வங்கதேச பிரதமர் படுகொலை முயற்சி வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை படுகொலை செய்ய முயற்சித்தது தொடர்பான வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு விசாரணை நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை தீர்ப்பளித்தது.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை படுகொலை செய்ய முயற்சித்தது தொடர்பான வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு விசாரணை நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை தீர்ப்பளித்தது.
அதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 9 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2000-ஆம் ஆண்டு இந்தக் கொலை முயற்சி நடைபெற்றது. பிரதமர் ஷேக் ஹசீனா தனது சொந்த கிராமமான கோபால்கஞ்ஜில் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சியின்போது சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்த்த பயங்கரவாதிகள் திட்டமிட்டனர். போலீஸாருக்கு கிடைத்த உளவுத் தகவலைத் தொடர்ந்து, மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.
இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், வங்கதேச ஹர்கதுல் ஜிஹாத்-ஏ-இஸ்லாமி என்கிற பயங்கரவாதக் குழு இந்த சதித் திட்டத்தைத் தீட்டியது தெரிய வந்தது.
படுகொலை சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மும்தாஜ் பேகம் 10 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் அல்லது உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 9 பேருக்குத் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 20,000 டாக்கா (சுமார் ரூ. 15,000) அபராதமும் விதிக்கப்பட்டது.
கடந்த 2004-ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்த்தி அவரைக் கொலை செய்ய முயற்சி நடந்தது. அந்தப் படுகொலை முயற்சியில் அவர் உயிர் தப்பினார். ஆனால் அந்த குண்டு வெடிப்பில் 23 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அது தொடர்பான மற்றொரு வழக்கின் விசாரணை முடியும் தருவாயில் உள்ளது.
வங்கதேச ஹர்கதுல் ஜிஹாத்-ஏ-இஸ்லாமி பயங்கரவாதக் குழுவின் உதவியுடன் அவரைக் கொலை செய்ய அப்போதைய பிரதமர் காலீதா ஜியாவின் கட்சியினர் சிலர் முயற்சி செய்தனர் என்பது வழக்கு. அந்த வழக்கில் காலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் முக்கியக் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தலைமறைவாக உள்ளார்.
பிரிட்டன் தூதரை படுகொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் வங்கதேச ஹர்கதுல் ஜிஹாத்-ஏ-இஸ்லாமி பயங்கரவாதக் குழுவின் தலைவர் முப்தி ஹன்னான் இவ்வாண்டு தூக்கிலிடப்பட்டார் என்பது
நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com