வட கொரியாவுக்குப் பதிலடியாக அமெரிக்கா ஏவுகணை அழிப்பு சோதனை

வட கொரியா செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட புதிய ஏவுகணை சோதனைக்குப் பதிலடியாக, ஹவாய் தீவுப் பகுதியில்
பாய்ந்து வரும் ஏவுகணையை அழிப்பதற்காக யுஎஸ்எஸ் ஜான் பால் கப்பலில் இருந்து ஏஜிஸ் பாதுகாப்பு சாதனத்தின் மூலம் செலுத்தப்படும் இடைமறி ஏவுகணை (கோப்புப் படம்).
பாய்ந்து வரும் ஏவுகணையை அழிப்பதற்காக யுஎஸ்எஸ் ஜான் பால் கப்பலில் இருந்து ஏஜிஸ் பாதுகாப்பு சாதனத்தின் மூலம் செலுத்தப்படும் இடைமறி ஏவுகணை (கோப்புப் படம்).

வட கொரியா செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட புதிய ஏவுகணை சோதனைக்குப் பதிலடியாக, ஹவாய் தீவுப் பகுதியில் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் தனது தொழில்நுட்பத்தை அமெரிக்கா புதன்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:
புதிய ஏவுகணை ரகத்தை வட கொரியா விண்ணில் ஏவி சோதித்துள்ளதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தனது ஏஜிஸ் ஏவுகணை அழிப்புத் தொழில்நுட்பத்தை அமெரிக்கா புதன்கிழமை அதிகாலை சோதித்தது. அமெரிக்காவின் ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பு அந்த சோதனையை மேற்கொண்டது.
அந்த சோதனையின் ஒரு பகுதியாக, ஹவாய் தீவின் காவை ஏவுகணைத் தளத்திலிருந்து நடுத்தர தொலைவு ஏவுகணை ஒன்று இலக்கை நோக்கி செலுத்தப்பட்டது. அந்த ஏவுகணை, தரையிலிருந்து வழிகாட்டும் திறன் படைத்த மற்றொரு ஏவுகணையைக் கொண்டு வெற்றிகரமாகத் தாக்கி அழிக்கப்பட்டது. எதிரிகள் வீசும் ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் ஏஜிஸ் தொழில்நுட்பக் கருவிகளின் திறன் இந்தச் சோதனையின் மூலம் மேம்பட்டுள்ளதாக ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக, வட கொரியா, தலைநகர் பியோங்கியாங்கின் சுனான் பகுதியிலிருந்து சக்தி வாய்ந்த ஏவுகணையை செவ்வாய்க்கிழமை செலுத்தி சோதனை மேற்கொண்டது.
சுனானில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த விமான நிலையத்தில் உள்ள ஓடுதளத்திலிருந்து ஏவுகணை செலுத்தும் வாகனத்தைப் பயன்படுத்தி ஏவுகணையைச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கடுமையான பொருளாதாரத் தடைகள் அறிவிப்பு வந்த பிறகும், புதிய முறையில் வட கொரியா ஏவுகணை சோதனை மேற்கொண்டிருப்பது உலக நாடுகளுக்கு சவால் விடும் விதமாக உள்ளது. இந்த ஏவுகணை ஜப்பானின் வடக்கு மாகாணமான ஹொக்கைடோ தீவு வான் எல்லைப் பகுதி வழியாகப் பறந்து சென்று பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. அந்த ஏவுகணை 2,700 கி.மீ. தொலைவு பறந்ததாகவும் அதிகபட்சமாக 550 கி.மீ. உயரே விண்ணில் பறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுவரை வட கொரியா செலுத்தியவற்றிலேயே ஜப்பான் வான் எல்லைப் பகுதி வழியே மிக நீண்ட தூரம் செலுத்தப்பட்ட ஏவுகணை இது என்று கூறப்படுகிறது.
இவ்வாண்டு வட கொரியா மேற்கொண்ட 13-ஆவது ஏவுகணை சோதனை இதுவாகும். சுனான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதல் முறையாக ஏவுகணை செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com