வட கொரியா புதிய ஏவுகணை சோதனை

சக்தி வாய்ந்த புதிய ஏவுகணை சோதனையை வட கொரியா செவ்வாய்க்கிழமை மேற்கொண்டது.
வட கொரியா செவ்வாய்க்கிழமை சோதனை செய்த நடுத்தர ரக ஏவுகணை.
வட கொரியா செவ்வாய்க்கிழமை சோதனை செய்த நடுத்தர ரக ஏவுகணை.

சக்தி வாய்ந்த புதிய ஏவுகணை சோதனையை வட கொரியா செவ்வாய்க்கிழமை மேற்கொண்டது.
உள்ளூர் நேரப்படி காலை 5.57 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 2.27 மணி) வட கொரிய தலைநகர் பியோங்கியாங்கின் சுனான் பகுதியிலிருந்து ஏவுகணை செலுத்தப்பட்டதாக தென் கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
சுனானில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த விமான நிலையத்தில் உள்ள ஓடுதளத்திலிருந்து ஏவுகணை செலுத்தும் வாகனத்தைப் பயன்படுத்தி ஏவுகணையைச் செலுத்தியதாகத் தெரிகிறது என்று தென் கொரிய அதிகாரிகள் கூறினர்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கடுமையான பொருளாதாரத் தடைகள் அறிவிப்பு வந்த பிறகும், புதிய முறையில் வட கொரியா ஏவுகணை சோதனை மேற்கொண்டிருப்பது உலக நாடுகளுக்கு சவால் விடும் விதமாக உள்ளது.
இந்த ஏவுகணை ஜப்பானின் வடக்கு மாகாணமான ஹொக்கைடோ தீவு வான் எல்லைப் பகுதி வழியாகப் பறந்து சென்று பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. அந்த ஏவுகணை 2,700 கி.மீ. தொலைவு பறந்ததாகவும் அதிகபட்சமாக 550 கி.மீ. உயரே விண்ணில் பறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதுவரை வட கொரியா செலுத்தியவற்றிலேயே ஜப்பான் வான் எல்லைப் பகுதி வழியே மிக நீண்ட தூரம் செலுத்தப்பட்ட ஏவுகணை இது என்று கூறப்படுகிறது.
பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்காவும் தென் கொரியாவும் பல்வேறு போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் வட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனை நடைபெற்றிருக்கிறது. ஆனால் போர்ப் பயிற்சி நடைபெற்று வரும் இடத்துக்கும் ஏவுகணை விழுந்த கடல் பகுதிக்கும் இடையேயான தொலைவு என்ன என்பது குறித்து அந்த இரு நாடுகளும் எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.
புதிய ஏவுகணை நடுத்தர வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று சில பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கருதுகின்றனர். அமெரிக்க அதிகாரத்துக்கு உள்பட்ட பசிபிக் பெருங்கடல் தீவான குவாம், வட கொரியாவிலிருந்து சுமார் 2,500 கி.மீ. தொலைவில் உள்ளது. இப்போது பரிசோதிக்கப்பட்ட ஏவுகணை அந்தத் தீவைத் தாக்க வல்லது என்று அந்த நிபுணர்கள் கூறினர்.
இவ்வாண்டு வட கொரியா மேற்கொண்ட 13-ஆவது ஏவுகணை சோதனை இதுவாகும். சுனான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதல் முறையாக ஏவுகணை செலுத்தப்பட்டுள்ளது.
ரஷியா கவலை
வட கொரியா விவகாரம் கவலை அளிப்பதாக உள்ளது என்று ரஷியா தெரிவித்திருக்கிறது.
வட கொரியா செவ்வாய்க்கிழமை புதிய ஏவுகணை சோதனை மேற்கொண்ட செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, மாஸ்கோவில் ரஷிய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் செர்கேய் ரியப்கோவ் கூறியது: வட கொரிய விவகாரம் முற்றி வருகிறது என்று கூற வேண்டியுள்ளது. அடுத்தடுத்து நடைபெற்று வரும் சம்பவங்கள் கவலை அளிப்பதாக உள்ளன என்று அவர் கூறினார்.
இத்தகவலை ரஷிய அரசு செய்தி நிறுவனம் நொவோஸ்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவுடன் தென் கொரியா அவசர ஆலோசனை
வட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து, அமெரிக்காவுடன் தென் கொரியா அவசர ஆலோசனை மேற்கொண்டது.
தென் கொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் காங்கியூங் ஹுவா, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தினார். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்.ஆர். மெக்மாஸ்டர், தென் கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுங் இயோங் ஆகியோரும் ஆலோசனையில் கலந்து கொண்டனர்.
அவர்களின் ஆலோசனை விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com