ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்க டிரம்ப் முடிவு

சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிக்கவும், அந்த நாட்டுக்கான அமெரிக்கத் தூதரகத்தை டெல் அவிவ் நகரிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றவும் அதிபர் டொனால்ட்
புதன்கிழமை எடுக்கப்பட்ட ஜெருசலேம் நகரின் புகைப்படம்.
புதன்கிழமை எடுக்கப்பட்ட ஜெருசலேம் நகரின் புகைப்படம்.

சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிக்கவும், அந்த நாட்டுக்கான அமெரிக்கத் தூதரகத்தை டெல் அவிவ் நகரிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்கா நீண்ட காலமாகக் கடைபிடித்து வரும் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் மாறான இந்த நடவடிக்கையால், மேற்கு ஆசியப் பிரச்னை மேலும் தீவிரமாகும் என்று அரபு நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து அமெரிக்க அரசின் உயரதிகாரிகள் கூறியதாவது:
ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிக்கும் அறிவிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் அறிவிப்பார். ஜெருசலேம்தான் இஸ்ரேல் தலைநகர் என்பதை ஒரு வரலாற்று உண்மையாக அவர் கருதுகிறார்.
பண்டைய காலம் முதலே ஜெருசலேம் யூதர்களின் தலைநகரமாக இருந்து வந்துள்ளது. தற்போதைய நிலையிலும் இஸ்ரேல் அரசின் தலைமையகம், முக்கிய அமைச்சரகங்கள், நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை ஜெருசலேம் நகரில் இருப்பதுதான் நிதர்சனம் ஆகும்.
இந்த அறிவிப்பை வெளியிடுவதன் மூலம், அதிபர் தேர்தலின்போது பொதுமக்களுக்கு டிரம்ப் அளித்த முக்கியமான வாக்குறுதியை அவர் நிறைவேற்றுகிறார். ஜெருசலேம் நகருக்கு இஸ்ரேலின் தலைநகர் என்ற அந்தஸ்தை வழங்குவதாக ஏற்கெனவே பல அதிபர் வேட்பாளர்கள் வாக்குறுதி அளித்து, பிறகு அதிபரானதும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டனர்.
ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிப்பது தவிர, அமெரிக்கத் தூதரகத்தை டெல் அவிவ் நகரிலிருந்து ஜெருசலேம் நகருக்கு மாற்றுவது குறித்த அறிவிப்பையும் டிரம்ப் வெளியிடுவார்.
எனினும், புதிய தலைமையகத்துக்கான மிகச் சரியான இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கும், கட்டுமான வேலைகளை மேற்கொள்வதற்கும் இரண்டு ஆண்டுகளாவது ஆகும். டிரம்ப்பின் இந்த முடிவுக்கு நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியம் என்றாலும், இந்த விவகாரத்தில் பெரும்பாலான எம்.பி.க்கள் டிரம்ப்புக்கு ஆதரவு அளிப்பார்கள்.
மேற்கு ஆசிய நாடுகள் இந்த முடிவை எதிர்த்தாலும், ஜெருசலேம் குறித்த டிரம்ப்பின் அறிவிப்பால் இஸ்ரேலும், பாலஸ்தீனமும் தனித் தனி நாடுகளாக ஒற்றுமையுடன் இருப்பதற்கான தீர்வை எட்டுவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது. தற்போது இஸ்ரேல் வசமிருக்கும் சில பகுதிகள் கூட விவாதத்துக்கு உள்படுத்தக் கூடியது என்பதே அதிபரின் நிலைப்பாடாக உள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னெச்சரிக்கை: இதற்கிடையே, டிரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் முன்பு வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நடைபெறலாம் எனவும், சில நாட்டு அரசுகள் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்குப் பயணத் தடை விதிக்கலாம் எனவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
யூதர்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் ஆகிய மூன்று மதத்தவருக்குமே மிகவும் புனிதமான நகரான ஜேருசலேமை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளதை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்கவில்லை. ஜெருசலேம்தான் தனது தலைநகர் என்று இஸ்ரேல் கூறி வந்தாலும், பெரும்பாலான நாடுகள் தங்களது தூதரகங்களை டெல் அவிவ் நகரிலேயே அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பு: இதற்கிடையே, ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிக்கக் கூடாது என்று கத்தோலிக்க மதத் தலைவர் போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஐநா அமைப்பும், ஜெருசலேம் விவகாரத்தை இஸ்ரேலும், பாலஸ்தீனமும் மட்டுமே சுமுகமாகப் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய அந்த நகர் குறித்து பிற நாடுகள் எடுக்கும் எந்த முடிவும் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்தது.
அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மிகத் தவறான முடிவு இது என்று கூறியுள்ள துருக்கி அரசு, ஏற்கெனவே எரிந்து கொண்டிருக்கும் மேற்காசியப் பிரச்னையில் இந்த முடிவு எண்ணையை ஊற்றியது போலாகிவிடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
அதிபர் டிரம்ப்பின் இந்த முடிவுக்கு சீனாவும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com