இலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகள் பணியாற்ற முடியாது: அமைச்சர்

இலங்கையில் ராணுவம் இழைத்ததாகக் குற்றம்சாட்டப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக சர்வதேச நீதிபதிகள் தங்கள் நாட்டில் பணியாற்ற முடியாது

இலங்கையில் ராணுவம் இழைத்ததாகக் குற்றம்சாட்டப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக சர்வதேச நீதிபதிகள் தங்கள் நாட்டில் பணியாற்ற முடியாது என்று இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சர் திலக் மரபோனா தெரிவித்துள்ளார்.
அண்டை நாடான இலங்கையில் சுமார் 40 ஆண்டுகாலம் நடைபெற்ற உள்நாட்டுப் போர் கடந்த 2009-இல் விடுதலைப்புலிகள் அடைந்த தோல்வியுடன் முடிவுக்கு வந்தது. இறுதிக் கட்டப் போரின்போது ராணுவத்தால் சுமார் 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கை தெரிவித்தது.
அப்போது விடுதலைப் புலிகள், ராணுவம் ஆகிய இரு தரப்பினராலும் அப்பாவித் தமிழர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டதாக ஐநா அறிக்கை குற்றம்சாட்டியது.
இரு தரப்பும் இழைத்த போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கடந்த 2012 முதல் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கொண்டுவந்த மூன்று தீர்மானங்களை இலங்கை எதிர்கொண்டது. எனினும், இத்தீர்மான விவகாரத்தில் ஐநா சபையுடன் ஒத்துழைக்க இலங்கையில் ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபட்ச அரசு மறுத்து விட்டது. சர்வதேச விசாரணை என்பது இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் என்று ராஜபட்ச அரசு தெரிவித்தது.
அதன் பின் இலங்கையில் சிறீசேனா தலைமையில் அமைந்த அரசு, ஐ.நா. சிறப்புத் தூதர்களை தங்கள் நாட்டில் அனுமதிக்கும் சமாதான அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலும் இலங்கையும் இணைந்து கடந்த 2015-இல் கொண்டுவந்த தீர்மானமானது அரசுப் படைகளும், புலிகள் அமைப்பும் இழைத்ததாகக் குற்றம்சாட்டப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேசக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.
இந்நிலையில், இலங்கை வெளியுறவு அமைச்சராக அண்மையில் பொறுப்பேற்ற திலக் மரபோனா, கொழும்பில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: வெளிநாட்டு நீதிபதிகள் எங்கள் நாட்டில் பணியாற்றுவதையும், வழக்குகளை விசாரிப்பதையும் இலங்கை அரசியல்சாசனம் அனுமதிக்காது. இதை சர்வதேச சமூகத்திடம் தெரிவித்தோம். அவர்கள் அதை ஏற்றுக் கொண்டனர்.
போர்க்குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பளிக்கப்படும்போது வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானம் வலியுறுத்தவில்லை என்றார் அவர்.
எனினும், இலங்கையின் நீதித்துறை மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதால் போர்க்குற்றம் தொடர்பான வழக்குகளை வெளிநாட்டு நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்று தமிழர் அமைப்புகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், தங்கள் நாட்டில் கடந்த 2015-இல் புதிய அரசு பதவியேற்றதில் இருந்து சட்டத்தின் ஆட்சியும், நீதித்துறை சுதந்திரமும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கூறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com