவில் 28 பேர் பலி

நைஜீரியாவில் அகதிகள் முகாம் மீது 3 பெண் பயங்கரவாதிகள் நிகழ்த்திய மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர்; 82 பேர் காயமடைந்தனர்.

நைஜீரியாவில் அகதிகள் முகாம் மீது 3 பெண் பயங்கரவாதிகள் நிகழ்த்திய மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர்; 82 பேர் காயமடைந்தனர்.
அந்த நாட்டின் பதற்றம் நிறைந்த போர்னோ மாகாணத்தில் இந்தத் தாக்குதல் செவ்வாய்க்கிழமை நிகழ்த்தப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பாபா குரா என்பவர் கூறியதாவது:
மாகாணத் தலைநகர் மைடுகுரிக்கு 25 கி.மீ. தொலைவிலுள்ள மண்டராரி நகரில், உள்நாட்டுச் சண்டையால் பாதிக்கப்பட்ட உள்நாட்டு அகதிகளுக்கான முகாம் அமைந்துள்ளது.
அந்த முகாமின் வாயிலில், ஒரு பெண் தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.
அதையடுத்து, அங்கிருந்தவர்கள் அங்கிருந்து அவசரமாக வெளியேறிக் கொண்டிருந்தபோது மேலும் இரு பெண் பயங்கரவாதிகள் தங்கள் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்தனர்.
இந்தத் தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர். 82 பேர் காயமடைந்தனர். காயமடைந்த சுமார் 80 பேர் மைடுகுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் போகோ ஹராம் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிலவி வருகிறது.
இஸ்லாமிய அடிப்படைவாத அரசை வலியுறுத்தி 2009-ஆம் ஆண்டு முதல் அவர்கள் நிகழ்த்தி வரும் பயங்கரவாதத் தாக்குதல்களில் சுமார் 20,000 பேர் உயிரிழந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com