இலங்கை கடற்படைத் தளபதியாக தமிழர் டிராவிஸ் சின்னையா நியமனம்

இலங்கை கடற்படையின் தளபதியாக கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக சிறுபான்மை தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த ரியர் அட்மிரல் டிராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படைத் தளபதியாக தமிழர் டிராவிஸ் சின்னையா நியமனம்

இலங்கை கடற்படையின் தளபதியாக கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக சிறுபான்மை தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த ரியர் அட்மிரல் டிராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது விடுதலைப்புலிகள் அமைப்பின் போர்க் கப்பல்களை தாக்கி அழித்ததில் சின்னையா முக்கியப் பங்காற்றியுள்ளார்.
இலங்கை கடற்படைத் தளபதியாக இருந்த வைஸ் அட்மிரல் ரவி விஜேகுணரத்னே ஓய்வு பெற உள்ளார். அவரைத் தொடர்ந்து, அப்பதவிக்கு தமிழரான டிராவிஸ் சின்னையாவை இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா வெள்ளிக்கிழமை நியமித்தார். இது தொடர்பாக அதிபர், டுவிட்டர் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'இலங்கை கடற்படையில் தீவிர விசுவாசத்துடன் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ரியர் அட்மிரல் டிராவிஸ் சின்னையா, தளபதியாகப் பொறுப்பேற்றுள்ளார்' என்று குறிப்பிட்டுள்ளார்.
கடற்படைத் தளபதியாக சின்னையாவின் பணிகள் வரும் 22-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளன. இப்பதவிக்கு வரும் இரண்டாவது தமிழர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, இலங்கையில் கடந்த 1960-ஆம் ஆண்டுகளின் இறுதியில் கடற்படைத் தளபதியாக இருந்த ராஜன் கதிர்காமர்தான் அப்பதவிக்கு வந்த முதல் தமிழராவார்.
அந்நாட்டில் கடந்த 1972-இல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்நாட்டுப் போர் வெடித்த பிறகு, கடற்படைத் தளபதி பொறுப்புக்கு முதல் முறையாக தமிழர் ஒருவர் தற்போதுதான் நியமிக்கப்பட்டுள்ளார்.
டிராவிஸ் சின்னையா, கடந்த 2007-ஆம் ஆண்டில் இந்தோனேசியாவில் இருந்தும், ஆஸ்திரேலியாவில் இருந்தும் ஆயுதங்களைக் கடத்தி வந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் கப்பல்களை அழிக்கும் கடற்படையின் நடவடிக்கைக்கு வெற்றிகரமாகத் தலைமை தாங்கினார். அந்த நடவடிக்கை இலங்கை கடற்படையின் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.
கடந்த 1982-இல் இலங்கை கடற்படையில் பணியில் இணைந்த சின்னையா, விடுதலைப் புலிகள் அமைப்புடன் மோதல் நடைபெற்ற காலத்தில் தீவிர தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட மிக மூத்த கடற்படை அதிகாரியாவார்.
இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிக்கட்டப் போர் 2009-இல் முடிவுக்கு வந்தது. இப்போரின்போது ராணுவத்தால் சுமார் 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com