ஊழல் வழக்கில் சாம்சங் துணைத் தலைவருக்கு 5 ஆண்டு சிறை

ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில் சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தென் கொரிய நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது
ஊழல் வழக்குத் தீர்ப்பு வெளியாவதை முன்னிட்டு தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள நீதிமன்றத்துக்கு கைகள் கயிற்றால் பிணைக்கப்பட்டு அழைத்து வரப்படும் சாம்சங் துணைத் தலைவர் லீ -யோங்
ஊழல் வழக்குத் தீர்ப்பு வெளியாவதை முன்னிட்டு தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள நீதிமன்றத்துக்கு கைகள் கயிற்றால் பிணைக்கப்பட்டு அழைத்து வரப்படும் சாம்சங் துணைத் தலைவர் லீ -யோங்

ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில் சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தென் கொரிய நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சாம்சங்கின் துணைத் தலைவர் லீ ஜே-யோங் (49). நிறுவனத்தின் தலைவரான இவரது தந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, துணைத் தலைவரான லீ ஜே-யோங் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது நிறுவனத்துக்கு அரசிடமிருந்து பல்வேறு வரிச் சலுகைகள் உள்ளிட்டவற்றைப் பெறுவதற்காக லஞ்சம் வழங்கினார் என்று லீ ஜே-யோங் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், நீதிமன்றத்தில் பொய் சாட்சியம் அளித்தது, பணம் கையாடல் ஆகிய குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டன. அவர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை சியோல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் இறுதியில் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
அதிபரின் தோழி நடத்தி வந்த போலி தன்னார்வ அமைப்புக்கு சுமார் 4 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 260 கோடி) வழங்கியது உறுதியானதாக நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும், அதில் நேரடியாக சம்பந்தப்படவில்லை எனவும் அவர் நீதிமன்றத்தில் வாதிட்டார். அதிகாரிகள் செய்திருக்கக் கூடிய குற்றத்துக்குத் தன்னை தண்டிக்கக் கூடாது என்ற அவரது வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்நிலையில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதே விவகாரத்தில் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மூத்த அதிகாரிகள் 4 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. அவர்களும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்களுக்குத் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தென் கொரியாவின் அதிபராக இருந்த பார்க் கியூன்-ஹை மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்பட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அதே நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. தற்போதைய சாம்சங் வழக்கும் அவற்றுடன் தொடர்புடையது.
சாம்சங் துணைத் தலைவர் மீதான வழக்கில் தீர்ப்பு வெளியாவதை முன்னிட்டு 800 அதிரடி போலீஸார் நீதிமன்றத்துக்கு வெளியே குவிக்கப்பட்டனர். அதிபரின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் நீதிமன்ற வளாகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடியிருந்தனர்.
பார்க் கியூன்-ஹை அதிபராக இருந்தபோது அவரது நெருங்கிய தோழி சோய் ஸþன்-சில் நடத்தி வந்த போலி தன்னார்வ அமைப்புகளின் பேரில் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து நிதி திரட்டினார் என்ற புகார் எழுந்தது. அந்த வகையில் சுமார் ரூ. 490 கோடி நிதியை சோய் ஸþன்-சில் திரட்டினார். அதிபரிடம் அவருக்கு இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, நன்கொடை அளித்த நிறுவனங்களுக்கு அரசிடம் வரிச் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைப் பெற்றுத் தருவதாக அவர் வாக்களித்திருந்தார். மேலும் அரசு விவகாரங்களில் தலையிட்டார் எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, நாடு முழுவதும் அதிரபருக்கு எதிராகப் பெரும் போராட்டம் வெடித்தது.
இதையடுத்து, அதிபர் பார்க் கியூன்-ஹையைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அரசியல் சாசன சிறப்பு நீதிமன்றம் அதனை உறுதி செய்தது. 
தொடர்ந்து, அவர் மீது லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவர் கைதானார். அவர் மீது 18 வழக்குகள் நடைபெற்று வருகின்றன. அதில் ரூ. 335 கோடி லஞ்சம் வாங்கியது முக்கிய வழக்காகக் கருதப்படுகிறது. அதில் அவர் குற்றவாளி என்று உறுதியானால் 10 ஆண்டு சிறைத் தண்டனை பெறக்கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com