டிரம்ப் பேச்சுக்கு எதிர்ப்பு: அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை ரத்து செய்தது பாகிஸ்தான்

அமெரிக்காவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளையும், அதிகாரப்பூர்வமான இருதரப்பு பயணங்களையும் பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.

அமெரிக்காவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளையும், அதிகாரப்பூர்வமான இருதரப்பு பயணங்களையும் பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.
பயங்கரவாத விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றபிறகு, பயங்கரவாத விவகாரத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், தெற்காசியாவுக்கான அமெரிக்காவின் புதிய கொள்கையை டிரம்ப் அண்மையில் வெளியிட்டார். அப்போது அவர், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிப்பதாகக் குற்றம்சாட்டியதுடன், இதை அமெரிக்கா தொடர்ந்து சகித்துக் கொண்டிருக்காது எனவும் குறிப்பிட்டார். அதேபோல், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில், இந்தியா முக்கியப் பங்காற்ற வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
அவரது கருத்து, பாகிஸ்தானை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகள், அதிகாரப்பூர்வமான இருதரப்பு பயணங்கள் ஆகியவற்றை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவுடனான உறவு மோசமடைந்து வருவது குறித்து ஆலோசனை நடத்த பாகிஸ்தான் நாடாளுமன்ற செனட் சபை குழு அமைத்துள்ளது. 
இந்த குழுவுடனான ஆலோசனையின்போது, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் க்வாஜா ஆசிப், அமெரிக்காவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அந்நாட்டுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளையும், அதிகாரப்பூர்வமான இருதரப்பு பயணங்களையும் பாகிஸ்தான் ரத்து செய்துவிட்டதாகத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 'அமெரிக்காவின் புதிய கொள்கையில், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ராணுவ ரீதியில் இந்தியாவின் பங்கு எதுவும் இருக்காது என்றும், பொருளாதார வளர்ச்சி விவகாரத்தில் மட்டுமே இந்தியா பங்காற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை சீர்குலைப்பதற்கு ஆப்கானிஸ்தானை இந்தியா களமாக பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படாது' என்றார்.
இதைக் கேட்ட குழு உறுப்பினர்கள், 'இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்த உதவிகள் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் முக்கியப் பங்கு வகிப்பதால் நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புகள் குறித்த அறிக்கைகளை அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும்' என்று கேட்டுக் கொண்டனர்.
அந்தக் குழுவிடம், பாகிஸ்தான் வெளியுறவுத் துறைச் செயலர் தெமினா ஜான்ஜுவா கூறுகையில், 'தெற்காசியாவுக்கான அமெரிக்காவின் புதிய கொள்கை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நமது நாட்டின் புதிய செயல்திட்டத்தை வகுப்பதற்கு வெளிநாட்டுக்கான நமது தூதர்கள் மாநாடு செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை கூட்டப்பட்டுள்ளது' என்றார்.
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலர் அலைஸ் வெல்ஸ், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதுக்கு செவ்வாய்க்கிழமை வருவதாக இருந்தது. இதேபோல், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் க்வாஜா ஆசிப், அமெரிக்காவுக்கு கடந்த வாரம் செல்வதாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com