அமைச்சர் பதவிப் பறிப்பு செய்திக்கு டிரம்ப் திட்டவட்ட மறுப்பு

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனை பதவியிலிருந்து நீக்கும் எண்ணமில்லை என்று அதிபர் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பதவிப் பறிப்பு செய்திக்கு டிரம்ப் திட்டவட்ட மறுப்பு

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனை பதவியிலிருந்து நீக்கும் எண்ணமில்லை என்று அதிபர் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
டில்லர்சன் மீது டிரம்ப்புக்கு ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவரது அமைச்சர் பதவியைப் பறிக்கப் போவதாக நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் அது தவறான செய்தி என்று தற்போது டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார். "வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியிலிருந்து டில்லர்சனை நீக்கும் எண்ணம் இல்லை' என்று அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் கணக்கில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருக்கிறார். சுட்டுரைப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டிருப்பது:
ரெக்ஸ் டில்லர்சனை நீக்கப் போவதாக ஊடகங்கள் ஊகச் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. அவர் பதவியைப் பறித்துவிட்டேன் என்றும் அவர் விலகிவிட்டார் என்றும் பல விதமாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அது பொய் செய்தி. சில விவகாரங்களில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு உள்ளது என்றாலும் அதிபர் என்ற முறையில் இறுதி முடிவு என்னுடையதாக உள்ளது. அமெரிக்காவின் கண்ணியத்தையும் கெளரவத்தையும் உயர்த்தும் விதமாக இருவரும் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என்று டிரம்ப் தனது சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் வெளியிட்ட இந்த சுட்டுரைப் பதிவின் மூலம், டில்லர்சனின் பதவி விலகல் குறித்து கடந்த சில நாட்களாக அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டு வந்த ஊகச் செய்திகளால் ஏற்பட்ட பரபரப்பு முடிவுக்கு வந்திருக்கிறது.
டில்லர்சன் பதவிப் பறிப்பு என்ற வதந்தி வலம் வரத் தொடங்கியதுமே, அதை மறுக்கும் விதமாக, அவர் அமைச்சர் பதவியில் தொடர்கிறார் என்றும் டிரம்ப்புக்கு எதிரான எண்ணங்கள் கொண்ட ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் ஏற்கெனவே அதிபர் வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹெதர் நோவர்ட் ஆகியோரும் ஊடகச் செய்திகளை மறுத்தனர். எனினும் டில்லர்சன் விவகாரத்தால் எழுந்த பரபரப்பு அடங்கவில்லை.
இந்த நிலையில், அதிபர் டிரம்ப்பின் டுவிட்டர் பதிவு வெளியாகி நிலைமையைத் தெளிவுபடுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com