40 ஆண்டு தடைக்குப் பின் இந்தியா வருகிறது அமெரிக்க கச்சா எண்ணெய்

40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அமெரிக்க கச்சா எண்ணெய் ஏற்றிய சரக்குக் கப்பல்கள் அடுத்த மாதம் இந்தியா வருகின்றன.

40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அமெரிக்க கச்சா எண்ணெய் ஏற்றிய சரக்குக் கப்பல்கள் அடுத்த மாதம் இந்தியா வருகின்றன.
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா தடை விதித்தது.
எனினும், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு அண்மைக் காலமாக வலுவடைந்து வரும் நிலையில், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா நீக்கினார்.
அதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் மாதம் 26-ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைச் சந்தித்துப் பேசியபோது, எரிசக்தித் துறையில் இருநாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது.
அதையடுத்து, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் அமெரிக்காவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க முன்வந்தன. இதன்மூலம், உலகின் மூன்றாவது மிகப் பெரிய எண்ணெய் இறக்குமதி நாடான இந்தியா, அமெரிக்காவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்யும் தென் கொரியா, ஜப்பான், சீனா ஆகிய மூன்று நாடுகளுடன் இணைந்தது.
இந்தச் சூழலில், சுமார் 10 கோடி டாலர் (ரூ.636 கோடி) மதிப்பிலான கச்சா எண்ணெய் பேரல்களை ஏற்றிய சரக்குக் கப்பல்கள் அமெரிக்காவின் பல்வேறு துறைமுகங்களில் இருந்து இந்தியாவின் ஒடிஸா மாநிலத்தில் உள்ள பாரதீப் துறைமுகம் நோக்கி புறப்பட்டுள்ளன.
இந்த மாதம் 6 முதல் 14-ஆம் தேதி வரை அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட அந்தக் கப்பல்கள், அடுத்த (செப்டம்பர்) மாத இறுதியில் இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நவ்தேஜ் சர்ணா புதன்கிழமை தெரிவித்துள்ளதாவது:
புதிய திருப்புமுனையாக, அமெரிக்க எண்ணெய்க் கப்பல்கள் இந்தியாவை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடக்கியுள்ளன.
இந்திய - அமெரிக்க நல்லுறவில் புதிய அத்தியாயம் மலர்ந்துள்ளது என்று தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'எரிசக்தித் துறையில் இந்தியாவின் நம்பத் தகுந்த, நீண்ட கால கூட்டாளியாக அமெரிக்கா இருக்க வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிபூண்டுள்ளார்' என்று தெரிவித்தார்.
அமெரிக்காவிலிருந்து கப்பலில் கொண்டு வருவதற்கான அதிக சரக்குக் கட்டணத்தைச் சேர்த்தாலும், அதிக எரிதிறன் கொண்ட அந்தக் கச்சா எண்ணெய்களை வாங்குவது பிற நாடுகளிடமிருந்து வாங்குவதைவிட அதிக செலவு பிடிக்காது என்று எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com