பயங்கரவாதிகளை ஆதரிப்பதற்காக பாகிஸ்தான் அதிக இழப்பைச் சந்திக்க வேண்டிவரும்: டிரம்ப் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்களைக் கொல்லும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து புகலிடம் அளித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
பயங்கரவாதிகளை ஆதரிப்பதற்காக பாகிஸ்தான் அதிக இழப்பைச் சந்திக்க வேண்டிவரும்: டிரம்ப் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்களைக் கொல்லும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து புகலிடம் அளித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். பயங்கரவாதிகளை ஆதரிப்பதற்காக பாகிஸ்தான் அதிக இழப்பைச் சந்திக்க வேண்டிவரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அதன் பின் அவர் முதன் முறையாக தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு மக்களுக்கு செவ்வாய்க்கிழமை உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பாகிஸ்தான் கடந்த காலங்களில் அமெரிக்காவிடம் இருந்து கோடிக்கணக்கிலான டாலர் நிதியைப் பெற்று வந்துள்ளது. ஆனால், அந்நாடு தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது.
பாகிஸ்தான், பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்பான புகலிடங்களை வழங்கி வருகிறது. இதனால் ஏற்படும் அச்சுறுத்தல் என்பது மிகவும் மோசமானது. ஏனெனில், பாகிஸ்தானும் இந்தியாவும் அணு ஆயுத நாடுகளாகும். அவற்றுக்கு இடையிலான பதற்றமான உறவுகள் ஒரு மோதலாக உருவெடுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. அது எப்போதும் நடைபெற வாய்ப்புள்ளது.
விரிவான பரிசீலனைக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்காசியப் பகுதிகளுக்கான அமெரிக்காவின் உத்தியை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எனது புதிய உத்தியின் முக்கிய அம்சமாக பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் அணுகுமுறையில் ஏற்பட உள்ள மாற்றம் இருக்கும்.
தெற்காசியப் பிராந்தியத்துக்கும், அதற்கு அப்பாலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது குறித்து நாம் இனியும் மௌனமாக இருக்க முடியாது.
ஆப்கனில் நாம் எடுத்து வரும் முயற்சிகளில் பங்கெடுப்பதன் மூலம் பாகிஸ்தான் மிகவும் ஆதாயமடைய முடியும். அதேவேளையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்தால் அது அதிக அளவில் அழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
அமெரிக்க ராணுவத்தினரைக் குறிவைக்கும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் போக்கை பாகிஸ்தான் மாற்றிக் கொள்ள வேண்டும். அதை உடனடியாகச் செய்ய வேண்டும். பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் ஒரு நாட்டுடன் நமது தோழமை தொடர முடியாது.
அமெரிக்காவுக்கு மதிப்பு மிகுந்த தோழமை நாடாக பாகிஸ்தான் இருந்து வந்துள்ளது. நமது பொது எதிரிகளுக்கு எதிராக இரு நாட்டு ராணுவங்களும் இணைந்து பாடுபட்டுள்ளன. எனினும், ஒவ்வொரு நாளும் நமது மக்களைக் கொல்ல முயற்சிக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிக்கிறது என்று டொனால்டு டிரம்ப் தனது உரையில் தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு
பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பாகிஸ்தானை அதன் நெருங்கிய தோழமை நாடான சீனா ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங், பெய்ஜிங்கில் கூறியதாவது:
அமெரிக்கத் தரப்பு எடுக்கும் கொள்கை முடிவுகள், சம்பந்தப்பட்ட பிராந்தியத்தில் (தெற்காசியா) பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்த உகந்ததாக இருக்கும் என்று நம்புவோம். பாகிஸ்தான் குறித்து டிரம்ப் தெரிவித்துள்ள கருத்துகளைப் பொறுத்தவரை, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் பாகிஸ்தான் முன்னணியில் இருக்கிறது என்பதையும், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் அந்நாடு தியாகங்களைச் செய்துள்ளதையும் நான் கூறியாக வேண்டும். பாகிஸ்தான், தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட முக்கியப் பங்காற்றி வருகிறது. பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் பாகிஸ்தானின் முயற்சிகளை சர்வதேச சமூகம் உண்மையான முறையில் உறுதிப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
'ஆப்கனில் இந்தியா முக்கியப் பங்காற்ற வேண்டும்'
டொனால்டு டிரம்ப் தனது தொலைக்காட்சி உரையில், இந்தியாவுடனான அமெரிக்க உறவுகளை மேம்படுத்த உறுதிபூண்டிருப்பதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது:
எனது தெற்காசியக் கொள்கையின் மிக முக்கிய அம்சமாக இந்தியாவுடனான அமெரிக்க உறவுகளை மேலும் மேம்படுத்துவது இடம்பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு இந்தியா ஆற்றிவரும் முக்கியமான பங்களிப்பை நாம் பாராட்டுகிறோம். அதேவேளையில், அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் இந்தியாவுக்கு கோடிக்கணக்கான டாலர் ஆதாயம் கிடைக்கிறது. எனவே, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி ஆகிய துறைகளில் இந்தியா எங்களுக்கு மேலும் உதவ வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.
தெற்காசியாவிலும், விரிவான இந்தோ-பசிஃபிக் பிராந்தியத்திலும் அமைதி மற்றும் பாதுகாப்புக்கான நமது நோக்கங்களை எட்ட நாம் உறுதிபூண்டுள்ளோம் என்று டிரம்ப் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com