அமெரிக்க தொழில்நுட்பத் திருட்டு: சீனாவுக்கு எதிரான விசாரணை தொடக்கம்

அமெரிக்க தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் சொத்துகளை சீனா திருடியது தொடர்பான விசாரணை தொடங்கியதாக அமெரிக்க வர்த்தக மேம்பாட்டுத் துறை அதிகாரி ராபர்ட் லைத்திஸர் கூறினார்.

அமெரிக்க தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் சொத்துகளை சீனா திருடியது தொடர்பான விசாரணை தொடங்கியதாக அமெரிக்க வர்த்தக மேம்பாட்டுத் துறை அதிகாரி ராபர்ட் லைத்திஸர் கூறினார்.
அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் சீனா முதலிடம் வகிக்கிறது. இரு நாடுகளிடையேயான வருடாந்தர சரக்கு மற்றும் சேவைகள் மதிப்பு 66,300 கோடி டாலராகும் (சுமார் ரூ. 43.09 லட்சம் கோடி). இந்த நிலையில், அமெரிக்காவின் தொழில்நுட்பங்களையும், அறிவுசார் சொத்துகளையும் சீனா திருடிப் போலிப் பொருள்களைக் குறைந்த விலையில் உருவாக்கி வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இதனால் அமெரிக்க நிறுவனங்கள் உலக சந்தைகளில் போட்டியிட முடியாமலும் பொருள்களுக்கு நியாயமான வருவாய் கிடைக்காமலும் அவதியுறுகின்றனர் என்ற புகார் கூறப்பட்டது. மேலும், சீனாவில் அமெரிக்க பொருள்களை விற்பனை செய்ய வேண்டுமானால் தொழில் ரகசியமாக காக்கப்படும் விவரங்களைக் கூட பலவந்தமாக வெளியிடச் செய்வது போன்ற அடாவடிகளில் சீனா ஈடுபடுவதாக சில அமெரிக்க நிறுவனங்கள் புகார் கூறி வந்தன.
இதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் 1974-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வர்த்தக காப்புச் சட்டப்படி சீனாவுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு வர்த்தக மேம்பாட்டுத் துறை அதிகாரிக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். அந்த விசாரணை தொடங்கியதாக வர்த்தக மேம்பாட்டுத் துறை அதிகாரி ராபர்ட் லைத்திஸர் கூறினார். முதல் கட்ட ஆலோசனைக்குப் பிறகு சீனா மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகத் தெரிய வந்தது என்றும் எனவே தொடர்ந்து விசாரணை நடத்தப் போவதாகவும் அவர் கூறினார்.
அமெரிக்க நிறுவனங்களின் கணினி சேமிப்பகங்களில் சீனா ஊடுருவி அறிவுசார் சொத்துகளைத் திருடுகிறதா, தொழில் ரகசியங்களை வெளியிடச் சொல்லி அமெரிக்க நிறுவனங்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனவா, நிறுவனங்களின் வணிக விவரங்களைப் பகிர்ந்து கொள்ள நிர்பந்திக்கப்படுகிறா, இந்த நடவடிக்கைளால் அமெரிக்க நிறுவனங்கள் எவ்வாறு பாதிப்படைகின்றன, சீன நிறுவனங்கள் எவ்வாறு லாபமடைகின்றன என்பது குறித்து விசாரணை நடைபெறும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com